இன்றைய இறைமொழி
புதன், 20 நவம்பர் ’24
பொதுக்காலம் 33-ஆம் வாரம், புதன்
திருவெளிப்பாடு 4:1-11. திருப்பாடல் 150:1-2, 3-4, 5-6. லூக்கா 19:11-28
கனி தருதல்
மகிழ்ச்சியாக இருப்பது அல்ல, மாறாக, கனி தருதலே மானிட வாழ்வின் நோக்கமாக இருக்கிறது. படைப்பின் தொடக்கத்தில் மானிடரைப் படைக்கிற ஆண்டவராகிய கடவுள், முதல் படைப்பு நிகழ்வின்படி, ‘பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்கிறார். இரண்டாம் நிகழ்வின்படி, ‘நிலத்தைப் பண்படுத்துவதற்கு’ மனிதனைத் தோட்டத்தில் நிலைநிறுத்துகிறார். ‘மகிழ்ச்சியாக இருங்கள்!’ என்பது அல்ல கடவுளின் கட்டளை, மாறாக, பணி செய்து பொறுப்பாளர்களாகச் செயல்படுங்கள் என்பதே.
காட்டு வெளியில் நாம் காணும் ஒரு சிறு மலர்கூட, தன் முழுமையை அடைகிறது. மானிடராகிய நாம் மட்டுமே, ‘நான் இவ்வளவுதான்’ என்று சுருக்கிக்கொள்கிறோம். கைகளை மூடிக்கொள்கிறோம்.
பத்து பேருக்கு ஒரு மினா (100 தெனாரியம் அல்லது 100 நாள்களுக்குரிய கூலி) எனக் கொடுக்கிறார் தலைவர். மூன்று பேரிடம் கணக்கு கேட்கப்படுகிறது. பத்து, ஐந்து என இருவர் மினாவைப் பெருக்கி நிற்க, மூன்றாவது நபர், ‘இதோ உம்முடையது!’ எனத் தனக்குக் கொடுக்கப்பட்டதை நீட்டுகிறார்.
தன்னிடம் கொடுக்கப்பட்டதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்னும் பொறுப்புணர்வு இருந்ததை நாம் பாராட்டியாக வேண்டும். வெறுங்கையராக நிற்பதற்குப் பதிலாக, கையில் ஏதோ ஒரு மினாவுடனாவது நிற்கிறார்.
அவர் தன் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது தலைவருக்கு கோபத்தை உண்டாக்குகிறது. அவரிடம் உள்ளதும் பறிக்கப்படுகிறது.
ஒற்றை மினாவுடன் அவர் நிற்கக் காரணம் என்ன?
(அ) தலைவர் பற்றிய பயம்.
(ஆ) இருப்பதும் போய்விடுமோ என்னும் பயம்.
(இ) புதிய முயற்சிகள் எடுப்பதற்கான பயம்.
வட்டிக் கடைக்குச் செல்ல வேண்டிய பணம், கைக்குட்டைக்குள் செல்கிறது.
இன்னும் சில கிராமங்களில் கைக்குட்டையில், சேலையின் முந்தியில் பணத்தை மடித்துவைக்கும் வழக்கம் இருக்கிறது. பயன்பாட்டுக்காக என்று பணம் மடித்துவைக்கப்படுகிறது. பணத்தின் பயன்பாட்டு நிலையை முடக்குகிறார் அந்த மூன்றாவது பணியாளர்.
நிகழ்வின் இறுதியில், ‘இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்னும் எச்சரிக்கையும் தரப்படுகிறது.
இயேசுவின் இந்த உவமை தரும் பாடங்கள் எவை?
(ஆ) சீடத்துவம் என்றால் கனி தருதல். கைகளை விரித்துக் கொடுத்தல், ஆபத்துகளை எதிர்கொள்தல்.
(ஆ) தலைவரின் கட்டளைக்குப் பணி செய்தல். ‘இதை வைத்து வியாபாரம் செய்யுங்கள்!’ என்னும் கட்டளையை ஏற்க மறுக்கிறார் பணியாளர்.
(இ) தலைவரின் வருகையின் நேரமும் நாளும் நமக்குத் தெரியாததால் எந்நேரமும் தயார்நிலை அவசியம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வின் நோக்கம் நிறைவேறுமாறு பணிசெய்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 253).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: