இன்றைய இறைமொழி
திங்கள், 3 மார்ச் ’25
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – திங்கள்
சீராக்கின் ஞானம் 17:20-29. திருப்பாடல் 32. மாற்கு 10:17-27
ஒன்று குறைபடுகிறது!
இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். தன் சமகாலத்து இளவல்களின் விருப்பத்தைவிட மேன்மையானதாக இருக்கிறது இவருடைய தேடல். நிலைவாழ்வு பற்றிய தேடலோடு இயேசுவிடம் வருகிறார். நன்மையானதைத் தேடுகிறார். சரியான நபரிடம் விடை தேடி வருகிறார். ஆனால், விடை தெரிந்தவுடன் பின்வாங்குகிறார். பாதி வழி வந்தவர் மீதி வழி செல்லத் தயங்குகிறார்.
இளம் வயதுமுதல் சட்டங்களைப் பின்பற்றி வந்தவர் இளவல். அவரிடம் இயேசு, ‘நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்று கூறுகிறார்.
இயேசுவின் சொற்களில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன:
(அ) திருச்சட்டங்களும் அவற்றைப் பின்பற்றுகிற நம் அர்ப்பணமும் பாதிவழி உடன்வருமே தவிர, மீதிவழிப் பயணத்தில் அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.
(ஆ) செல்வம் என்பது சீடத்துவத்துக்குத் தடையாக இருக்கிறது. ஏனெனில், செல்வம் தன்நிறைவை நமக்கு வழங்குகிறது. கடவுளும் மற்றவர்களும் நமக்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை நம்மில் விதைக்கிறது.
(இ) ஏழைகளுக்குக் கனிவு காட்டுதல் விண்ணகத்தில் செல்வராக மாறுவதற்கு வழியாக இருக்கிறது. ஏழையவருக்கு உதவி செய்தல் பற்றிய பார்வை நம் தனிநபர் சார்ந்தது. சிலர் இதை ஆதரிப்பர். சிலர் இதை எதிர்ப்பர். ஏழைகள் எல்லாம் சோம்பேறிகள் என்றும், அவர்களுக்கு உதவி செய்வது சோம்பலை ஊக்குவிப்பதற்குச் சமம் என்று சொல்வர் முதலாளித்துவ அல்லது வணிக எண்ணம் கொண்டவர்கள்.
‘உமக்கு உள்ளவற்றை விற்று என்னிடம் கொடு!’ என்று இயேசு ஒருவேளை கேட்டிருந்தால் அந்த இளவல் கொடுத்திருப்பாரோ? என்ற எண்ணம் எனக்கு வருவதுண்டு. ஏனெனில், இன்று நம் மக்களிடம், ‘கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுங்கள்!’ என்றால் வேகமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் கல்வி, திருமண உதவித் திட்டம் என்று ஏதாவது ஏழ்மை ஒழிப்புக்காகத் திட்டங்களை முன்மொழிந்தால் அவர்கள் உதவிக்கரம் நீட்டுவதில்லை. பணக்காரர்கள் தங்களைவிடப் பெரிய கடவுள் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்களே தவிர, தங்களைவிடச் சிறிய ஏழைகள் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவதில்லை. ஏழைகள் பணக்காரர்களாக மாற வேண்டும் எனக் கடவுள் விரும்பினாலும் பணக்காரர்கள் விரும்புவதில்லை.
ஏழைகளுக்கு உதவத் தயாராக இருக்கிற சிலரையும் ‘யூதாசு’ என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள் பணக்காரர்கள். ஏனெனில், யூதாசு மட்டும்தான் ரொம்ப ப்ராக்டிகலாக யோசித்தார். நறுமணத் தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம் என்று கூறினார்.
ஏழைகளுக்கு உதவுதல் என்பது ஏழ்மை போலவே என்றும் புரிந்துகொள்ள இயலாத புதிர்.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) இளவலின் தேடலும் கேள்வியும்
தனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்தவராக இருந்தார் அந்த இளவல். இது பெரிய விடயம். ஏனெனில், நமக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவு பல நேரங்களில் நமக்கு இருப்பதில்லை. ‘இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்’ என்று இருமனதுள்ளவர்களாகவே நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.
(ஆ) சட்டங்கள் நிறைவேற்றுவதில் அர்ப்பணம்
பாதி வழிக்கான முயற்சியை இளவல் செய்கிறார். அதாவது, நிலைவாழ்வு என்பதை வெறும் விருப்பம் என்று நிறுத்திக்கொள்ளாமல் அதற்கான செயல்பாடுகளில் இறங்குகிறார் இளவல். நம் விருப்பங்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே வாழ்வின் அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்துகின்றன.
(இ) இயேசுவுக்கான என் பதிலிறுப்பு என்ன?
‘இளவல் இயேசுவைப் பின்பற்றவில்லை’ என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், இயேசு என்னிடம் இதே கட்டளை கொடுத்தால் என் பதிலிறுப்பு என்னவாக இருக்கும். பெரிய அந்தோனியார் இந்தக் கட்டளை தனக்கே கொடுக்கப்பட்டதாக நினைத்து, உடனடியாக அனைத்தையம் விற்றுவிட்டு பாலைநிலத்துக்குப் பயணமானார். அவர் கொண்டிருந்த துணிவு நம்மிடம் இல்லை. ‘என்னால் முடியாது!’ என்று வெளிப்படையாகச் சொல்லும் இளவலின் துணிவும் நம்மிடம் இல்லை. பாதி மனம் செல்வம், பாதி மனம் கடவுள் என்ற இழுபறி நிலை தொடர்கிறது.
கடவுளைப் பற்றிக்கொள்தல் கடவுளால்தான் நிகழும், மனிதரால் இயலாது என்று மிக அழகாகச் சொல்கிறார் இயேசு.
நம் பற்றுகளை அகற்றுகிற கடவுளின் பாதங்களைப் பற்றிக்கொள்வதற்கு அவருடைய அருளையே நாடுவோம். செல்வம் தருகிற தன்நிறைவை விடுத்து, கடவுள் தருகிற நிறைவையும் நிலைத்தன்மையையும் நோக்கி நம் இதயங்களைத் திருப்புவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘தர்மம் செய்தலின் மேன்மை’ பற்றிப் பேசுகிற பென் சீரா, தர்மம் செய்கிறவருக்குக் கடவுள் கைம்மாறு செய்கிறார் என்கிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: