இன்றைய இறைமொழி
சனி, 14 டிசம்பர் 2024
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – சனி
சீராக்கின் ஞானம் 48:1-4, 9-11. திருப்பாடல் 80. மத்தேயு 17:10-13
எலியா வந்துவிட்டார்!
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரம் நிறைவுக்கு வருகிற வேளையில் மெசியா வருகையை ஒட்டிய நிகழ்வுகள் வாசகங்களாக நமக்குத் தரப்பட்டுள்ளன. மெசியா வருவதற்கு முன்னர் இறைவாக்கினர் எலியா மீண்டும் வருவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. இறைவாக்கினர் எலியா இஸ்ரயேலின் பெரிய இறைவாக்கினர். அவருடைய இறைவாக்குப் பணியின் மேன்மை இன்றைய முதல் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
‘எலியா’ என்றால் ‘ஆண்டவரே (‘யாவே’) என் கடவுள்’ என்பது பொருள் ஆகும். ‘பாகாலும் எங்கள் கடவுள்’ என்று எலியாவின் சமகாலத்தவர் சொல்லிக்கொண்டிருக்க, ‘ஆண்டவரே என் கடவுள்’ என்று தன் பெயராலும் செயல்களாலும் அறிவித்தவர் இறைவாக்கினர் எலியா.
ஆண்டவராகிய கடவுளை மட்டுமே பற்றிக்கொள்வதற்கு நம்மை அழைக்கிறார் எலியா.
‘தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புகிறவர் எலியா’ என்று எழுதுகிறார் சீராக். இதே சொற்களைக் கையாளுகிறார் இறைவாக்கினர் மலாக்கி (4:6). மலாக்கியா முன்மொழியும் நபர் திருமுழுக்கு யோவான் என்பதே திருஅவைத் தந்தையர்களின் புரிதல் ஆகும்.
தந்தைக்கு அடுத்த தலைமுறையில் வருபவர் மகன். தன் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் திரும்பிப் பார்க்கும் அவசியம் மகனுக்கு இருக்குமே தவிர, தந்தைக்கு இருக்காது. தங்கள் வாழ்வு முடிந்துவிட்டதாக நினைக்கிற தந்தையர் தங்களுக்குப் பின்னர் வருகிற மகனுடைய தலைமுறையை நோக்கித் திரும்புவர்.
இயேசு என்னும் மகனை நோக்கி அவருக்கு முந்தைய தலைமுறையினரை (தந்தையர்களை) திருப்பியவர் திருமுழுக்கு யோவான்.
‘எலியா வந்துவிட்டார்’ என்று அறிவிக்கிறார் இயேசு.
மகனை நோக்கி உள்ளத்தைத் திருப்பத் தயங்கினார்கள் இயேசுவின் சமகாலத்தவர்கள்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு மூன்று பாடங்களை வழங்குகிறது:
(அ) தனி ஆளாக உண்மையைப் பற்றிக்கொள்வது. உண்மையைப் பற்றிக்கொள்பவர்கள் தனித்து விடப்படுபவார்கள் என்னும் வாக்குக்கு நல்ல எடுத்துக்காட்டு எலியா. தனித்து விடப்பட்டாலும் தன் அர்ப்பணத்தில் உறுதியாக இருக்கிறார் எலியா.
(ஆ) சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள நெருக்கம். எலியாவின் சொற்களுக்கும் செயற்களுக்கும் இடைவெளி இல்லை.
(இ) நம் உள்ளங்கள் இயேசுவை நோக்கித் திரும்புவதற்குத் தடையாக இருக்கிற கவனச் சிதறல்களைக் களையக் கற்றுக்கொள்வோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளை உறுதியாகப் பற்றிக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 272).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: