• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுளின் வாய்ச்சொல். இன்றைய இறைமொழி. செவ்வாய், 11 மார்ச் ’25

Tuesday, March 11, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
செவ்வாய், 11 மார்ச் ’25
தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய்
எசாயா 55:10-11. திருப்பாடல் 34. மத்தேயு 6:7-15

 

கடவுளின் வாய்ச்சொல்

 

எபிரேயத்தில் சொல் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பதம் ‘தவார்.’ இப்பதம் ‘செயல்’ என்பதையும் குறிக்கும். ஆக, சொல்லும் செயலும் ஒரே பதத்தால் குறிக்கப்படுகின்றன. இதன் உட்பொருள் என்ன? சொல் என்பது செயலாக மாற வேண்டும்.

 

முதல் வாசகத்தில் கடவுளுடைய சொல்லின் ஆற்றலைப் பதிவு செய்கிறார் எசாயா. வானத்திலிருந்து இறங்கி வரும் மழையும் பனியும் நிலத்தை நனைத்து, நிலத்தில் மாற்றத்தையும் வளமையையும் ஏற்படுத்தாமல் திரும்பிச் செல்வதில்லை. அது போலவே, கடவுளின் சொல்லும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை.

 

‘நான் எட்டு மணிக்கு வருகிறேன்’ என்னும் சொற்கள், நான் எட்டு மணிக்கு வந்தால் செயலாக மாறுகின்றன. அல்லது அவை வெற்றுச் சொற்களாகவே நின்றுவிடுகின்றன.

 

இன்று சொற்களின் பயன்பாடு வேகமாகக் குறுகிக் கொண்டே வருகிறது. மின்னஞ்சல் வந்த புதிதில் நிறைய எழுதினோம். பின் அதுவே குறுஞ்செய்தியாக மாறியபோது நம் சொற்கள் குறைந்தன. இன்று சொற்களை மறந்து வேகமாக எமோஜிக்கு மாறுகிறோம்.

 

குறைவான சொற்களைக் கொண்டு இறைவேண்டல் செய்யுமாறு தம் சீடர்களுக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கற்றுத் தருகிறார் இயேசு. புறவினத்தார்போலப் பிதற்ற வேண்டாம், மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போக வேண்டாம் என அறிவுறுத்துகிறார். தொடர்ந்து, இறைவேண்டல் செய்வது எப்படி எனத் தம் சீடர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

 

முதல் வாசகத்தின் பின்புலத்தில் நற்செய்தி வாசகத்தைப் பார்த்தால், நாம் செபிக்கிற ஒவ்வொரு சொல்லும் செயலாக மாறாத வரை அது வெற்றுச் சொல் என்னும் பாடம் கற்கிறோம். எடுத்துக்காட்டாக, ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பது போல’ என்னும் சொற்களை நான் சொல்லும் அந்த நொடிகளில் நான் என் எனக்கு எதிராகத் தீங்கிழைத்தவர்களை மன்னிக்க இயலவில்லை எனில் என் சொற்கள் வெற்றுச் சொற்களே!

 

(அ) கடவுளின் வாய்ச்சொல் போல நம் சொல் இருத்தல் – அதாவது செயலாக வெளிப்படுதல் வேண்டும்.

 

(ஆ) குறைவான சொற்கள் பேசுதல் நலம் என ஞானநூல்களும் நமக்கு அறிவுறுத்துகின்றன. பேச்சு நீள நீள அதன் பயன் குறைந்துபோகிறது.

 

(இ) நான் வாசிக்கும் இறைவார்த்தை செயலாக மாறும்போது, இறைவனின் சொல்லாகவும் செயலாகவும் நான் மாறுகிறேன்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: