• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கதவைத் தட்டுகிற கடவுள். இன்றைய இறைமொழி. செவ்வாய், 19 நவம்பர் ’24.

Tuesday, November 19, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 19 நவம்பர் 2024
பொதுக்காலம் 33-ஆம் வாரம், செவ்வாய்
திருவெளிப்பாடு 3:1-6, 14-22. திருப்பாடல் 15:2-3, 4, 5. லூக்கா 19:1-10

 

கதவைத் தட்டுகிற கடவுள்

 

இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகான சொல்லோவியத்தைக் காண்கிறோம்: ‘கடவுள் கதவு அருகில் நின்று தட்டுகிறார்.’ கதவுக்கு வெளியில் நிற்பவர் கடவுள்தான் என்பதை அறிவதற்கு முதலில் நாம் எழுந்து கதவைத் திறக்க வேண்டும். அவரை இல்லத்துக்குள் அனுமதிக்க வேண்டும். விருந்தினராக நம் இல்லம் வருபவர், நமக்கு விருந்து பரிமாறத் தொடங்குகிறார்.

 

இயேசுவைக் காணும் ஆர்வத்தில் காட்டு அத்தி மரத்தில் ஏறி நின்ற சக்கேயுவின் இதயக் கதவுகளைத் தட்டுகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). சக்கேயு உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார். இயேசுவை நோக்கிய அவருடைய பயணம், அவரை மற்றவர்கள் நோக்கித் தள்ளுகிறது. இதற்குக் காரணம் இயேசு சக்கேயுவை நோக்கி மேற்கொண்ட பயணம்.

 

தம்மைத் தேடுவோர் யாவருக்கும் அருகில் கடவுள் நிற்கிறார் (திபா 145:18-19). கடவுளைக் கண்டவுடன் அல்லது கடவுள் அனுபவம் பெற்றவுடன் நம் வாழ்க்கை முழுமையாக மாறுகிறது. கடவுள் என்னும் நபர் நம் இல்லம் வந்தவுடன், நம் இல்லத்தில் உள்ள அனைத்தையும் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது.

 

சக்கேயுவின் பதிலிறுப்பு உடனடியாகவும், முழுமையாகவும், தீர்க்கமாகவும் நிகழ்கிறது.

 

சர்தை திருஅவையின் பதிலிறுப்பு அரைகுறையாக இருக்கிறது, இலவோதிக்கயத் திருஅவையின் பதிலிறுப்பு வெதுவெதுப்பாக இருக்கிறது.

 

கடவுள் நம்முடைய ‘இன்றைய பொழுதில்’ செயலாற்றுகிறார். ஏனெனில் அவரைப் பொருத்தவரையில் இன்று என்பதே நிரந்தரம். நம் வாழ்வின் இன்றைய முழுமையாக நாம் தழுவிக்கொண்டு, நம் இதயக் கதவுகளைத் தட்டும் அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம். அவரே நம் ஆன்மாவின் விருந்து!

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தாண்டி நகர்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 252).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: