இன்றைய இறைமொழி
வெள்ளி, 3 ஜனவரி ’25
கிறிஸ்து பிறப்புக் காலம்
இயேசுவின் திருப்பெயர், நினைவு
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, நினைவு
1 யோவான் 2:29-3:6. யோவான் 1:29-34
கடவுளின் செம்மறி
இன்று இயேசுவின் திருப்பெயரை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். ‘வானதூதர் சொல்லியிருந்தவாறே குழந்தைக்கு இயேசு (‘அவர் நம்மை மீட்பார்’) என்று பெயரிட்டார்கள்’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா (2:21). ‘இயேசு’ என்னும் பெயருக்கு ‘அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ (மத் 1:21) என விளக்கம் தருவதோடு, ‘யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்’ எனப் பதிவு செய்கிறார் மத்தேயு (1:25).
யோவான் நற்செய்தியாளர், தன் நற்செய்தியின் முதல் அலகிலேயே, ஏழு பெயர்களைக் கொண்டு ‘இயேசு’ என்னும் பெயரை அறிமுகம் செய்கிறார்: (1) வார்த்தை (1:1-3, 14), (2) ஒளி (1:4-9), (3) கடவுளின் மகன் (1:18), (4) கிறிஸ்து (1:19-28, 35-42), (5) கடவுளின் செம்மறி (1:29, 35-36), (6) இஸ்ரயேலின் அரசர் (1:43-49), (7) மானிட மகன் (1:51).
மேற்காணும் ஏழு விளக்கப் பெயர்களில் ஐந்தாவது பெயரைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். இந்தப் பெயருக்குச் சான்றுபகர்பவர் திருமுழுக்கு யோவான். யோவான் நற்செய்தியில் காணப்படும் ஏழு சான்றுகளில் முதல் சான்று இதுவே (மற்ற ஆறு சான்றுகள்: நத்தனியேல் (1:49), பேதுரு (6:69), பார்வையற்ற நபர் (9:35-38), மார்த்தா (11:27), தோமா (20:28), இயேசு தாமாக (5:25, 10:36).
பாஸ்கா கொண்டாட்டத்தின்போது பலியிடுவதற்காக ஒவ்வொரு யூதக் குடும்பமும் செம்மறி ஆடு ஒன்றைத் தயாரிப்பது வழக்கம். எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா அன்று அவர்களுடைய வீடுகளில் பூசப்பட்ட செம்மறியின் இரத்தம் அவர்களைக் காப்பாற்றுவதுடன், எகிப்தின் தலைப்பேறுகளை அழிக்கிறது (காண். விப 12:22-23). மெசியா அனைவருடைய பாவங்களையும் தாங்கிக்கொள்வார் என எசாயா முன்னுரைத்தார் (53:12). இயேசுவைக் கடவுளின் செம்மறி என நாம் அழைப்பதை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: (அ) பாஸ்காத் திருவிழாவின்போது அவர் கொல்லப்படுவார், (ஆ) ஒப்புரவு நாளில் (யோம் கிப்பூர்) கொல்லப்படும் செம்மறி போல மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் இறப்பார், (இ) ஒப்புரவு நாளில் மக்கள் நடுவே சென்று மக்களின் பழிச்சொல்லையும் உமிழ்நீரையும் ஏற்றுப் பாலைநிலத்திற்கு அனுப்பப்படும் ஆடு போல, நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்படுவார்.
திருமுழுக்கு யோவான் வழங்கும் சான்று வாசகருக்கு நற்செய்தியின் இறுதியில்தான் புரியும். இயேசு கடவுளின் செம்மறி என்பது தமக்கு வெளிப்படுத்தப்பட்டது என்றும், அதைத் தான் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் மொழிகிறார் யோவான்.
‘உலகின் பாவத்தைப் போக்க வந்தவர் இயேசு’ என்று வாக்கியத்தில், ‘பாவம்’ என்பது ஒருமையில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனித்தனிப் பாவங்களை அல்ல, மாறாக, ‘பாவம்’ என்னும் தீமையின் ஆதிக்கத்தைப் போக்க அல்லது சுமக்க வந்தவர் இயேசு என்பதே இதன் பொருள்.
‘பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை’ (யோவா 8:4) எனக் கற்பிக்கிறார் இயேசு. நம் தனிப்பட்ட பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த பாவத்துக்கே, தீமைக்கே நம்மை அடிமையாக்கிவிடுகின்றன. இயேசு, கடவுளின் செம்மறியாக, பாவத்தைப் போக்கினார். அவர் தருகிற அருள்நிலையிலேயே நாம் இருக்க நம்மை அழைக்கிறார் அவர்.
இயேசு என்னும் திருப்பெயரை உச்சரிக்கும் நாம், அது சுட்டிக்காட்டுகிற பொருளை உணர்வதோடு, பாவத்திலிருந்து விலகி நிற்க அது தரும் அழைப்பை ஏற்று வாழ்வோம். இந்த அழைப்பை இன்றைய முதல் வாசகம் நமக்குத் தருகிறது: ‘பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை’ (1 யோவா 3:6).
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா
நம் மண்ணின் புனிதர் இவர் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் எவை?
(அ) இறைவேண்டல் – ஒவ்வொரு குடும்பமும் இல்லத் திருஅவை என்பதை உணர்ந்த இவர் குடும்பங்களில் செய்யப்படும் இறைவேண்டலே சமூக மாற்றத்துக்கு உதவும் என நம்பினார்.
(ஆ) கல்வியும் சமூக வளர்ச்சியும் – விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கும் கல்வி என்பது இவருடைய நோக்கமாக இருந்தது.
(இ) புனிதம்நிறை வாழ்வு – கிறிஸ்துவை மையப்படுத்திய வாழ்வே புனிதம் என்பது இவருடைய புரிதல்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: