இன்றைய இறைமொழி
வியாழன், 27 மார்ச் ’25
தவக்காலம் மூன்றாம் வாரம் – வியாழன்
எரேமியா 7:23-28. லூக்கா 11:14-23
என்னோடு இராதவர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இயேசுவின் இந்த வல்ல செயல் மூன்று எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றது: (அ) ஒரு குழுவினர் இயேசுவின் இச்செயலை வியந்து பார்க்கின்றனர். (ஆ) இன்னொரு குழுவினர் அவர் பேய்களின் தலைவரைக் கொண்டு பேய் ஓட்டுவதாகக் குற்றம் சுமத்துகின்றனர். இயேசுவும் பேய் பிடித்தவர் அல்லது பேய்களுக்கு நெருக்கமானவர் என்று மறைமுகமாகச் சொல்கின்றனர். (இ) மேலும் ஒரு குழுவினர் அவரைச் சோதிக்கும் நோக்குடன் அடையாளம் ஒன்று கேட்கின்றனர்.
இரண்டாம் குழுவினருக்கு இயேசு நேரிடையாகப் பதில் தருகின்றார்.
ஓர் அரசு தனக்கு எதிராகப் பிளவுபட்டால் அது நிலைத்து நிற்காது என்று சொல்வதன் வழியாக, ஒரு பேய் இன்னொரு பேய்க்கு எதிராக நிற்காது என்று சொல்கின்றார். மேலும், பேய் வலியது என்றால், அதனிலும் வலியது ஒன்று வரும்போது அது இல்லாமல் போய்விடும் என்றும் சொல்கின்றார்.
தன்னோடு இராதவர் தனக்கு எதிராக இருக்கிறார் என்பது இயேசுவின் இறுதி வார்த்தை.
இந்த வார்த்தை நமக்குச் சொல்வது என்ன?
அரைமனது பிரமாணிக்கம் ஆபத்தானது. ஒன்று, நாம் முழுவதும் இயேசுவோடு இருக்கிறோம். அல்லது முழுவதும் அவருக்கு எதிராக இருக்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 7:23-28), இறைவாக்கினர் எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்களைக் கடிந்துகொள்கின்றார் ஆண்டவராகிய கடவுள். அவர்கள் தங்களுடைய கடின மனத்தால் இறைவாக்கினர்களையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். மேலும், முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக, தங்களுடைய பிடிவாத குணத்தால் பின்னோக்கிச் செல்கின்றனர்.
இறுதியாக, ‘உண்மை அழிந்து போயிற்று’ என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.
சிந்தனைக்கு
(அ) இயேசு என் வாழ்வில் குறுக்கீடு செய்து வல்ல செயல் நிகழ்த்தும்போது எனது எதிர்வினை எப்படி உள்ளது? அவரைக் கண்டு நான் வியக்கிறேனா? அல்லது முணுமுணுக்கிறேனா? அல்லது அடையாளம் கேட்டுச் சோதிக்கிறேனா?
(ஆ) எனக்கு எதிராக என் வாழ்வில் எழுந்து நிற்கும் காரணிகள் எவை? நான் இன்னொருவரின் கண்கள் முன் விழுகின்ற வீழ்ச்சியைவிடக் கொடியது என் கண்முன்னே நான் விழுவது. எனக்கும் எனக்குமான இணக்கம் எப்படி உள்ளது?
(இ) என் வாழ்வில் நான் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக, பின்னோக்கிச் செல்லும் தருணங்கள் எவை?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: