இன்றைய இறைமொழி
வியாழன், 3 அக்டோபர் ’24
பொதுக்காலம் 26-ஆம் வாரம், வியாழன்
யோபு 19:21-27. லூக்கா 10:1-12
என் மீட்பர் வாழ்கிறார்!
‘என் மீட்பர் வாழ்கிறார்’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார் யோபு (முதல் வாசகம்). ‘மீட்பவர்’ என்பவர் ‘ஈடு செய்பவர்’ (காண். ரூத் 4). ‘மீட்பர் வாழ்கிறார்’ என்னும் செய்தியை அறிவிக்குமாறு தன் சீடர்களை அனுப்புகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்).
(அ) என் மீட்பர் வாழ்கிறார் என்னும் நம்பிக்கை
ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் யோபு தன் எதிர்நோக்கை விட்டுவிடவில்லை. ‘என் மீட்பர் வாழ்கிறார்!’ என்று உறுதிபட அறிக்கையிடுகிறார். தொடங்குகிற அனைத்தும் நன்மையாகவே முடியவேண்டும். நன்மையாக முடியவில்லை என்றால் இன்னும் முடியவில்லை என்னும் நிலையில், அனைத்தையும் நலமாக முடித்து வைக்கக்கூடியவர் கடவுள் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார்.
யோபுவின் இந்த எதிர்நோக்கே துன்பங்களைத் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலை அவருக்குத் தருகிறது. வாழ்கிற மீட்பர்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது.
(ஆ) என் மீட்பர் வாழ்கிறார் என்னும் அறிக்கை
இன்றைய நற்செய்தி வாசகத்தில், எழுபத்திரண்டு பேரை பணிக்கு அனுப்புகிறார் இயேசு. அமைதி, நலம் ஏற்படுத்தவும், கடவுளின் ஆட்சி அருகில் வந்துவிட்டது என்பதை அறிவிக்கவும் அவர்களை அனுப்புகிறார். அவர்கள் அறிவிக்கிற தூதர்கள் மட்டுமல்ல, மாறாக, வாழ்கின்ற கடவுளின் சாட்சிகள். தங்கள் வாழ்க்கையால் தங்கள் நம்பிக்கைக்கு அவர்கள் சான்றுபகர வேண்டும்.
‘என் மீட்பர் வாழ்கிறார்’ என்னும் செய்தியை நாமும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இறப்பும் இருளும் சூழ்ந்துள்ள இந்த உலகம் இச்செய்;தியால் மகிழ்ச்சி அடையும்.
(இ) கடவுளின் பணி அவசரம்
சீடர்கள் அறிவிக்கிற செய்தி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், அவர்கள் எதிர்க்கப்பட்டாலும், நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்பட வேண்டும். நற்செய்தி அறிவித்தல் என்பது சீடரின் தனிப்பட்ட விருப்பத் தெரிவு அல்ல, மாறாக, அவர்களுடைய கடமை ஆகும்.
கடவுள்தாமே நம் வழியாகச் செயலாற்றுகிறார். நாம் கடவுளுடைய கருவிகள்.
நிற்க.
கடவுளின் உடனிருத்தலைத் தங்கள் வாழ்வில் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 215)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: