இன்றைய இறைமொழி
சனி, 12 ஏப்ரல் ’25
தவக்காலம் ஐந்தாம் வாரம் – சனி
எசேக்கியேல் 37:21-28. யோவான் 11:45-57
ஒரு மனிதன் மட்டும்
புனித வாரத்திற்குள் நுழைய நாம் தயாராகி நிற்கும் வேளையில், யூதர்களுக்கும் இயேசுவுக்கும் உள்ள விவாதம் மறைந்து, யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் தயாராகின்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 11:45-57) நமக்குச் சொல்கிறது.
‘இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை’ என்னும் தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் இறைவாக்காகச் சொல்லப்பட்டதாக எழுதுகின்றார் யோவான்.
‘பெரியது ஒன்று அழிவதற்குப் பதிலாகச் சிறியது ஒன்று அழிந்து போவது நல்லது’ என உரைக்கிறது இறைவாக்கு.
இதை வாசிக்கும்போது நம்மை அறியாமல் சோகம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ வாழ்க்கை இப்படித்தான் நடத்துகிறது.
அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.
இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.
பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் – துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி – ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். ‘ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்’ என்று விதுரர் கேட்கிறார்:
‘ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்’ (மகாபாரதம், இரண்டு, 55.10)
ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.
பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.
ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா? ஒரு பெரிய நிறுவனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, அதில் வேலை செய்யும் ஒருவர் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டாலும் தன்னையே அழித்துக் கொள்கின்றார்.
குடும்பம் என்னும் அமைப்பு அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்காக தங்களையே அழித்துக்கொள்கின்றனர்.
பெரிய உடலைக் காப்பாற்றுவதற்காக சிறிய கேன்சர் கட்டி அகற்றப்படுகிறது.
இப்படியாக பெரியவற்றுக்காகச் சிறியவை எப்போதும் பலியாகிக்கொண்டே இருக்கின்றன.
பெரியவை பக்கம் நியாயம் இருப்பதாகவும், இதில் ஒரு நல்ல நோக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?
அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.
இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.
ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.
இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.
ஆனால், ‘எது தேவையோ அதுவே தருமம்’ என்கின்றன புனித நூல்கள்.
பெரியவர்களுக்காகவும், பெரிய இனத்துக்காகவும் சிறியது ஒன்று அழிக்கப்படலாம் என்பதைக் கேட்ட நாள் முதல் இயேசு பெரியவர்களின் கண்களிலிருந்து தப்பிச் செல்கின்றார். வெளிப்படையாக அவர் நடமாடவில்லை.
முதல் வாசகத்தில் (எசேக்கியேல் 37:21-28), ‘நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் மக்களாக இருப்பர்’ என்று சிறியவர்களின் சார்பாகக் கடவுள் நிற்பதைப் பார்க்கின்றோம். சிதறுண்ட மக்களினங்களைக் கடவுள்தாமே கூட்டிச் சேர்க்கின்றார்.
இன்றைய வாசகங்கள் இரு நிலைகளில் நமக்குச் சவால் விடுகின்றன:
ஒன்று, பெரியவற்றுக்காக பலியாகும் சிறியவராக, சிறியதாக நாமும் இருக்கின்றோம். அல்லது மற்றவர்களை அந்நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றோம். பலிகடா என்னும் மனநிலையில் வாழ்வதும் தவறு, பலிகடா போல மற்றவர்களைப் பயன்படுத்துவதும் தவறு.
இரண்டு, பலிகடா என மற்றவர்கள் நம்மை நினைக்கும்போது, ‘நான் பலிகடா அல்ல, தலைவர்’ என்ற மனநிலை பிறந்தால் நாம் கடவுள் நிலைக்கு உயர்ந்துவிடலாம்.
‘ஆயர் தம் மந்தையைக் காப்பது போல ஆண்டவர் நம்மைக் காக்கின்றார்’ என்கிறது எரேமியா இறைவாக்கு.
மந்தையைக் காக்கும் ஆயர் பலிகடா அல்ல. அவர் தன் ஆடுகளுக்காக தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்தாலும் அவர் அம்மந்தையின் தலைவர்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: