இன்றைய இறைமொழி
ஞாயிறு, 12 ஜனவரி ’25
ஆண்டவரின் திருமுழுக்கு விழா
எசாயா 40:1-5, 9-11. தீத்து 2:11-14, 3:4-7. லூக்கா 3:15-16, 21-22
ஒரு குரல் ஒலித்தது!
இன்று இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:
(அ) இறைஅனுபவம்: நம் வாழ்வின் அனுபவங்கள் சில நம் அடித்தள அனுபவங்களாக மாறுகின்றன. அதாவது, நம் வாழ்வை முழுமையாகப் புரட்டிப்போடுகிற அனுபவங்களே அடித்தள அனுபவங்கள். எரியும் முட்புதரில் மோசே பெற்ற அனுபவம், எருசலேம் கோவிலில் எசாயா பெற்ற அனுபவம், திருத்தூதர்கள் மேலறையில் பெற்ற தூய ஆவியார் அனுபவம், பவுல் தமஸ்கு வழியில் பெற்ற அனுபவம் ஆகிய அனைத்தும் தொடர்புடைய மாந்தர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் அவருக்கு அடித்தள அனுபவமாக இருக்கிறது. தூய ஆவியாரின் காணக்கூடிய உடனிருத்தலையும் தந்தையின் குரல் வழி உடனிருத்தலையும் இயேசு இங்கே அனுபவிக்கிறார். ‘என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்னும் தந்தையின் சொற்கள் அவருக்கு தொடர்ந்து அவருடைய பணி வாழ்வு முழுவதும் அவருக்கு ஆற்றல் தருகின்றன.
(ஆ) இறைவெளிப்பாடு: இறைவெளிப்பாடு நான்கு தளங்களில் நடக்கிறது: பெத்லகேமில் இடையர்களுக்கு, குடிலில் கீழ்த்திசை ஞானியர்களுக்கு, எருசலேம் ஆலயத்தில் சிமியோன் மற்றும் அன்னாவுக்கு, இன்று திருமுழுக்கு நிகழ்வில் உலக மக்கள் அனைவருக்கும். இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு அவர் யார் என்பதை மற்றவர்களுக்குக் கடவுள் வெளிப்படுத்தும் இறைவெளிப்பாட்டு நிகழ்வாக அமைகிறது. இறைவெளிப்பாடு பெறுகிற அனைவரும் அந்த வெளிப்பாட்டுக்கு ஏற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
(இ) இறைப்பணி: இயேசு தம் பணிவாழ்வைத் தொடங்கும் – அதாவது தனி வாழ்வு விடுத்து பொதுவாழ்வைத் தொடங்கும் நிகழ்வாக அவருடைய திருமுழுக்கு நிகழ்வு அமைகிறது. இந்த நிகழ்வில், ‘நான் யார்? நான் யாருக்காக?’ என்னும் இரண்டு அடிப்படைக் கேள்விகளுக்கான தெளிவைப் பெற்றுக்கொள்கிறார் இயேசு. பழைய ஏற்பாட்டில் யோசுவா யோர்தான் ஆற்றில் இறங்கி இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் கொண்டுசென்றதுபோல, புதிய ஏற்பாட்டில் இயேசு (எபிரேயத்தில், ‘யோசுவா’) யோர்தான் ஆற்றில் இறங்கி புதிய இஸ்ரயேல் மக்களை பாவத்திலிருந்து மீட்கிறார்.
இந்த விழாவின் பின்புலத்தில் நமக்கு இயல்பாக மூன்று கேள்விகள் எழுவதுண்டு: (அ) இயேசுவே வயது வந்தபின்னர் தான் திருமுழுக்கு பெற்றார். அப்படி இருக்க, கத்தோலிக்கத் திருஅவையில் நாம் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்குப் பெறுவது ஏன்? (ஆ) பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கை யோவான் வழங்கினார் எனில், பாவமே அறியாத இயேசு அத்திருமுழுக்கைப் பெற வேண்டியதன் நோக்கம் என்ன? (இ) ‘அவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்’ என்று இயேசுவைப் பற்றி யோவான் முன்னுரைக்கிறார் எனில், நாம் பெற வேண்டிய இந்த இரண்டாவது திருமுழுக்கு என்ன? இதுதான் ‘முழுக்கு ஸ்நானமா’? அல்லது இதுதான் ‘அபிஷேகம், இரட்சிப்பு பெறுதலா?’
விரைவாக இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டு, நம் சிந்தனைக்குள் நுழைவோம். (அ) திருமுழுக்கு நாம் தொடக்கப் பாவத்தைக் கழுவுகிறது. மேலும், திருமுழுக்கு என்பது திருஅவை என்னும் சமூகத்திற்குள் உறுப்பினராக மாறும் நுழைவுச் சடங்கு. ஆக, குழந்தையாக இருக்கும்போதே திருமுழுக்கு கொடுப்பதை கத்தோலிக்கத் திருஅவை முன்மொழிகிறது. (ஆ) இயேசு திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் பாவமன்னிப்பு அல்ல. மாறாக, இது மனுக்குலத்தோடு அவர் முழுமையாக ஒன்றித்திருந்ததையும், மற்றும் அவருடைய பொதுவாழ்வு அல்லது பணிவாழ்வின் தொடக்கத்தையும் குறிக்கிறது. (இ) ‘தூய ஆவியால் திருமுழுக்கு’ என்பது லூக்கா நற்செய்தியில் திருத்தூதர்பணிகள் நூலில் வரப் போகின்ற ஆவியார் அருள்பொழிவைக் குறிக்கின்றது. தூய ஆவியாரின் கொடைகளை நாம் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெறுகின்றோம். திருமுழுக்கில் நம்மேல் பொழியப்பட்ட ஆவி – தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் – இந்த அருளடையாளத்தில் உறுதிசெய்யப்படுகின்றார். ஆக, நாம் முழுக்கு ஸ்நானம், அல்லது ஆவியின் அபிஷேகம் அல்லது இரட்சிப்பு பெறத் தேவையில்லை.
இயேசுவின் திருமுழுக்கு நமக்குத் தரும் செய்தி என்ன?
(அ) இறைவனின் குரல்
பன்னிரு வயதில் ஆலயத்தில், ‘நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ எனக் கேட்கிற இயேசு, திருமுழுக்கு நிகழ்வில் தந்தையின் குரலை உலகறியக் கேட்கிறார். இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் மூன்று குரல்களைக் கேட்கிறோம்: ஆற்றங்கரையில் மக்களின் குரல், திருமுழுக்கு யோவானின் குரல், தந்தையின் குரல். மக்களின் குரல் எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்ததாக இருக்கிறது. யோவானின் குரல் இயேசுவின் முதன்மையையும் மேன்மையையும் அறிவிப்பதாக இருக்கிறது. தந்தையின் குரல் இயேசுவை மகன் என்னும் உரிமை பாராட்டுவதாக இருக்கிறது. ‘என் அன்பார்ந்த மகன் நீயே!’ என்னும் வாக்கியம் திபா 2-இன் பின்புலத்தில் பார்க்கும்போது அரசர் அரியணை ஏறும்போது பாடப்படும் பாடலாக உள்ளது. இயேசு அரச நிலை மெசியா என்ற இறையியலையும் நாம் இங்கே காண்கிறோம். முதல் வாசகத்தில், ‘ஆறுதல் கூறுங்கள். கனிமொழி கூறுங்கள்’ என்று கடவுளின் குரல் ஒலிக்கிறது.
நம் திருமுழுக்குச் சடங்கில், ‘எப்பத்தா’ (‘திறக்கப்படு’) என்னும் ஒரு பகுதி உண்டு. அதில், திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், ‘செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், ஆண்டவர் இயேசு செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக!’ என்று சொல்லி, குழந்தையின் உதடுகள் மற்றும் காதுகளில் சிலுவை அடையாளம் வரைகிறார்.
‘குரல் கேட்டல்’ என்பது திருமுழுக்கு நிகழ்வில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது.
‘நீ என் அன்பார்ந்த மகன், மகள்’ என்னும் இறைவனின் குரல் இன்றும் நம் இதயத்தில் ஒலிக்கிறது. இந்தக் குரலை நாம் கேட்கத் தொடங்கினால் வெளியிலிருந்து வரும் எந்தக் குரலையும் – கோபக் குரல், பொறாமைக் குரல், சந்தேகக் குரல், அலறல் குரல் – அனைத்தையும் நாம் எதிர்கொள்ள முடியும்.
இறைவனின் குரலைக் கேட்கிற நாம் இறைவனின் குரலாக ஒலிக்க வேண்டும்.
(ஆ) இறைவேண்டல்
லூக்கா நற்செய்தியாளருடைய பதிவின்படி இயேசு திருமுழுக்கு பெற்றவுடன் இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார். இறைவேண்டலின்போதுதான் தந்தையின் குரலொலி கேட்கிறது. தூய ஆவி புறா வடிவில் இறங்கி வருகிறது. லூக்கா நற்செய்தியை இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கிறோம். இயேசு செய்யும் முதல் இறைவேண்டல் இதுவே. இறைவேண்டல் என்பது நம் விண்ணப்பங்களைப் பட்டியலிடுவது அன்று, மாறாக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை உள்ளத்தில் உணர்ந்துகொள்வது. நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொடர்பை – ஏற்படுத்திக்கொள்வது. எப்படி நம் அலைபேசி அல்லது கணினியை இணைய இணைப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ளும்போது தகவல் பரிமாற்றம் செய்ய நம்மால் இயல்கிறதோ, அதுபோலவே இறைவேண்டல் வழியாக நாம் கடவுளோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது நாம் யாவற்றையும் செய்ய முடியும்.
இன்று இறைவேண்டல் என்பதை நாம் மிகவும் சுருக்கிவிட்டோம். விண்ணப்பங்களை எடுத்துரைக்க மட்டுமே இறைவேண்டல் செய்கின்றோம். இறைவேண்டல் என்பது நம் மனப்பாங்காகவும் உள்ளுணர்வாகவும் மாற வேண்டும். இதையே பவுல், ‘எப்போதும், இடைவிடாமல் இறைவேண்டல் செய்யுங்கள்’ (காண். 1 தெச 5:16-17) என எழுதுகிறார்.
(இ) இறைப்பற்று
கடவுளின் அருள் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதை தன் குழுமத்துக்கு எடுத்துரைக்கிற தீத்து, ‘கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்’ என எழுதுகிறார்.
நம் மரபில் – இந்து, இந்திய மரபில் – முடிஎடுத்தல் அல்லது முடிஇறக்குதல் என்ற ஒரு வழக்கம் உண்டு. இந்த வழக்கத்தின் பொருள், நம் தலையின் மணிமகுடத்தை கடவுளின் முன் இறக்குதல் ஆகும். வெற்றி பெற்ற மன்னன் முன்பாக தோல்வியுற்ற மன்னன் தன் மணிமகுடத்தைக் கழற்றி வைத்து, ‘இனி என்னை நீர் ஆளும்!’ என்று சொல்வதுபோல திருமுழுக்கு நிகழ்வில் நாம் நம் பெற்றோரின் விரல் விடுத்து இறைவனின் கரம் பற்றுகிறோம். நம் பற்றுகளை விடுத்து இறைவனைப் பற்றிக்கொள்வதில்தான் நம் நம்பிக்கையின் பயணம் தொடங்குகிறது.
இறுதியாக,
குழந்தையாக இருந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுகூருவோம். நம் சார்பாக நம் பெற்றோரும் ஞானப்பெற்றோரும் நம்பிக்கை அறிக்கை செய்தார்கள். திருமுழுக்கின் உரிமைகளை நமக்குப் பெற்றுத்தந்ததோடு கடமைகளையும் ஏற்றார்கள். அவர்களை நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.
நம் குடும்பம், பணி, பயணம் அனைத்துமே நாம் இறங்குகிற யோர்தான்.
இறைஅனுபவம், இறைவெளிப்பாடு, இறைப்பணி – இயேசுவுக்கு!
இறைக்குரல், இறைவேண்டல், இறைப்பற்று – நமக்கு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: