• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

என்னைப் பின்பற்றி வா! இன்றைய இறைமொழி. சனி, 18 ஜனவரி ’25.

Saturday, January 18, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 18 ஜனவரி ’25
பொதுக்காலம் முதல் வாரம் – சனி
எபிரேயர் 4:12-16. திருப்பாடல் 19. மாற்கு 2:13-17

 

என்னைப் பின்பற்றி வா!

 

மாந்தர்கள் கடவுளோடு கைகோர்க்குமாறு விடுக்கப்படும் அழைப்பு நிகழ்வுகளில் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே சில கவனிக்கத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 

பழைய ஏற்பாட்டில், (அ) ஒரு பிரச்சினை அல்லது தேவை இருக்கிறது. (ஆ) அந்தப் பிரச்சினை அல்லது தேவையைத் தீர்க்க கடவுள் ஒருவரை அழைக்கிறார். (இ) அழைக்கப்பட்டவர் தயக்கம் காட்டுகிறார். (ஈ) கடவுள் அவருக்கு ஓர் அறிகுறி தருகிறார். (உ) அழைக்கப்பட்டவர் உடனே ஆண்டவருடைய பணி ஏற்கிறார் அல்லது அவரைப் பின்பற்றுகிறார். எடுத்துக்காட்டாக, மோசே (விப 3), கிதியோன் (நீத 6) ஆகியோரின் அழைப்பு நிகழ்வுகள்.

 

ஆனால், புதிய ஏற்பாட்டில், (அ) மாந்தர்கள் தங்கள் அன்றாடச் செயல்பாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். (ஆ) யாரும் எதிர்பாராத நேரத்தில் இயேசு அங்கே வருகிறார். (இ) தம்மைப் பின்பற்றுமாறு இயேசு அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். (ஈ) இயேசு மட்டுமே உரையாடுகிறார், மற்றவர் அமைதி காக்கிறார். (உ) அழைக்கப்பட்டவர் அனைத்தையும் அனைவரையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். எடுத்துக்காட்டாக, முதற்சீடர் அழைப்பு (மாற் 1), லேவியின் அழைப்பு (இன்றைய நற்செய்தி வாசகம்).

 

இன்று அருள்பணி மற்றும் துறவற வாழ்வுக்கான இறையழைத்தலில் இன்னும் பழைய ஏற்பாட்டு அழைத்தல் முறைதான் பின்பற்றப்படுகிறது. ஆகையால்தான், இன்று இறையழைத்தல் வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஆண்டவர் இயேசு தங்கள் வாழ்வில் நுழைவதைக் கண்டுகொள்வதற்கான பயிற்சி இன்றைய இளவல்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் அவருடைய குரல் கேட்டு தகுந்த பதில் தருவார்கள்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவியை (மத்தேயு) அழைக்கிறார் இயேசு. தன் பணியில் மும்முரமாக இருந்த லேவி, ‘என்னைப் பின்பற்றி வா!’ என்னும் குரல் கேட்டவுடன் இயேசுவைப் பின்தொடர்கிறார். ‘உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்!’ என்று இயேசு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. கட்டளை மட்டுமே இடுகிறார். இயேசுவின் கட்டளைக்காகவே காத்திருந்ததுபோல உடனே புறப்படுகிறார் லேவி.

 

லேவியின் இந்தத் தயார்நிலை நமக்கு ஆச்சர்யம் தருகிறது. அங்கிருந்த பணம், காத்திருப்போர், மேலதிகாரிகள் என யாரையும் எதையும் பொருட்படுத்தவில்லை மத்தேயு. அந்நொடியில் தன் வாழ்வின் நோக்கம் அறிகிறார். கணக்கு வழக்குகளை எழுதிக்கொண்டிருந்தவர் நற்செய்தியை எழுதும் அளவுக்கு உயர்கிறார். காலத்தைக் கடந்தவராகிறார். நம் வாழ்வின் நோக்கமும் கடவுளின் அழைப்பும் இணையும் புள்ளியில் நம் வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.

 

அதே நாள் மாலையில், தன் இல்லத்தில் இயேசுவுக்கு விருந்தளிக்கிறார் இயேசு. ‘நான் இவ்வளவுதான்!’ என்று இயேசுவுக்குத் திறந்துகாட்டுகிறார் மத்தேயு. ‘நான் உங்களுக்காக!’ என்று தம் பணி வாழ்வின் நோக்கம் அறிவிக்கிறார் இயேசு.

 

கடவுளின் வார்த்தைக்கு உடனடியாகப் பதில் தருகிறார் மத்தேயு.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘கடவுளின் வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் மிக்கது’ எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். கடவுளின் வார்த்தை இன்றும் விவிலியத்தில், அருளடையாளங்களில், உள்ளுணர்வில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உயிருள்ள அந்த வார்த்தை நம்மை ஆட்கொள்கிறது, நம் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது.

 

அருள்நிறைந்த இறை அரியணையை நாம் இயேசு வழியாக அணுகிச் செல்கிறோம். மற்றவர்கள் லேவியை, ‘பாவி’ எனத் தீர்ப்பிட்டாலும், அவருக்குத் தம் அருளைக் காட்டுகிறார் இயேசு.

 

மூன்று கேள்விகள்:

 

(அ) ‘நகர்ந்துகொண்டே இரு!’ என்று வாழ்க்கை நமக்கு விடுக்கிறது. நம் பதிலிறுப்பு என்ன?

 

(ஆ) ‘இவன் இப்படித்தான். அவள் அப்படித்தான்!’ என்று நம் உள்ளம் தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறது – நாம் விருந்தில் அமர்ந்திருந்தாலும். தீர்ப்பிடும் மனம் விடுத்து அடுத்தவர்மேல் அருள்கூர்ந்து வாழ நான் இயலாதது ஏன்?

 

(இ) இறைவனின் குரலை நான் கேட்க இயலாதவாறு எனக்குத் தொந்தரவாக இருக்கும் இரைச்சல்கள் எவை?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: