இன்றைய இறைமொழி
வெள்ளி, 31 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – வெள்ளி
எபிரேயர் 10:32-39. திருப்பாடல் 37. மாற்கு 4:26-34
எதுவும் செய்யாமலே!
இறையாட்சி பற்றிய இரண்டு சொல்லோவியங்களை முன்மொழிகிறார் இயேசு: ‘தானாக வளரும் விதை,’ ‘பெரிய மரமாக மாறும் கடுகு விதை’. இறையாட்சி பற்றி இச்சொல்லோவியங்கள் மொழிவது என்ன? (அ) இறையாட்சி படிப்படியாக வளரக் கூடியது. அதன் வளர்ச்சியை யாரும் தடுக்கவோ, பின்நோக்கித் திருப்பவோ முடியாது. நம் முயற்சிகள் அல்ல, மாறாக விதையின் ஆற்றலே அதைப் படிப்படியாக நகர்த்துகிறது. (ஆ) சிறிய அளவில் இருக்கிற விதை பெரிய அளவில் கனி கொடுக்கும். அது தன் முழு ஆற்றலை அடைகிறது.
மேற்காணும் இரண்டு சொல்லோவியங்களை நம் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்வோம்:
(அ) எதுவும் செய்யாமலேயே!
இன்றைய மேலாண்மையியல் உலகம் அனைத்தையும் மேலாண்மை செய்ய நம்மை வற்புறுத்துகிறது. ‘ஒவ்வொன்றையும் அளவிட்டு அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’ எனக் கற்பிக்கிறது. ஒருவரின் உற்பத்தித்திறன் மேம்பாட்டையே மேலாண்மையியல் வலியுறுத்துகிறது. ஆனால், வாழ்வின் பல நிகழ்வுகள் தாமாகவே நடக்கின்றன. நம் பிறப்பை நாம் திட்டமிடவில்லை. நம் இறப்பையும் நம்மால் திட்டமிட இயலாது. வாழ்வின் இனிமையான பொழுதுகள் பல தாமாக நடந்தேறியவை. குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றவர்களின் உற்பத்திக்கு எந்தவொரு பங்களிப்பும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் அவர்களை ஒதுக்கிவிட இயலுமா? வாழ்வின் ‘இயல்புநிலையை’ நாம் பல நேரங்களில் கட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறோம். ஒரு மரத்திற்கு வரையறையை நாம் நிலத்துக்கு மேலே வைக்கலாம். ஆனால், நிலத்திற்குள் அது வேர்கள் பரப்புவதை நம்மால் தடுக்க இயலாது.
ஆக, வாழ்வின் இயல்புநிலையை, விளையாட்டுநிலையை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். ஒரு நாளின் நிகழ்வுகளை, நேரத்தை நாம் திட்டமிட்டு வாழ்ந்தாலும், தாமாக நேர்கிற நிகழ்வுகளை நாம் கட்டுக்குள் கொண்டுவர இயலாது.
நாம் எதுவும் செய்யாமலேயே நாம் இதயம் துடிக்கிறது. நாம் எதுவும் செய்யாமலேயே நம் மூளை நம் உடலின் இயக்கத்தை ஒருங்கிணைக்கிறது. நாம் எதுவும் செய்யாமலேயே உடல் தன் வேலையைச் செய்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும் நாம் எதுவும் செய்யாமலேயே நடந்தேறுகிறது.
சற்றே தள்ளிநின்று நாம் அதைக் கண்டு மகிழ்ந்து, அது போகிற போக்கில் நகர்வது நலம்.
(ஆ) முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல்
‘ஒரு பூச்செடி தன் முழுமையை அடைந்து மறைகிறது. இதே போல ஒவ்வொரு மனிதரும் தன் முழுமையை அடைதல் வேண்டும்’ என்கிறார் டாவின்சி. கடுகு விதை வலுவற்றதாக, சிறியதாக, யாரும் கண்டுகொள்ளாததாக இருக்கிறது. ஆனால், அதனுள்ளே இருக்கும் ஆற்றல் அதை ஒவ்வொரு படியாக நகர்த்துகிறது. விளைவாக, பெரிய மரமாகி நிழல் தருகிறது, பறவைகளுக்கும் அடைக்கலம் தருகிறது.
நாம் நம் முழுமையான ஆற்றலைப் பயன்படுத்துகிறோமா? பல நேரங்களில் நம் வரையறை எண்ணங்களால் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். ‘ஆர்வமும் ஆற்றலும் இணைந்தே செல்கின்றன’ – நம் வாழ்வின் ஆர்வத்தை ஏதாவது ஒரு வகையில் நாமும் மற்றவர்களும் மகிழ்ந்திருக்கும் வகையில், நம்மால் இந்த உலகில் பயன் ஏற்படும் வகையில் தகவமைத்துக்கொண்டால் அதற்கேற்ப ஆற்றல் பெருகும். நம் முழுமையான ஆற்றலை நமக்கு உள்ளிருக்கும் எண்ணமோ, நமக்கு வெளியிலிருக்கும் சூழலோ கட்டுப்படுத்த வேண்டாம்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்!’ எனத் தன் குழுமத்தைப் பாராட்டுகிறார் ஆசிரியர். விதையின் வளர்ச்சியும் போராட்டம் நிறைந்ததே. மனஉறுதியும் விடாமுயற்சியும் நம் வளர்ச்சிக்குத் துணைநிற்கிறது.
‘நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்’ எனவும் மொழிகிறார் ஆசிரியர். நம்பிக்கை என்பதே நாம் கொண்டிருக்கும் உள்ளார்ந்த ஆற்றல். இந்த ஆற்றல் நமக்கு வாழ்வு தருகிறது. இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதன் வழியாக, நாம் நிழல்தரும் அடைக்கலம் தரும் மரமாக வளர்கிறோம்.
‘ஆண்டவரிலேயே மகிழ்ச்சிகொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்’ (திபா 37) என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல். ஆண்டவரில் மகிழ்வே நம் வலிமையும் ஆற்றலும் ஆகும் (நெகே 8:10).
புனித ஜான் போஸ்கோ
இன்று நாம் நினைவுகூர்கிற புனித ஜான் போஸ்கோ இளவல்களின் வாழ்வு முழு ஆற்றலைக் காண வேண்டும் என விரும்பினார். தானும் தன் வாழ்வின் முழு ஆற்றலைக் கண்டார். சலேசிய துறவற நிறுவனத்தை ஏற்படுத்தினார். அச்சபையின் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகளை வாழ்த்துவோம். அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: