இன்றைய இறைமொழி
வெள்ளி, 4 அக்டோபர் ’24
பொதுக்காலம் 26-ஆம் வாரம், வெள்ளி
அசிசி நகர் புனித பிரான்சிஸ், நினைவு
யோபு 38:1, 12-21. 40:3-4. லூக்கா 10:13-16
கடவுளின் வல்லமையும் நம் பணிவும்
கடவுள் வலிமையுடையவராக இருக்கிறார். அவருடைய செயல்கள் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. ஆகவே, அவர் முன் பணிதலும், அவருடைய குரலுக்குச் செவிமடுத்தலும் நலம்.
(அ) கடவுளின் மேன்மையான ஆற்றல்
சூறாவளியிலிருந்து யோபுவுக்கு விடையளிக்கிறார் கடவுள். தொடர் கேள்விகள் வழியாக யோபுவோடு உரையாடுகிறார் கடவுள். இறுதியில், ‘புரியாதவற்றைப் புரிந்துகொள்ள முயன்றேன்!’ என்று சரணடைகிறார் யோபு.
துன்பமும் குழப்பமும் நம் வாழ்வில் வரும்போது, யோபு போல நாமும் கேள்விகள் எழுப்புகிறோம். கடவுள்தாமே அனைத்தின்மேலும் ஆற்றல் கொண்டிருக்கிறார். நமக்கு நேர்பவை மேலும் கடவுள் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். கடவுளின் அளப்பரிய ஆற்றலையும் ஞானத்தையும் உணர்ந்து அவரிடம் சரணாகதி அடைவதே சிறந்தது என யோபு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
(ஆ) கடவுளுடைய பேச்சும் மானிடரின் மௌனமும்
கடவுளுடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசவோ, பதிலுரைக்கவோ நம்மால் இயலாது. நம் கொடுக்கும் பதில் ‘மௌனம்’ மட்டுமே.
கடவுள் நம் உள்ளத்தின் குரலாக நம்மோடு உரையாடுகிறார். அமைதியில்தான் அவருடைய குரலை நாம் கேட்க முடியும்.
(இ) மனமாற்றத்தின் வழியாகப் பதிலிறுப்பு
தம் செய்தி கேட்டு மனம் திரும்பாத கொராசின், பெத்சாய்தா, கப்பர்நகூம் நகரங்களைக் கடிந்துகொள்கிறார் இயேசு. இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இம்மக்கள் இடறல்பட்டு, அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள்.
மனம் மாறுதல் என்றால் நம் முதன்மைகளை நெறிப்படுத்துததல் ஆகும். கடவுளுடைய இரக்கம் மற்றும் அன்பை நாம் ஏற்றுக்கொள்வதற்கு மனமாற்றம் வழிவகுக்கிறது.
அசிசி நகர் புனித பிரான்சிஸ்
படைப்புகளோடு தம்மை ஒன்றாக இணைத்துக்கொண்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ், மகிழ்ச்சி, மனநிறைவு, மனச் சுதந்திரம் கொண்டு வாழ்ந்தார். படைப்புகளோடு நாம் கொண்டுள்ள உறவு, அந்த உறவு பற்றிய உணர்வும் நம்மைத் தாழ்ச்சியில் வளரத் தூண்டுகின்றன.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளின் குரலை தங்கள் இதயத்தின் ஆழத்தில் கேட்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 216)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: