• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

எதிர்வினை வேண்டாம்! இன்றைய இறைமொழி வியாழன், 28 நவம்பர் ’24.

Thursday, November 28, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 28 நவம்பர் ’24
பொதுக்காலம் 34-ஆம் வாரம், வியாழன்
திருவெளிப்பாடு 18:1-2, 21-23. 19:1-3, 9. திருப்பாடல் 100. லூக்கா 21:20-28

 

எதிர்வினை வேண்டாம்!

 

பல நேரங்களில், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகளை நமக்குப் பிடிப்பதில்லை. அவர்களும் அவையும் நமக்குச் சவால்களாக இருப்பதோடு நமக்கு நெருடலை ஏற்படுத்தி நம்மை அழிக்கவும் செய்கிறார்கள், செய்கின்றன. நமக்கு வெளியிலிருந்து வரும் இவர்களை, இவற்றை நம்மால் கட்டுப்படுத்த இயலாது என்றாலும், இவர்களுக்கு, இவற்றுக்கு நாம் எப்படி பதிலிறுக்கிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்த இயலும். எதிர்வினை குறைத்து நேர்முகமான பதிலிறுப்பு செய்ய நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

 

எருசலேமின் அழிவும், உரோமையின் (பாபிலோன்) அழிவும் நம்பிக்கையாளர்களை அச்சுறுத்துகிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாகவும் பொறுமை காப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாழ்வின் இக்கட்டான தருணங்களில் நம் அமைதியைத் தக்க வைத்துக்கொள்தல் நலம்.

 

முதல் வாசகச் சிந்தனை (திவெ 18:1-2, 21-23. 19:1-3, 9)

 

(அ) தீமை அழிப்பு: பாபிலோனின் (உரோமை) அழிவு கடவுள் கொண்டுவரும் உறுதியான தீர்ப்பை முன்மொழிகிறது. கடவுளுடைய நீதிக்கும் தூய்மைக்கும் எதிராகப் புறப்படும் அனைத்தும் அழிந்துபோகும். கடவுளுடைய நீதியோடு நம் வாழ்வை இணைத்துக்கொள்தல் வேண்டும்.

 

(ஆ) மகிழ்ச்சிக்கான அழைப்பு: கடவுளுடைய வெற்றி மாந்தருக்கு மகிழ்ச்சி தருகிறது. கடவுள் வெற்றி அளிப்பார் என்னும் எதிர்நோக்கு மனிதர்களுக்கு வலிமை தருகிறது.

 

(இ) ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைப்பு: விருந்து என்பது மகிழ்ச்சியின், அமைதியின், நிறைவின் அடையாளமாக உள்ளது. இறுதியில் அனைத்தும் கிறிஸ்துவில் ஒருங்கிணைக்கப்படும் என்னும் இறையியலும் இங்கே குறிப்பிடப்படுகிறது.

 

பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 100)

 

(அ) மகிழ்ச்சியான வழிபாடு: அனைத்துலகும் மகிழ்ச்சியோடு பாட வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் ஆசிரியர். வழிபாடு என்பது ஒரு கட்டாம் அல்ல, மாறாக, கடவுளுடைய நன்மைத்தனத்துக்கும் பிரமாணிக்கத்துக்குமான பதிலிறுப்பு.

 

(ஆ) கடவுளுடைய இறையாண்மை: ஆண்டவரைக் கடவுள், படைத்தவர், ஆயர் என ஏற்றுக்கொள்வது நம் பற்றுறுதியை வலுப்படுத்துகிறது.

 

(இ) நன்றியும் புகழும்: கடவுளுடைய திருமுன் நாம் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் வரும்போது வாழ்க்கை பற்றிய நேர்முகமான பார்வை கிடைக்கிறது.

 

நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 21:20-28)

 

(அ) நீதியின் அறிகுறிகள்: நம்மைச் சுற்றி நிகழும் அறிகுறிகளைக் கண்டு அவற்றுக்கேற்ப நாம் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.

 

(ஆ) துன்ப வேளையில் எதிர்நோக்கு: உடனடியாக நம் கண்முன் நிகழ்பவை நமக்குத் துன்பம் தருவனவாகத் தோன்றினாலும், எதிர்நோக்குடன் காத்திருக்கும்போது துன்பம் மறைகிறது.

 

(இ) மீட்புக்கான தயார்நிலை: தலைநிமிர்ந்து நிற்றல் என்பது தயார்நிலையை, விழிப்பை, வெற்றியைக் குறிக்கிறது.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ எதிர்வினை ஆற்றுவதில்லை. தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு உகந்தவாறு நேர்முகமாக பதிலிறுப்பு செய்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 260).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: