இன்றைய இறைமொழி
திங்கள், 24 மார்ச் ’25
தவக்காலம் மூன்றாம் வாரம் – திங்கள்
2 அரசர்கள் 5:1-15. திருப்பாடல் 42. லூக்கா 4:24-30
எதிர்ப்பும் எதிர்த்தகைவும்
தவக்காலத்தின் முதல் இரண்டு வாரங்கள் நம் மனமாற்றத்துக்கான அழைப்பாக அமைகின்றன. மூன்றாவது வாரம் முதல் நம் கவனம் இயேசுவை நோக்கியும் அவருடைய பாடுகள் நோக்கியும் திரும்புகிறது. இயேசுவுக்கு சிலுவை அல்லது பாடுகள் அவருடைய பணிவாழ்வின் இறுதியில் நடந்த நிகழ்வு அல்ல. மாறாக, அவருடைய பிறப்பு முதல் சிலுவை அவருடைய நிழலாகத் தொடர்கிறது.
பிறந்த சில நாள்களிலேயே பெரிய ஏரோது அவரைக் கொல்லத் தேடுகிறார் (காண். மத் 2). இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அவருடைய சொந்த ஊர் மக்களால் நிராகரிக்கப்படுவதை லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். இயேசு நாசரேத்தூரில் உள்ள தொழுகைக்கூடத்தில் தம் பணியைத் தொடங்குகிறார். ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது’ (காண். எசா 61) என்னும் இறைவாக்கினர் எசாயாவின் சொற்களை வாசித்து, தம் அடையாளம் மற்றும் பணி எப்படி இருக்கும் என்பதை எடுத்துச் சொல்கிறார்.
அறிவித்த செய்தியைப் பார்ப்பதற்குப் பதிலாக அறிவித்தவரின் பின்புலம் பார்த்து இடறல்பட்டார்கள் இயேசுவின் சொந்த ஊர் மக்கள்.
‘நன்றாகப் பணி செய் மகனே!’ என்று உச்சி முகர்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக, ‘இவன் தச்சனின் மகன் அல்லவா!’ என்று ஐயமுற்றனர்.
‘கடவுளின் மனிதர்கள் அந்நியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள், சொந்த மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்’ என்னும் கருத்துருவை இயேசு இரண்டு எடுத்துக்காட்டுகளால் முன்மொழிகிறார்: ‘எலியாவை ஏற்றுக்கொண்ட சாரிபாத்துக் கைம்பெண்,’ ‘எலிசாவையும் இஸ்ரயேலின் கடவுளையும் ஏற்றுக்கொண்ட தொழுநோயாளர் நாமான்.’
அவர்களை முன்நிறுத்தி தங்களை அவமானப்படுத்தியதாக உணர்கிற நாசரேத்தூர் மக்கள் இயேசுவை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடுவதற்காக இழுத்துச் செல்கிறார்கள்.
‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (யோவா 1:11) என்று யோவான் இயேசுவைப் பற்றிச் சொல்லியது இங்கு நேரடியாக நடக்கிறது.
இயேசுவை அவருடைய ஊரார் எதிர்க்கக் காரணங்கள் எவை?
(அ) அவர் தன் வரையறையை மீறுவதாக உணர்ந்தார்கள். ‘ஊர் உனக்கு எதை வரையறுக்கிறதோ – தச்சனாக இருத்தல், வரி வாங்குபவனாக இருத்தல், கழுதை மேய்ப்பவராக இருத்தல் – அதைச் செய்! ஊர் வரையறையை மீறிச் செல்லாதே!’ என்று இயேசுவுக்கு மறைமுகமாகச் சொல்கிறார்கள் நாசரேத்து மக்கள்.
(ஆ) புறவினத்து மக்களை நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாக இயேசு முன்மொழிந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொண்டிருந்த இனவெறுப்பு இங்கே புலப்படுகிறது.
இயேசு இந்த எதிர்ப்பை எப்படி எடுத்துக்கொண்டார்?
‘அவர் அவர்கள் நடுவே நடந்துசென்று அங்கிருந்து போய்விட்டார்!’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா. தாம் யார் என்பதை அவர்களுக்கு நிரூபிக்கவில்லை இயேசு. வானிலிருந்து குரல் வரட்டும் என்று வேண்டவில்லை! வானிலிருந்து நெருப்பு விழுந்து ஊர் மக்களை அழிக்கட்டும்! என்று சபிக்கவில்லை.
மௌனமாக மறு இடம் செல்கிறார்.
இதுவே எதிர்ப்புக்கு நாம் தரும் பதிலிறுப்பு.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை மௌனமாக ஏற்றுக்கொண்டு வழிநடக்க வேண்டும்.
முதல் வாசகத்தில், தொழுநோயாளர் நாமான் நலம்பெறும் நிகழ்வை வாசிக்கிறோம். ஒரு சிறுமியின் சொல் கேட்டு இஸ்ரயேலின் நாட்டுக்குச் செல்கின்றார். எலிசாவின் சொற்களைக் கேட்டுத் தயங்கும் நாமான் தன் பணியாளரின் சொல் கேட்கிறார். நாமானின் தாழ்ச்சி, தயக்கம், எளிய உள்ளம் இறுதியில் நம்பிக்கைக்கு அவரை இட்டுச் செல்கிறது.
இயேசுவை நாம் இன்று எப்படி ஏற்றுக்கொள்கிறோம்?
நம் வாழ்வில் எதிர்ப்புகள் வரும்போது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம்?
எதிர்ப்பு (resistance) வரும்போது எதிர்த்தகைவோடு (resilience) அதை எதிர்கொள்வது நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: