• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுளின் வார்த்தையும் நம் வார்த்தைகளும். இன்றைய இறைமொழி. திங்கள், 2 டிசம்பர் ’24.

Monday, December 2, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Advent

இன்றைய இறைமொழி
திங்கள், 2 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் முதல் வாரம் – திங்கள்
எசாயா 2:1-5. திருப்பாடல் 122. மத்தேயு 8:5-11

 

கடவுளின் வார்த்தையும் நம் வார்த்தைகளும்

 

கடவுளின் மனுவுருவாதலை, ‘வார்த்தை மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்’ என்று பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் யோவான் (1:14). வாக்கு தொடக்கத்தில் இருந்தது (யோவா 1:1). வார்த்தையான இயேசுவை வரவேற்கக் காத்திருக்கும் நாம், இன்று நாம் பேசும் வார்த்தைகளைச் சற்றே எண்ணிப் பார்ப்போம்.

 

வார்த்தைகள் பேசுகிறோம். வார்த்தைகளில் சிந்திக்கிறோம். வார்த்தைகளை வாக்குறுதிகளாகக் கொடுக்கிறோம். கடவுளைப் பொருத்தவரையில் வார்த்தையும் செயலும் ஒன்றாகவே இருக்கிறது. எபிரேயத்தில் ‘தவார்’ என்னும் சொல் ஒரே நேரத்தில் வார்த்தையையும் செயலையும் குறிக்கிறது. ஆக, வார்த்தையாக வடிவம் எடுக்கும் எதுவும் செயலாக மாற வேண்டும். ‘நான் 6 மணிக்கு எழுந்திருக்கிறேன்!’ என்று வார்த்தைகளில் நான் சொன்னால், நான் 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். செயலாக மாறாத வார்த்தைகள் வெறும் காற்றாக நின்றுவிடுகின்றன.

 

‘எருசலேமிலிருந்து ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்’ என்று இன்றைய முதல் வாசகத்தில் உரைக்கிறார் எசாயா. பாபிலோனில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை நோக்கிச் செல்கிற கடவுளின் வார்த்தை அவர்களுக்கு ஊக்கமும் உயிர்ப்பும் தருகிறது. ஆண்டவரின் வாக்கைக் கேட்கிற மக்களுடைய வாழ்க்கை உடனடியாக மாறுகிறது. ‘வாருங்கள், நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்!’ என அவர்கள் கடவுளை நோக்கிப் புறப்பட்டு வருகிறார்கள்.

 

ஆக, கடவுளிடமிருந்து வருகிற வார்த்தைக்கு நாம் பதிலிறுப்பு செய்யும்போது, கடவுளை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம்.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவுடைய வார்த்தையின் ஆற்றலை அறிந்தவராக இருக்கிற நூற்றுவர் தலைவர், ‘ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்’ என்கிறார். ‘வா, போ, செய்!’ என்னும் மனித வார்த்தைகளுக்கே ஆற்றல் இருக்கும்போது, அவை செயல்களாக மாறும்போது, இறைவார்த்தைக்கு, இறைவனே வார்த்தையாக நின்று ஒலிக்கும் வார்த்தைகளுக்கு ஆற்றல் இருக்காதா என அறிந்தவர் அவர். இயேசுவின் வார்த்தை நூற்றுவர் தலைவருடைய மகனுக்கு நலம் தருகிறது.

 

ஆக, கடவுளிடமிருந்து வருகிற வார்த்தை நலம் தரும் வல்ல செயலாக மாறுகிறது.

 

பதிலுரைப்பாடல் ஆசிரியர் (திபா 122), எருசலேமுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம், ‘உன்னுள் சமாதானம் (ஷலோம்) நிலவுவதாக!’ என வாழ்த்துகிறார்.

 

வாழ்வாக்க:

 

(அ) கடவுளுடைய வார்த்தை ஆற்றல் மிக்கது என்பதை ஏற்றுக்கொள்வோம். கடவுளுடைய வார்த்தையை திருவிவிலியம் வழியாக வாசித்தறிவோம்.

 

(ஆ) நம் வார்த்தைக்கும் ஆற்றல் உள்ளது. நாம் பேசுகிற சொற்களில் சிக்கனமாகவும் கவனமாகவும் இருப்போம். செயலாக மாற்றம் பெறாத சொற்களைச் சொல்ல வேண்டாம்.

 

(இ) நம் வார்த்தை மற்றவர்களுக்கு நலம் தரும், அமைதி தரும் வார்த்தைகளாக அமையட்டும். அலைபேசியில் இன்று நாம் யாரிடம் பேசினாலும், ‘உன்னுள், உன் இல்லத்துள், உன் கோட்டைக்குள் அமைதி நிலவுவதாக!’ என வாழ்த்துவோம்.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ பிறருக்கு நலம் பயக்கும் வார்த்தைகளையே பேசுகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 263).

 

அருள்திரு யேசு கருணாநிதி (@ Sower)
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: