இன்றைய இறைமொழி
திங்கள், 16 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் – திங்கள்
எண்ணிக்கை 24:2-7, 15-17அ. திருப்பாடல் 25. மத்தேயு 21:23-27
கண் திறக்கப்பட்டவன்!
கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் காண்கிற வியப்பு என்னவெனில், ‘பார்க்கத் தெரிந்தவர்கள்’ மட்டுமே கிறிஸ்துவைக் கண்டுகொள்கிறார்கள்.
திரைப்படம் ஒன்றில் வரும் நிகழ்வு இது. வங்கியில் மேலாளருக்கும் பணியாளருக்கும் இடையே உரசல் எழுகிறது. பணியாளர் தன் குறுகிய பார்வையால் மேலாளரின் செயல்பாட்டில் குறைகாண்கிறார். மேலாளர் தன் செயல்பாட்டுக்கான விளக்கம் தந்தவுடன் பணியாளர் மன்னிப்பு கேட்கிறார். இவருடைய நாள் இப்படி மோசமானதாகிவிட்டதே என்று சக பணியாளர்கள் வருத்தப்படும்போது, ‘நாளின் 10 நிமிட நிகழ்வு மற்ற 23 மணி நேரம் 50 நிமிடங்களை நிர்ணயிக்கக் கூடாது. 10 நிமிடம் சரியில்லை என்று நகர்ந்துவிட வேண்டும்’ என்கிறார்.
நம் வாழ்வின் நிகழ்வுகள் நமக்கு வெளிப்புறத்தில் எப்படி நிகழ்ந்தாலும், நாம் அவற்றைப் பார்க்கும்விதமே அவற்றுக்கேற்ற பதிலிறுப்பை நாம் அளிக்க உதவுகிறது. நேர்முகமாக, நிறைவாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் பிலயாம் இறைவாக்கு உரையாக்கிறார். பண்டைக் காலத்தில் ‘கடவுளின் பெயரால் சபித்தல்’ என்பது வழக்கத்தில் இருந்தது. எதிரி அல்லது பகைவருக்கு எதிராக ஒருவர் தன் கடவுளின் பெயரால் பழிச்சொல் சொல்லும்போது மற்றவர் அழிந்துவிடுவார். மோவாபு நாட்டு அரசன் பாலாக்கு இஸ்ரயேல் மக்களை அழிப்பதற்காக இறைவாக்கினர் பிலயாமை அழைத்து வரச் செய்கிறார். பிலயாம் செல்ல இயலாதவாறு ஆண்டவராகிய கடவுள் அவரைத் தடுக்கிறார். அதையும் மீறி அவர் செல்ல முயற்சி செய்யும்போது கடவுள் கழுதையின் வாயைத் திறக்கிறார். பிலயாம் கண்கள் திறக்கப்பட புதிய பார்வை பெறுகிறார்.
‘கண்கள் திறக்கப்பட்டவன்’ என்று தன்னை அழைக்கிற அவர், ‘நான் அவரைக் கண்டேன். நான் அவரைப் பார்ப்பேன் … யாக்கோபிலிருந்து விண்மீன் உதிக்கும்’ என்கிறார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவருடைய அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். திருமுழுக்கு யோவானின் விண்ணக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கியதுபோல, இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயங்குகிறார்கள். இயேசுவை மெசியா என்றும், அவருடைய அதிகாரம் விண்ணகம் சார்ந்தது என்றும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பார்வை மாற்றம் பெற்றாலன்றி கடவுளை நாம் கண்டுகொள்ள இயலாது.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ள – நேர்முகமாக, அகன்றதாக – முயற்சி செய்வோம். கிறிஸ்து பிறப்பு நிகழ்வான ஞானியர் நிகழ்வில், ஞானியர் குழந்தையில் யூதர்களின் அரசரைக் காண்கிறார்கள். ஏரோதுவோ குழந்தையை குழந்தை என்று மட்டுமே காண்கிறார்;. அகன்ற பார்வை பெற்றவர்கள் ஞானிகள் ஆகிறார்கள்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நேர்முகமான பார்வை கொண்டிருக்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 273).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: