இன்றைய இறைமொழி
வெள்ளி, 13 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி
எசாயா 48:17-19. மத்தேயு 11:16-19
கற்பிப்பவரும் வழிநடத்துபவரும்
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிப்பவரும் அவர்களை வழிநடத்துபவரும் தாமே என எடுத்துரைத்து, அவருக்குச் செவிசாய்ப்பதன் பயன்களையும் செவிசாய்க்காமலிருப்பதன் ஆபத்தையும் முன்மொழிகிறார்.
விவிலியத்தில் ஆண்டவராகிய கடவுள் தம்மையே தந்தை எனவும் தாய் எனவும் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்துகிறார். தம் பணிகளாக அவர் இன்று குறிப்பிடுபவை இரண்டு: ‘நான் உனக்குக் கற்பிக்கிறேன்,’ ‘நான் உன்னை வழிநடத்துகிறேன்.’ இஸ்ரயேல் மக்கள் ஒருவர் மற்றவருக்கு ஆண்டவருடைய நியமங்களைக் கற்பிப்பது பற்றி இணைச்சட்டம் 6 எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியதன் மேன்மையை இணைச்சட்டம் 8-இல் வாசிக்கிறோம்.
கற்பிக்கிற ஒருவர் கற்றுக்கொள்கிற ஒருவருக்கு அறிவை வழங்குகிறார். வழிடத்துகிற ஒருவர் வழிநடத்தப்படுகிற ஒருவர் தாம் அடைய வேண்டிய இலக்கை அடைய உதவி செய்கிறார். கற்பித்தலும் வழிநடத்துதலும் மற்றவர் செவிகொடுத்தலில்தான் நிறைவு பெறுகிறது.
ஆண்டவராகிய கடவுளுக்கு இஸ்ரயேல் மக்கள் செவிசாய்க்கும்போது அவர்களுக்குக் கிடைக்கிற பயன்கள் மூன்று: (அ) அவர்கள் வாழ்வு வளமை பெறும். (ஆ) அவர்கள் அனைத்திலும் வெற்றி காண்பர். (இ) அவர்களுடைய வழித்தோன்றல்கள் பலுகிப் பெருகும்.
ஆனால், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குச் செவிசாய்க்க மறுத்ததால் அவர்கள் அழிவைக் காண்கிறார்கள். அவர்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். அடிமைத்தனத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய பெயர் கடவுளின் திருமுன்னின்று அழிக்கப்படுகிறது.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானுடைய பணிகளும் தம் பணிகளும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என உணர்கிற இயேசு, தம் சமகாலத்தவரின் மனநிலையை உருவகமாக எடுத்துரைக்கிறார். குழந்தைகள் சந்தை வெளியில் விளையாடுகிற விளையாட்டு ஒன்றை உருவகமாகக் காட்டி, அடிக்கடி விதிகளை மாற்றிக்கொள்ளும் குழந்தைகள் போல இருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு இன்பம் தருகிற ஒன்றையே நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார்.
இறுதியில், ‘ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று’ என்கிறார். அதாவது, ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டார் அதற்கேற்ற செயல்களைச் செய்வதோடு, அதற்கேற்ற பயன்களையும் பெறுவர்.
மெசியா வாசிப்பில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை நிராகரிக்கிறார்கள். அருள்பொழிவு பெற்றவராக (கிறிஸ்து) தங்கள் முன் நின்ற இயேசு கிறிஸ்துவையும் அவருடைய முன்னோடியான திருமுழுக்கு யோவானையும் மக்கள் நிராகரிக்கிறார்கள். கடவுளின் ஞானமாக நம்மிடம் வருகிறார் இயேசு. அவரை ஏற்றுக்கொள்பவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்ய வேண்டும்.
இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?
(அ) ஆண்டவராகிய கடவுள் நமக்குக் கற்பிக்கிறார், அவர் நம்மை வழிநடத்துகிறார் எனில், அவரிடம் கற்றுக்கொள்ளவும் அவரால் வழிநடத்தவும்படும்படி நம்மையே அவருக்குக் கீழ் தாழ்த்த வேண்டும். அமர்கிற ஒருவரே கற்றுக்கொள்கிறார். கையை விரித்துக் கொடுப்பவரே வழிநடத்தப்படுகிறார்.
(ஆ) சில நேரங்களில் வாழ்வின் முதன்மைகளில் நாம் செயலாற்றுவதற்குப் பதிலாக, குழந்தைகள்போல சாக்குப் போக்குச் சொல்கிறோம். ஏனெனில், செயலாற்றுதல் நமக்கு வலியைத் தருகிறது. ஆனால், அடுத்தடுத்த செயல்பாடுகள் என நகர்ந்தால் நாம் யோவான் போல இயேசு போல தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இல்லையெனில், குழந்தைகள்போல வீதியிலேயே அமர்ந்திருப்போம்.
(இ) நம் உறவுநிலைகளில் நாம் மற்றவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிற முற்சார்பு எண்ணங்களும் பயங்களும் எவை என அறிந்து அவற்றை நாம் களைந்துவிட்டுத் தாராள உள்ளத்துடன் அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ ஆண்டவரிடம் கற்றுக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 271).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: