• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுள் தம் மக்களோடு பயணிக்கிறார் - இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 செப்டம்பர் ’24.

Sunday, September 29, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு
புலம்பெயர்வோர் மற்றும் அடைக்கலம்நாடுவோர் உலக நாள்
எண்ணிக்கை 11:25-29. யாக்கோபு 5:1-6. மாற்கு 9:38-48

 

கடவுள் தம் மக்களோடு பயணிக்கிறார்!

 

இந்த ஞாயிற்றை நம் தாய்த்திருஅவை, ‘புலம்பெயர்ந்தோர் மற்றும் அடைக்கலம்நாடுவோர்க்கான 110-ஆவது உலக நாளைக்’ கொண்டாடுகிறோம். ‘கடவுள் தம் மக்களோடு பயணிக்கிறார்’ என்னும் மையக்கருத்தை முன்மொழிகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

‘தம் தவறுகளை உணர்ந்துகொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்’ (திபா 19:12). தன் ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்திற்கு புகழாரம் சூட்டுகின்ற திருப்பாடல் ஆசிரியர் (இன்றைய பதிலுரைப்பாடல்), ‘ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. இதயத்தை மகிழ்விக்கின்றன’ என்று துள்ளிக் குதிக்கின்றார். ஆண்டவரின் திருச்சட்டம் அல்லும் பகலும் தன்னை எச்சரித்தாலும், சில நேரங்களில் தன் அறியாமையால் தவறு செய்வதாகவும், தன் அறியாப் பிழைக்காகத் தன்னை மன்னிக்குமாறும் ஆண்டவரிடம் மன்றாடுகின்றார் அவர்.

 

மெய்யியலில் அனைத்துத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அறியாமை அல்லது மெய்யறிவு பெறுதலே தவறுகளைக் களைவதற்கான வழி என்று சொல்லப்படுகிறது.

 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் அறியாப் பிழையை நமக்குச் சுட்டிக்காட்டி, அதே பிழை நம்மிடமும் இருந்தால் நாம் இறைவனால் மெய்யறிவு புகட்டுப்பட்டு, அவற்றைச் சரி செய்ய நம்மை அழைக்கின்றது.

 

முதல் வாசகம் (எண் 11:25-29) எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் யாவே இறைவன், அவர்களை மோவாபு பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்கின்றார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் பயணம் செய்யும் மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்கிறது எண்ணிக்கை நூல். பாலைவனத்துப் பயணம் அவர்களுக்கு அலுத்துப் போய்விடுகின்றது. ‘நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? எகிப்தில் செலவின்றி உண்ட உணவு நினைவுக்கு வருகிறது. நம் வலிமை குன்றிப் போயிற்று. மன்னாவைத் தவிர வேறெதுவும் கண்களில் படுவதில்லையே!’ (எண் 11:4-6) என்று முறையிடுகின்றனர். மக்களின் அழுகுரல் ஆண்டவருக்கு சினம் தருகின்றது. மோசேயும், ‘எனக்கு ஏன் இந்தத் தீராச் சுமை? இவர்களை நானா கருத்தரித்தேன். இது எனக்கு மிகப்பெரிய பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்!’ என்று ஆண்டவரிடம் அழுது முறையிடுகின்றார். இந்த நேரத்தில் மோசேயின் பணிக்கு உதவி செய்வதற்காக இஸ்ரயேலின் மூப்பரில் எழுபது பேரைத் தன்னிடம் அழைத்து வருமாறு சொல்கின்றார் ஆண்டவர். இந்த மூப்பர்களைத் தெரிவு செய்து அவர்களை ஆண்டவர் திருமுன் நிறுத்துகின்றார் மோசே. மோசேயிடம் உள்ள தன் ஆவியில் கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் பொழிகின்றார் கடவுள். எழுபதின்மேர் ஆவி இறங்கிய நேரத்தில் ஆண்டவரின் சந்திப்புக் கூடாரத்திற்குள் இல்லாமல், தங்கள் இல்லங்களில் – அதாவது, தூய்மையற்ற மக்களின் வாழ்விடத்தில் – இருந்த எல்தாது மற்றும் மேதாது என்னும் இளவல்கள்மேலும் ஆவி பொழியப்பட அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைக்கின்றனர். இதைக் காண்கின்ற யோசுவா, ‘அவர்களைத் தடுத்து நிறுத்தும்!’ என்று மோசேயிடம் சொல்கின்றார். அவரைக் கடிந்துகொள்கின்ற மோசே, ‘என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? – அதாவது, எனக்கு அது தெரிந்தும் நான் அமைதி காப்பது குறித்து பொறாமைப்படுகிறாயா? – ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!’ என்று அறிவுறுத்துகின்றார்.

 

தூய்மையான இடத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆண்டவரின் ஆவி என்னும் கொடை வழங்கப்பட வேண்டும் என்றும், தூய்மையற்ற இடத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் யோசுவா நினைத்ததோடு, தனக்குக் கிடைப்பது தன் தகுதியால் வந்தது என்றும், தகுதியற்றவர்கள் அதைப் பெறக் கூடாது என்றும் பொறாமைப்படுகின்றார். யோசுவாவின் பொறாமையே அவருடைய அறியாப் பிழை.

 

ஆண்டவரின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்றும், ஆண்டவர் தான் விரும்பியவாறு செயல்படுகின்றார், அவருடைய நன்மைத்தனத்தை நாம் தடை செய்ய முடியாது என்றும் சொல்லி யோசுவாவின் அறியாப் பிழை போக்குகின்றார் மோசே.

 

இரண்டாம் வாசகம் (யாக் 5:1-6) யாக்கோபின் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மெய்யான சமய வாழ்வு, குழும வாழ்வில் பாரபட்சம், செயலுடன் இணைந்த நம்பிக்கை, உள்ளத்தில் உள்ள தீய எண்ணம் ஆகியவை பற்றித் தன் குழுமத்திற்கு அறிவுறுத்திய யாக்கோபு, தொடர்ந்து. தன் திருச்சபையில் வாழ்ந்த பணக்கார நிலக்கிழார்கள் மற்றும் செல்வந்தர்களிடம் விளங்கிய தன்மையப் போக்கைக் கண்டிக்கின்றார். அதாவது, யாக்கோபின் குழுமத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், ‘தற்சார்பு’ மற்றும் ‘தன்நிறைவு’ என்னும் பண்புகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். தற்சார்பு உணர்வு, ‘எங்களுக்கு யாரும் – கடவுள்கூட – தேவையில்லை’ என்ற எண்ணத்தை விதைத்துவிட்டால் அது ஆபத்தாகிவிடுகிறது. ஏனெனில், இவர்கள், மறுவுலகமும் மறுவுலகம் தருகின்ற மகிழ்ச்சியும் தேவையில்லை என நினைத்தனர். இவர்களின் பணம், பகட்டான ஆடை, பொன், வெள்ளி அனைத்தும் அழுகிப்போனவை என்றும், பயனற்றவை என்றும், கடவுளின் முன் செல்லாதவை என்றும் கடிந்துகொள்கிறார் யாக்கோபு. மேலும் இவர்கள், தங்கள் தற்சார்பு நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கும் பொருட்டு எளியவர்களையும் பணியாளர்களையும் சுரண்டத் தொடங்கினர்.

 

யாக்கோபின் குழுமத்தில் உள்ள செல்வந்தர்களின் அறியாப்பிழை பேராசை. தங்களின் இன்பமான வாழ்க்கை நிலைக்கு எந்தவொரு இடர்ப்பாடும் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் பேராசை கொண்டு அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்கென வைத்துக்கொள்கின்றனர். செல்வத்தின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்லியும், கடவுளின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியும் அவர்களை எச்சரிக்கின்ற யாக்கோபு அவர்களின் அறியாப் பிழை போக்க முயல்கின்றார்.

 

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 9:38-48) மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது: (அ) ‘நம்மைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுகிறார்’ என்று இயேசுவிடம் புகாரளிக்கின்றார் யோவான். (ஆ) சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம். (இ) பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை.

 

முதல் வாசகத்தில் யோசுவா மோசேயிடம் புகார் அளித்தது போல, யோவானும் இயேசுவிடம் ஒரு முறையீடு செய்கின்றார். இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார். ஆனால், அந்த நபர் பன்னிருவர் குழாமைச் சேராதவர். திருத்தூதர்கள் இயேசு வழங்கிய கொடை தங்களுக்குரியது என்று நினைத்தனர். ஆக, தங்களைச் சாராத ஒருவர் அதே கொடையைக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள இயலவில்லை. ‘அவரைத் தடுக்க வேண்டாம்’ என்றும், தன் பெயரால் செய்பவர் தனக்கு எதிராகத் திரும்ப மாட்டார் என்றும் சொல்கின்றார் இயேசு. அதாவது, இயேசுவின் பெயர் என்பது தன்னிலேயே ஆற்றல் கொண்டது.

 

பன்னிருவரின், குறிப்பாக யோவானின், சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையைக் கடிந்து கொள்கின்ற இயேசு, இரண்டு அறிவுரைகள் வழங்குகின்றார்: ஒன்று, ‘யாருக்கும், குறிப்பாக, சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம்.’ ‘சின்னஞ்சிறியவர்கள்’ என்பவர்கள் ‘பன்னிருவர்’ குழாமைச் சேராதவர்கள். மாறாக, தன்னைச் சார்ந்தவர் என்ற நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொள்தலும் உபசரித்தலும் பெரிய கைம்மாற்றைப் பெற்றுத்த தரும் என்றும் சொல்கின்றார். இரண்டு, பாவத்தில் விழுவது பற்றி எச்சரிக்கின்றார். இங்கே பாவம் என்பது யோவான் மற்றும் திருத்தூதர்களின் பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக இருக்கிறது. பாவத்திற்கு இட்டுச் செல்லும் கை, கால், மற்றும் கண் – இடறலாக இருந்தால் – அவற்றை வெட்டி அல்லது பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார் இயேசு. இங்கே பயன்படுத்தப்படும் இலக்கிய நடை ‘மிகைப்படுத்துதல்’ (ஆங்கிலத்தில், ‘ஹைப்பபல்’) என்பதாகும். கை, கால், கண் என்னும் மூன்றும் பாலியல் சார்ந்த பாவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது ரபிக்களின் போதனை. தன் சமகாலத்தில் நிலவிய போதனையை இயேசு அப்படியே தன் போதனையில் சேர்த்திருக்கலாம். மூன்று உறுப்புகள் மட்டும் சொல்லப்பட்டிருப்பது எதற்காக என்றால், இந்த மூன்று என்ற எண்ணின் வழியாக எல்லா உறுப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் கருத்து. உடலை வெட்டுவது என்னும் கொடூரத்தை 2 மக்கபேயர் 7-இல் வாசிக்கின்றோம். அங்கே தீய அரசன் நல்லவர்களுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கிறான். இங்கே தீமை நிகழாமல் இருக்க உறுப்பு சேதம் அவசியமாகிறது. உறுப்பு சேதம் இயேசுவின் சமகால கும்ரான் போதனையிலும் அதிகமாக இருந்தது. மேலும் கிரேக்க இலக்கியத்தில் நாம் காணும் இடிபஸ் தன் தாய் வழியாக தான் பெற்றெடுத்த குழந்தைகளைக் காண இயலாமல் தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறார். உறுப்பு சேதம் பாவத்தின் கொடுமையான தன்மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தின்னும் புழு, அவிக்கும் நெருப்பு. புழுக்களும், நெருப்பும்தான் நரகத்தில் மனிதர்களை வதைப்பவை என்று நம்பினர் யூத முன்னோர். இங்கே நரகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, பாவத்தில் விழும் சீடர்களுக்கு என்ன நிகழும் என்பதையே இயேசு சொல்கின்றார்.

 

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் அறியாப் பிழை களையப்படுவதுடன், அறியாப்பிழைக்குக் காரணமாக இருக்கின்ற எதுவும் வேருடன் அழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சகிப்புத்தன்மையின்மை என்னும் அறியாப்பிழையை நீக்க, திருத்தூதர்கள் பரந்த பார்வை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

 

இவ்வாறாக, யோசுவாவின் பொறாமை என்னும் அறியாப் பிழையும், யாக்கோபு குழுமத்தின் செல்வந்தர்களின் பேராசை என்னும் அறியாப் பிழையும், பன்னிருவரின் (யோவானின்) சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையும் நம் கண் முன் நிறுத்தப்படுகின்றன.

 

இவர்களின் தங்களின் அறியாப் பிழையை எப்படிக் களைகின்றனர்? இந்தக் கருத்தின் பின்புலத்தில் புலம்பெயர்ந்தோரை எண்ணிப் பார்ப்போம்.

 

(அ) கடவுளின் நன்மைத்தனத்தைக் கண்டுகொண்டால் பொறாமை விலகிவிடும் என்று யோசுவாவுக்குக் கற்பிக்கின்றார் மோசே.

 

(ஆ) அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது, நாம் இறைவனையும் ஒருவர் மற்றவரையும் சார்ந்தவர்கள் என்று கற்றுக்கொண்டால் பேராசை விலகிவிடும் என்று தன் குழுமத்துக்குக் கற்பிக்கின்றார் யாக்கோபு.

 

(இ) சின்னஞ்சிறியவர்களைப் பொறுத்துக்கொள்தலும், தீமையை அகற்றுவது தன்னகத்தே தொடங்க வேண்டும் என்று தன் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்தி அவர்களின் சகிப்புத்தன்மையின்மையைக் களைந்து, அனைவரையும் கொண்டாடவும், சிறியவர்களையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார்.

 

இப்பாடங்களை நாம் நம் வாழ்வில் எப்படிச் செயல்படுத்துவது?

 

(அ) பொறாமை

 

‘பொறாமை’ என்பது ‘தீய பார்வை’ அல்லது ‘தீய கண்’ என்று சொல்லப்படுகின்றது. பொறாமையே கோபம் அல்லது எரிச்சலாக மாறுகிறது. யோசுவா எந்த முகம் கொண்டு தன் பாளையத்துக்குச் சென்றிருப்பார்? எல்தாது மற்றும் மேதாதை அவர் எப்படி எதிர்கொள்வார்? பொறாமை நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது. மற்றவர்களின் நற்குணங்களையும், நன்னிலையையும் பாராட்டும்போது, அவர்களை நம்மவர்கள் என்று உரிமை கொண்டாடும்போது பொறாமை மறைகிறது.

 

(ஆ) பேராசை

 

ஆசை என்பதை நாம் நிறைவேற்றியவுடன் அது அடுத்த ஆசையாக வளர்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், நம் எண்ணத்திற்கு அளவு இல்லாதது போல ஆசைக்கும் அளவு இல்லை. எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்போது ஆசைப்படுதல் என்னும் செயல் குறைய வாய்ப்பு உண்டு. மேலும், நீதியுணர்வு கொண்டிருக்கும்போதும் பேராசை கட்டுக்குள் இருக்கும்.

 

(இ) சகிப்புத்தன்மையின்மை

 

சகியாத்தன்மை அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பது அடுத்தவரின் பிரசன்னத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. தன் சகியாத்தன்மையால்தான் காயின் ஆபேலைக் கொல்கின்றார். நாம் கொலை செய்யும் அளவிற்குச் செல்வதில்லை என்றாலும், மற்றவர்களின் பெயர் அல்லது தன்மதிப்பைக் கொலைசெய்கின்றோம் நம் சகியாத்தன்மையால். மற்றவர்களின் தோல்வியில் அல்லது இழப்பில் அவர்களுடன் துணைநிற்பது எளிது. ஆனால், வெற்றியிலும் நிறைவிலும் உடன்நிற்பது கடினம். புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதும், வரவேற்பதும் நிகழ வேண்டுமெனில் சகிப்புத்தன்மை வளர வேண்டும்.

 

இன்று நம் இறைவேண்டல் எல்லாம், ‘என் அறியாப் பிழையை மன்னியும்!’ என்பதாகவே இருக்கட்டும். புலம்பெயர்வோர் பற்றிய அறியாப் பிழை, முற்சார்பு எண்ணம், தீர்ப்பு மனநிலை மறைய வேண்டும். அறிந்தவுடன் பிழைகள் அகன்றுவிடும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: