இன்றைய இறைமொழி
புதன், 2 அக்டோபர் ’24
பொதுக்காலம் 26-ஆம் வாரம், புதன்
புனித காவல் தூதர்கள், நினைவு
யோபு 9:1-12, 14-16. மத்தேயு 18:1-5, 10
கடவுளுடைய தொடர் உடனிருப்பு
கடவுள் தம் தூதர்கள் வழியாக நம்மோடு தொடர்ந்து உடனிருக்கிறார் என்று நமக்கு உணர்த்துகிறது இன்றைய திருநாள். கடவுளின் வானதூதர்கள் நம்மோடு வழிநடக்கிறார்கள், வழிநடத்துகிறார்கள், பாதுகாக்கிறார்கள். நாம் துன்புறும் வேளையில் கடவுள் தம் தூதர்களால் நம்மைத் தூக்கி நடக்கிறார்.
(அ) கடவுளின் தூரமும் உடனிருப்பும்
கடவுளின் மேன்மையைப் பற்றிச் சிந்திக்கிறார் யோபு (முதல் வாசகம்). ‘நீர் ஏன் இதைச் செய்கிறீர்?’ என்று கடவுளிடம் யாரும் கேட்க முடியாது. அனைத்தையும் கடந்தவராக இருக்கிற கடவுள் அனைத்தையும் அறிந்தவராகவும் அனைத்தின்மேலும் ஆற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். கடவுள் நம்மை விட்டுத் தூரமாக இருந்தாலும் அவருடைய உடனிருப்பை நாம் அவருடைய தூதர்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். அவருடைய துன்பநேரத்தில் கடவுள் அவரைவிட்டுத் தூரமாகப் போய்விட்டதாக உணர்கிறார் யோபு. ஆனால், கடவுள் தம் தூதர்கள் வழியாக நம்மோடு என்றும் உடனிருக்கிறார்.
யோபு போல நாமும் ஐயம் கொண்டிருத்தாலும், கலக்கம், துன்பம் அடைந்தாலும் கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. கடவுளுடைய தூதர்கள் நம்மோடு வழிநடக்கிறார்கள். இருள்நிறை பொழுதுகளிலும் அவர் நம்மோடு இருக்கிறார்.
(ஆ) கடவுளின் பராமரிப்பில் பற்றுறுதி
விண்ணரசின் மாட்சிபற்றி எடுத்துரைக்கிற இயேசு, சிறு குழந்தையை அடையாளமாக முன்நிறுத்துகிறார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள்மேல் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ்வின் உறதியற்ற நிலைகளைத் தங்கள் பெற்றோர்களின் துணையோடு கடந்து வருகிறார்கள்.
குழந்தைகள்போல பற்றுறுதி கொண்டிருக்கிறவர் கடவுளின் உடனிருப்பை உணர்ந்தவராக இருக்கிறார்.
(ஆ) வானதூதர்கள்: கடவுளுடைய பராமரிப்பின் தூதர்கள்
வானதூதர்கள் கடவுளுக்கும் நமக்கும் இடையே நிற்கிற பாலங்கள். சிறியவர்களுக்கு இடறலாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கிற இயேசு, கடவுளின் தூதர்கள் அவர்களோடு இருப்பதை எடுத்துரைக்கிறார். இவ்வாறாக, வலுவற்றவர்களுக்கு வலிமை சேர்க்கிறார் கடவுள். அவர்கள் வழியாகவே கடவுள் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
நாம் கடவுளுக்கு உகந்ததைச் செய்யவும், அவர்வழி நடக்கவும் வானதூதர்கள் துணைசெய்கிறார்கள். கடவுளுடைய தூதர்களின் உடனிருப்பை அனுபவிக்கும் நாம், ஒருவர் மற்றவருடைய வாழ்விலும் தூதர்களாகச் செயல்பட முடியும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தனிமையை உணர்வதில்லை. ஏனெனில், கடவுளின் தூதர்கள் தங்களோடு உடனிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 214)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: