இன்றைய இறைமொழி
திங்கள், 21 அக்டோபர் 2024
பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் திங்கள்
எபேசியர் 2:1-10. லூக்கா 12:13-21
கடவுள் முன்னிலையில் செல்வம்
‘செல்வம் பற்றிய மாயப் புரிதல்களை விடுத்து, மனிதர் முன்னிலையில் அல்ல, மாறாக, கடவுள் முன்னிலையில் செல்வம் உயைவராக இருத்தல் சிறப்பு’
‘போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!’ என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் இயேசுவை நோக்கி வருகிறது. கூட்டத்திலிருந்து வரும் குரல்கள் எல்லாம் லூக்கா நற்செய்தியில் நமக்கு ஆர்வம் ஊட்டுபவையாக உள்ளன. அருள்வாழ்வு பற்றி அறிந்தவர், பொருள்வாழ்வு பற்றியும் அறிவார் என்னும் எண்ணத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் ஒருவர். ‘உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ என்னை அமர்த்தியவர் யார்?’ என்று தம் விடையைக் கேள்வியாகத் தொடுக்கிற இயேசு, செல்வம் பற்றிய புரிதலை எடுத்துரைக்கிறார்.
‘எவ்விதப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள்!’ என்னும் எச்சரிக்கையோடு தொடங்குகிறது இயேசுவின் அறிவுரை.
தொடர்ந்து, செல்வம் பற்றிய மூன்று மாயப் புரிதல்களைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு:
(அ) ‘மிகுதியான உடைமைகள் மிகுதியான வாழ்வைத் தரும்’ – மனிதர்களுடைய வாழ்வின் அளவுகோல் செல்வம் என்று பல நேரங்களில் கருதப்படுகிறது. உலக நாடுகள்கூட இந்த அளவுகோலின்படியே அளக்கப்பட்டு, ‘முதல்,’ ‘இரண்டு,’ ‘மூன்றாம்’ உலக நாடுகள் எனப் பெயரிடப்படுகின்றன. இது ஒரு மாயப் புரிதல். ஏனெனில், நாம் பெற்றிருக்கிற செல்வத்தைத் தாண்டியும் நமக்கென்று மாண்பும் மதிப்பும் வாழ்வும் இருக்கிறது.
(ஆ) ‘செல்வத்தைக் கொண்டு செல்வத்தைத் தொடர்ந்து பெருக்க வேண்டும்’ – இயேசு தருகிற உவமையில் வருகிற செல்வந்தர் தம் செல்வத்தைக் கொண்டு தொடர்ந்து செல்வத்தை உருவாக்கிக்கொண்டே போகிறார். செல்வம் சேர்த்தலுக்கு எல்லை கிடையாது. எல்லை இல்லாத நம் பயணம் நம்மைச் சோர்வாக்குவதோடு, போட்டி மனப்பான்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.
(இ) மனிதர் முன்னிலையில் செல்வம் உள்ளவராக இருத்தல் நலம் – நாம் மற்றவர்களையும் நம்மை மற்றவர்களும் நம் கையிருப்பு மற்றும் வங்கியிருப்பைக் கொண்டே பார்ப்பதால், மனிதர்களுக்கு ஏற்புடையவர்களாக விளங்க வேண்டுமெனில் நாம் செல்வம் சேர்க்க வேண்டும். இந்தப் புரிதல் நம்மை மற்றவர்களுக்காக வாழத் தூண்டுகிறது.
மேற்காணும் மூன்று மாயப் புரிதல்களுமே தவறானவை, பிறழ்வுபட்டவை.
இந்த மூன்று மாயப் புரிதல்களுக்கு மாற்றாக, நேரிய புரிதல்களை முன்மொழிகிறார் இயேசு:
(அ) ‘பேராசைக்கு இடம் கொடுக்க வேண்டாம்!’ – செல்வம் சேர்த்தல் என்னும் செயல், பேராசை என்னும் உணர்வாகத் தொடங்குகிறது. தேவையானவற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. தேவைக்குமேலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பேராசை. பேராசை என்பது ஏழு தலையாய பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பேராசை நிறைந்த உள்ளம் அடிப்பகுதி இல்லாத பாத்திரம் போல இருக்கிறது. அதில் நாம் எவ்வளவு நிரப்பினாலும் அது நிறைவதில்லை. தொழுநோய் நீங்கிய நாமான் இறைவாக்கினர் எலிசாவுக்குப் பரிசுகள் அளிக்க விரும்புகிறார். எலிசா பரிசுகளை மறுக்கிறார். எலிசாவின் உதவியாளர் கேகசி, பேராசை கொண்டு, பொய் சொல்லி நாமானிடமிருந்து வெள்ளியையும் பட்டாடைகளையும் பெற்றுக்கொள்கிறார். நாமானின் தொழுநோய் கேகசியைப் பற்றிக்கொள்கிறது (காண். 2 அர 5). பேராசை என்னும் உணர்வு பொய், திருட்டு, ஏமாற்றுதல் என வளரத் தொடங்குகிறது.
(ஆ) செல்வத்தின் இயலாமை – செல்வத்தால் எல்லாம் இயலும் என நினைத்தார் செல்வந்தர். ஆனால், செல்வத்தால் இயலாத ஒன்று இருக்கிறது என இயேசு சுட்டிக்காட்டுகிறார். ‘உயிர் உன்னைவிட்டுப் பிரிவதை உன் செல்வம் தடுக்க இயலாது’ என அவருக்கு நினைவூட்டுகிறார். செல்வம் நமக்குத் தன்னிறைவைத் தருகிறது. நம் தேவைகளை நிறைவுசெய்ய உதவுகிறது. ஆனால், செல்வத்தால் இயலாதவை இந்த உலகத்தில் இருக்கின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. நோயுற்ற நாம் நலம் பெறுவதற்குச் செல்வம் பயன்படுமே அன்றி, நம் உயிரைக் காத்துக்கொள்ளும் உத்திரவாதத்தை அது தர இயலாது.
(இ) கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் – மனிதர் முன்னிலையில் செல்வம் உள்ளவர், கடவுள் முன்னிலையில் செல்வம் உள்ளவர் என இரண்டு வகைகளை உருவாக்குகிற இயேசு, மனிதர் முன்னிலையில் நாம் சேர்க்கும் செல்வத்தைக் கொண்டு, தான தர்மம் செய்து, பிறரன்புச் செயல்களில் ஈடுபட்டு, அதை, நாம் கடவுள் முன்னிலையில் செல்வமாக மாற்ற வேண்டும் எனச் சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்தல் என்பது என்ன என்பதைக் கேட்பவரின் தெரிவுக்கே விட்டுவிடுகிறார் இயேசு.
மேலாண்மையியலைப் பொருத்தவரையில் உவமையில் காணும் செல்வந்தர் போற்றுதற்கு உரியவர். அவர் கடின உழைப்பாளர். யாரையும் ஏமாற்றாமல் தம் செல்வத்தைப் பெருக்குகிறார். நிதி மேலாண்மை பற்றிய அறிவு அவருக்கு நிறைய இருக்கிறது. எதிர்காலத்திற்கெனத் திட்டம் வகுக்கிறார். நிகழ்காலத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். உலகின் பார்வையில், ‘நாமும் இவரைப் போல இருக்க வேண்டும்!’ என்று நம்மைத் தூண்டுகிறார். ஆனால், இயேசுவின் பார்வையில் இவர் ஓர் அறிவிலி. செல்வம் பற்றிய இவருடைய அறிவு குறுகியது.
‘செல்வம் பற்றிய மாயப் புரிதல்களை விடுத்து, மனிதர் முன்னிலையில் அல்ல, மாறாக, கடவுள் முன்னிலையில் செல்வம் உடையவராக இருத்தல் சிறப்பு.’
இன்றைய முதல் வாசகத்தில், எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், அவர்கள் மீட்கப்பட்டிருப்பது நம்பிக்கையால் எனச் சுட்டிக்காட்டி, கடவுளின் கொடையாக அவர்கள் பெற்ற மீட்புக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார். ‘நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்’ என்கிறார் பவுல். நம் வாழ்வின் நோக்கம் நற்செயல்கள் புரிவதற்கு எனில் அவற்றைச் செய்ய இன்றே தொடங்குதல் நலம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ பேராசை உணர்வை அகற்றுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 230)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: