இன்றைய இறைமொழி
வியாழன், 21 நவம்பர் 2024
பொதுக்காலம் 33-ஆம் வாரம், வியாழன்
மரியா காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நினைவு
திருவெளிப்பாடு 5:1-10. திருப்பாடல் 149:1-2, 3-4, 5-6, 9. லூக்கா 19:41-44
கண்ணீர்விடும் கடவுள்
எருசலேம் நகருக்குள் வருகிற இயேசு அங்கிருந்த கோவிலைப் பார்த்து அழுகிறார். கோவில் என்பது இஸ்ரயேல் (அல்லது யூத) மக்களின் அடையாளமாக இருந்தது. ஆண்டவராகிய கடவுளின் பெயர் அங்கே குடியிருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். கடவுளின் மெசியா வருவார் என்றும், அவர் வரும்போது எருசலேம் ஆலயத்தின் கதவு ஒன்றைத் திறந்து உள்ளே வருவார் என்றும் நம்பிய அவர்கள், இயேசுவே கடவுளின் மெசியா என்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
இயேசுவின் கண்ணீரை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) கையறுநிலை. மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெறுகிற ஒருவரின் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு கையிலும் மூக்கிலும் நிறைய குழாய்கள் செலுத்தப்பட்டு படுத்திருக்கும்போது, தன் மனைவி, உறவினர் அல்லது நண்பரைப் பார்த்தவுடன் பேச வழியில்லாமல் கண்ணீர் வடிக்கிறார். இறப்பு வீடு, இழப்பு நேரம் என அனைத்திலும் நாம் நம் கையறுநிலையை உணர்கிறோம். தாம் போதித்த போதனைகள், நிகழ்த்திய வல்ல செயல்கள் என எதுவும் தம் சமகாலத்து மக்களைப் பாதிக்கவில்லை என்று உணர்கிற இயேசு தம் கையறுநிலையில் கண்ணீர் வடிக்கிறார்.
(ஆ) மனமாற்றத்துக்கான அழைப்பு. ‘கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை!’ என்று எருசலேம் நகரின் குற்றத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் கண்ணீர் அவருடைய சமகாலத்தார் மனம் திரும்பவேண்டும் என்பதற்கான அழைப்பாக இருக்கிறது.
(இ) நடக்கவிருப்பவை பற்றிய எச்சரிக்கை. ஆலயம் முற்றுகையிடப்பட்டு கொள்ளையிடப்படுவதையும் அழிக்கப்படுவதையும் முன்னுரைக்கிறார் இயேசு. அவருடைய சமகாலத்தவரால் ஏற்றுக்கொள்ள இயலாததாக இருந்தாலும் இயேசு தம் இறைவாக்கினர் பணியை ஆற்றுகிறார்.
‘அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா?’ என்பதுதான் இயேசுவின் புலம்பல்.
திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பாடும் பாடலில், ‘இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது’ (லூக் 2:78-79) எனக் குறிப்பிடுகிறார்.
இப்பாடல் வரியின் பின்புலத்தில் இயேசுவின் கேள்வியைக் காணும்போது, ‘இயேசுவே அமைதிக்குரிய வழி’ என்னும் பொருள் நமக்கு விளங்குகிறது. ‘அமைதி’ (‘ஷலோம்’) என்பதை மிகப் பெரிய கொடை அல்லது மதிப்பீடாக இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள்.
நம் ஆன்மாவின் அமைதியற்ற நிலையைக் கட்டுப்படுத்தி தம் அமைதியால் அதை நிறைவுசெய்பவர் கடவுள் மட்டுமே. நம் வாழ்வின் கவனச் சிதறல்கள், கலக்கங்கள், தவறான முதன்மைகள் ஆகியவற்றைச் சற்றே ஆராய்ந்து பார்த்து அவற்றைக் களைவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஏழு முத்திரைகள் பதிக்கப்பெற்ற சுருளேட்டைக் காட்சியாகக் காண்கிறார் யோவான். சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் யாரும் இல்லையே என்று அவர் தேம்பி அழுதபோது, மூப்பர் ஒருவர் அவரை ஆற்றுப்படுத்துகிறார்.
நம் வாழ்வின் கையறுநிலையில் நாம் கண்ணீர் வடிக்கும்போது உடனே ஓடிவந்து நம்மைத் தழுவிக்கொண்டு நம் கண்ணீரைத் துடைக்கிறார் கடவுள்.
ஆகவே, நாம் ‘ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுவோம்!’ (திபா 149:1)
இன்றைய நினைவு:
அன்னை கன்னி மரியா எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டதை இன்று நாம் நினைவுகூர்கிறோம். யாக்கோபின் முதல் நற்செய்தி என்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, தொடக்கமுதல் மரியா கொண்டிருந்த சரணடைதல் மனநிலையை நமக்கு எடுத்துரைக்கிறது. கடவுளின் திருமுன் நம் உள்ளத்தைத் திறத்தலும், அவருடைய கைகளைப் பிடித்துக்கொள்தலும் மரியாவிடம் நாம் கற்கிற பாடங்கள்.
நிற்க.
தங்கள் வாழ்வின் கையறுநிலைகளில் கடவுளின் கரம் பற்றி வழிநடக்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 254).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: