இன்றைய இறைமொழி
புதன், 4 டிசம்பர் 2024
திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன்
எசாயா 25:6-10. திருப்பாடல் 23. மத்தேயு 15:29-37
எனக்கொரு விருந்து!
புலம்பெயர்ந்தோர் மற்றும் அடைக்கலம்நாடுவோர் தங்கியிருந்த மையத்தில் மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்காக மருந்துகள் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர்களோடு இளவல் ஒருத்தியும் நின்றிருந்தாள். ‘பாப்பா, உனக்கு என்ன வேணும்? உனக்கு என்ன செய்யுது?’ எனக் கேட்டார் மருத்துவர். ‘பசிக்காமல் இருப்பதற்கு ஏதாச்சும் மருந்து இருந்தா கொடுங்க!’ என்ற இளவல், ‘இந்த மையத்தில் சில நேரம் சாப்பாடு கொடுக்குறாங்க, பல நேரங்களில் சாப்பாடு இல்லை. அல்லது போதுமானதாக இல்லை. பசியால் தூக்கம் வருவதில்லை. எங்கும் அழுகுரல்தான் கேட்கிறது’ என்று தொடர்ந்தாள்.
எல்லா உயிர்களோடும் நாம் பகிர்ந்துகொள்கிற ஓர் உணர்வு பசி. பசி என்பது அறிவுப்பசி, உறவுப் பசி என்று பல உருவகப் பொருளில் பேசப்பட்டாலும், உணவுப் பசியைப் போலக் கொடுமையானது எதுவும் இல்லை. சில நேரங்களில் பசியை நாம் விரும்பி ஏற்கிறோம் – நோன்பு இருக்கும்போது, மருத்துவச் சிகிச்சையின்போது! சில நேரங்களில் பசியைப் பொறுத்துக்கொள்கிறோம் – பயணம் செய்யும்போது! ‘அரசன் தொடங்கி ஆண்டி வரை அனைவருக்கும் உச்சிப் பொழுதில் பசிக்கும்’ என்கிறார் பட்டினத்தார். கதிரவன் உச்சியில் இருக்கும்போது எழும் பசியும், நிலவு உச்சியில் இருக்கும்போது வரும் தூக்கமும் அனைவருக்கும் பொதுவானது. பசியும் தூக்கமும் எந்த பேதமும் பாராட்டுவதில்லை. பசிக்கும்போது நமக்குத் தேவையான உணவுக்கும், தூங்கும்போது நமக்குத் தேவையான உறைவிடத்துக்கு மட்டுமே நாம் உழைக்கிறோம். மற்ற அனைத்தும் – இசை, கலை, சமயம் அல்லது மதம், இறையியல், மெய்யியல், தத்துவம், சட்டம் – ஆடம்பரங்களே!
‘படைகளின் ஆண்டவர் இந்த மலையில் – சீயோன் – அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்!’ என இறைவாக்கு உரைக்கிறார் எசாயா (முதல் வாசகம்). இந்த விருந்தில் அனைத்தும் நிறைவாக இருக்கிறது. இந்த விருந்துக்கு வருபவர்கள் கண்ணிலும் உள்ளத்திலும் சோகம் இருக்காது. இந்த விருந்து அனைவருக்குமானதாக இருக்கும்.
‘என் எதிரிகளின் கண்முன் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது’ எனப் பாடுகிறார் தாவீது (திபா 23, பதிலுரைப்பாடல்). போர்க்காலத்தில் அரசர்கள் உணவுக்காக ஏங்கிக்கிடப்பர். தன் பாசறைக்குத் தேவையான உணவு இல்லை என்றால் படை வலுவிழந்துவிடும் என்று கலக்கமுடன் இருப்பர். ஆனால், அப்படிப்பட்ட இக்கட்டான வேளையில் ஆண்டவராகிய கடவுள் ஒரு விருந்தைக் கொடையாகப் படைக்கிறார். இறைவனுடைய திருமுன்னிலையில் நிறைவு மட்டுமே இருக்கிறது.
‘இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட நான் விரும்பவில்லை’ என்று தம் சீடர்களிடம் சொல்கிற இயேசு மக்கள் கூட்டத்துக்கு உணவு தருகிறார். பசி என்னும் உணர்வு மறைந்து நிறைவு, மிச்சம் என நிலை மாறுகிறது.
ஆண்டவராகிய கடவுள் மனிதர்களின் பசியை ஆற்றுவதோடல்லாமல், நிறைவும் மகிழ்ச்சியும் தருகிறார்.
கிறிஸ்து பிறப்பு நிகழ்வு ‘பெத்லகேம்’ (‘அப்பத்தின் வீடு’) ஊரில் நடந்தேறுகிறது. பிறந்த குழந்தையை அவருடைய பெற்றோர் ‘தீவனத் தொட்டியில்’ கிடத்துகிறார்கள். ஆக, எசாயா உரைத்த இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. மனிதர்கள் உண்ணக்கூடிய உணவாக அவர் பிறக்கிறார்.
இயேசு சோதிக்கப்படும் நிகழ்வில், கற்களை அப்பங்களாக மாற்றாத இயேசு, ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் பலுகச் செய்து பரிமாறுகிறார். பாலைநிலத்தில் தாமே பசி ஏற்ற இயேசு, இங்கே மற்றவர்களின் பசி போக்குகிறார்.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
(அ) ‘பசித்திரு’ (தனித்திரு-விழித்திரு) என்பது வள்ளலார் வழங்கும் அறிவுரை. பசித்திருத்தலில் பொறுமை அல்லது காத்திருத்தல் அடங்கியுள்ளது. உள்ளே எழும் வேகத்தை, நெருப்பை அணைக்கும் பக்குவம் பிறக்கிறது. பசி என்னும் உணர்வை நாம் உள்ளவாறு ஏற்றுக்கொள்வோம்.
(ஆ) பசித்திருப்போருக்கு உணவு தரும்போது நாம் கடவுளாகவே மாறுகிறோம். ஏனெனில், பசித்திருப்பவர் தன் உயிரைத் தக்கவைக்க நாம் உதவி செய்கிறோம். நாம் உண்ணும் வேளையில் நமக்கு அருகில் இருப்பவர் பசியாக இருக்கக் கண்டால் அவருடைய பசி போக்குவோம்.
(இ) உணவே கொடையாக! ‘எந்த ஒரு விருந்தும் இலவசம் கிடையாது!’ என்பது ஆங்கிலப் பழமொழி. நாம் ஒருவர் மற்றவருக்கு வழங்கும் உணவு அல்லது விருந்தில் ஏதோ ஓர் எதிர்பார்ப்பும் கைம்மாறும் அடங்கியுள்ளது. ஆனால், கடவுள் எந்த கைம்மாற்றையும் எதிர்பார்ப்பதில்லை. நம் வாழ்வை நாம் மற்றவர்களுக்குக் கொடையாக வழங்க முயற்சி செய்வோம். நம் வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும் என்னும் நீதி ஒரு பக்கம் இருந்தாலும், நம் வேலைக்கு யாரும் ஈடு செய்ய முடியாது என்னும் நிலைக்கு நம் மனநிலை உயரும்போது நாம் அனைத்தையும் கொடையாக வழங்கத் தொடங்குவோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ பசித்திருப்பதில் மகிழ்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 264).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: