இன்றைய இறைமொழி
ஞாயிறு, 10 நவம்பர் 2024
ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு
1 அரசர்கள் 17:10-16. எபிரேயர் 9:24-28. மாற்கு 12:38-44
கலயமும் காசும்
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் இரு கைம்பெண்களைக் காண்கின்றோம்.
முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தன் இறைவாக்கினர் எலியாவை சாரிபாத்தில் உள்ள கைம்பெண்ணின் இல்லத்திற்கு அனுப்புகின்றார். கதையை மேலோட்டமாக வாசித்தால் எலியா, கைம்பெண்ணைக் காப்பாற்றுவது போல இருக்கிறது. ஆனால், இங்கே கடவுள் கைம்பெண் ஒருத்தியைப் பயன்படுத்தித் தன் இறைவாக்கினரை உயிருடன் வைத்துக்கொள்கின்றார். கடவுள் இப்படித்தான் சில நேரங்களில் – சாமுவேலின் தாய் அன்னாவை, சிம்சோனின் தாயை, திருமுழுக்கு யோவானின் தாய் எலிசபெத்தை – மனிதர்களின் நொறுங்குநிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளையும் விழுங்குகிறார்கள் என எச்சரிக்கின்ற இயேசு, தன்னிடம் உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டுகின்றார். ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ளது அனைத்தையும் போட்டுத்தான் ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டுமா? என்ற எதிர்கேள்வியை எழுப்பி புரட்சி செய்திருக்க வேண்டிய இயேசு, அவரின் காணிக்கை இடும் செயலைப் பாராட்டுவது எனக்கு நெருடலாக இருக்கிறது. கைம்பெண்கள் தங்களுக்கென உள்ளதையும் காணிக்கைப் பெட்டியில் போட வைத்த ஆலயத்தையும், சமூக மற்றும் சமய அமைப்புகளையும் அவர் சாடியிருக்கக் கூடாதா? தன்னிடம் உள்ளது அனைத்தையும் கொடுத்த இக்கைம்பெண் காணிக்கை போடுவதற்கு முன்மாதிரி என்று இன்றைய அருள்பணியாளர்களால் வர்ணிக்கப்படுவது நம் வேதனையைக் கூட்டுகிறது. கைம்பெண்களின் கடைசிக் காசுகளை வைத்துத்தான் ஓர் ஆலயமும் அதைச் சார்ந்திருக்கின்ற குருக்களும் தங்கள் இருத்தலைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அப்படிப்பட்ட அமைப்பு தேவையா? என்ற கேள்வியும் நம்மில் எழுகின்றது.
இந்த இரு கைம்பெண்களும் புத்திசாலிகள்.
இவர்கள் தங்கள் கலயத்தாலும், காசுகளாலும் கடவுளுக்கே சவால் விடுகின்றனர். கடவுளர்களைத் தங்களுக்கே பணிவிடை செய்ய வைக்கின்றனர். தங்கள் பசி மற்றும் வறுமையை புரட்சியின் அடிநாதங்களாக மாற்றுகின்றனர்.
எப்படி?
எலியா தன் இறைவாக்குப் பணியை மிகவும் கடினமான காலத்தில் செய்கின்றார். சாலமோனுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே ‘இஸ்ரயேல்’, தெற்கே ‘யூதா’ என இரண்டாகப் பிரிகிறது. வடக்கே ஆகாபு ஆட்சி செய்தபோது தன் நாட்டை சிலைவழிபாட்டின் நாடாக மாற்றுகின்றார். தன் பெனிசிய மனைவி ஈசபேல் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தினால் இஸ்ரயேலின் கடவுளைக் கைவிட்டு, பாகால் வழிபாடு செய்பவரா மாறுகின்றார் ஆகாபு. இஸ்ரயேல் நாட்டின் அரச சமயமாகவும் பாகால் வழிபாட்டை ஏற்படுத்துகின்றார். அரசரைப் பின்பற்றுகின்ற பலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து பாகாலுக்கு ஊழியம் புரிகின்றனர். பாகால் கடவுள் புயல்களின் கடவுளாக இருந்ததால் மழைக்குக் காரணமானவராக இருந்தார். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இஸ்ரயேல் மக்களுக்கு மழை அதிகம் தேவைப்பட்டதால் பாகால் கடவுள்மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது. அரசனின் இச்செயலைக் கண்டிக்கின்ற எலியா, அரசனின் எதிரியாக மாறியதால், துன்புறுத்தப்பட்டு தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் எலியாவை சாரிபாத்தில் உள்ள கைம்பெண் ஒருவரிடம் அனுப்புகின்றார். இந்த நகரம் பெனிசியாவில் உள்ளது. இந்த நகரத்தார் அனைவரும் பாகால் வழிபாடு செய்வோர் ஆவர். எலியா செல்லும் காலம் கொடிய பஞ்சத்தின் காலம். இந்தப் பஞ்சத்தை ஆண்டவர்தாமே உருவாக்குகின்றார். அரசன் ஆகாபு செய்த குற்றத்திற்காக கடவுள் ஏன் நாட்டையும், அதில் உள்ள குற்றமற்றோரையும் தண்டிக்க வேண்டும்? மழையை நிறுத்துவதன் வழியாக ஆண்டவராகிய கடவுள் பாகால் கடவுளின் இருத்தலைப் பொய்யாக்குகின்றார். ஏனெனில், மழைபொழிவதை பாகால் கடவுள் பூமியோடு நிகழ்த்துகிற உடலுறவு எனக் கருதினார்கள் பாகால் வழிபடுநர்கள். எலியா சந்தித்த கைம்பெண் பாகால் வழிபாடு செய்பவர் என்பதை அப்பெண்ணின் வார்த்தைகளே சொல்கின்றன. ‘வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!’ என எலியாவைப் பார்த்துச் சொல்கின்றார் அவர். ஆண்டவராகிய கடவுள் பற்றி அவர் எப்படிக் கேள்வியுற்றார்? எலியா அக்கடவுளின் இறைவாக்கினர் என்பதை எப்படி அறிந்துகொண்டார்? இந்தப் பெண்ணின் அறிவு நமக்கு வியப்பளிக்கிறது.
முதலில் தண்ணீர் கேட்ட எலியா, பின்னர் அப்பமும் கேட்கின்றார். தயங்கி நிற்கின்றார் பெண். ஏனெனில் அவர்களிடம் இருப்பது கடைசிக் கை மாவும், பாட்டிலின் தூரில் உறைந்து கிடக்கும் சில எண்ணெய்த்துளிகளும்தாம்! ‘அதன்பின் சாகத்தான் வேண்டும்’ என்று இறப்பதற்கும் தயாராக இருந்தார் கைம்பெண். ‘ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது. கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது’ என்கிறார் எலியா. எலியாவின் இறைவாக்கு உண்மையாகிறது. அந்தக் கலயம் எலியாவுக்கும், கைம்பெண்ணுக்கும், அவருடைய மகனுக்கும், வீட்டாருக்கும் உணவளிக்கும் அமுதசுரபியாகவும் அட்சய பாத்திரமாகவும் மாறுகின்றது.
எலியாவின் சொற்களை நம்புகின்றார் கைம்பெண். கலயம் வற்றினால் தோற்பது கைம்பெண் அல்ல, எலியாவும் அவருடைய ஆண்டவரும் என்பதால் துணிகின்றார் கைம்பெண். ஒரே நேரத்தில் எலியாவையும் எலியாவின் கடவுளையும் நம்புகின்றார் கைம்பெண்.
நற்செய்தி வாசகம் மூன்று மனிதர்களை மையமாக வைத்துச் சுழல்கிறது: (அ) மறைநூல் அறிஞர்கள் (அல்லது) திருச்சட்ட வல்லுநர்கள், (ஆ) பணக்காரர்கள், மற்றும் (இ) ஏழைக் கைம்பெண். மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் குடியியல் மற்றும் சமயச் சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் பெரிதும் மதிக்கப்பெற்றனர். மதிப்பின் அடையாளமாக நீண்ட தொங்கலாடை அணிந்தனர். தொழுகைக் கூடங்களிலும் மக்களின் கூடுகைகளிலும் இவர்களுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டது. சட்டம்சார்ந்த ஆலோசனைகளுக்கு இவர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. ஆக, அரசுசார் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு இவர்கள் பிறரின் தாராள உள்ளத்தையும் கைகளையும் நம்பியிருந்தனர்.
இவர்கள் ‘கைம்பெண்களின் வீடுகளை விழுங்குகிறார்கள்’ எனச் சொல்கிறார் இயேசு. சில திருச்சட்ட அறிஞர்கள் தங்களுடைய வருமானம் மற்றும் வசதிகளுக்காக பணக்காரக் கைம்பெண்களோடு இணைந்து வாழ்ந்தனர். இக்கைம்பெண்கள் தங்களுடைய கணவரின் கட்டுப்பாட்டில் இல்லாததால் பணம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களாக இருந்தனர். தங்களுடைய அழகான வார்த்தைகளாலும், நீண்ட இறைவேண்டல்களாலும் இவர்கள் கைம்பெண்களை ஈர்த்து அவர்களிடமிருந்து பணம் பறித்தனர். சில நேரங்களில் அவர்களுக்கு எதிராக வழக்காடி அவர்களுடைய உரிமைச்சொத்து அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டனர். சமயத்தின் பெயராலும் சமயத்தின் சட்டங்களின் பெயராலும் கைம்பெண்களை மறைநூல் அறிஞர்கள் பயன்படுத்துவதையும் பயமுறுத்துவதையும் சாடுகின்றார் இயேசு. ஆக, தங்கள் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள் தங்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஏழைக் கைம்பெண்ணுக்கு வேறு பிரச்சினை இருந்தது. எருசலேம் ஆலயம் மற்றும் குருக்களின் நலனுக்காக ஒவ்வொரு யூதரும் அரை ஷெக்கேல் வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த வரியை எருசலேம் ஆலயத்தில் உள்ள காணிக்கைப் பெட்டியில் அவர்கள் போட வேண்டும். ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரு செப்புக் காசுகளைப் போடுகின்றார். கொடுக்க வேண்டிய வரியில் 60இல் 1 தான் இது. ஆலய வரி கட்டும் அளவுக்கு அவளிடம் பணம் இல்லை. தன்னிடம் உள்ள அனைத்தையும் அவள் போடுகின்றாள். கடவுள்மேல் கொண்டுள்ள பிரமாணிக்கத்தால் தான் அனைத்தையும் போட்டாரா? அல்லது கடவுள் மேல் உள்ள கோபத்தால் – என்னிடமிருந்து என் கணவனை எடுத்துக்கொண்டாய்! என் பணத்தை எடுத்துக்கொண்டாய்! என் பிள்ளைகளை எடுத்துக்கொண்டாய்! என் உடல்நலத்தை எடுத்துக்கொண்டாய்! இதோ, இந்தக் காசுகளையும் நீயே எடுத்துக்கொள்! என்ற மனநிலையில் – போட்டாரா? என்று தெரியவில்லை. ஆனால், அவர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளவில்லை.
தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்பதால் இனி அவரைக் கடவுளே பராமரிக்க வேண்டும். ஆக, தன்னிடம் உள்ளதை முழமையாக இழந்த அவர் இறைமகன் இயேசுவால் முன்மாதிரியான நபராகக் காட்டப்படுகின்றார். ஆலய வரி என்பது இறைவனின் பராமரிப்புக்காக மக்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை. மற்றவர்கள் இக்காணிக்கையை தங்களிடமிருந்த மிகுதியிலிருந்து போட்டனர். அதாவது, இறைப்பராமரிப்புக்காக நன்றி சொல்வதற்கென அவர்கள் காணிக்கை அளித்தாலும், தங்களைத் தாங்களே பராமரிப்பதற்கென்று அவர்கள் இருப்பை வைத்திருந்தனர். ஆனால், கைம்பெண்ணோ முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பின்மேல் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார்.
முதல் வாசகத்தில், தன் கலயம் முழுவதையும் காலியாக்கி கடவுளின் இறைவாக்கினருக்கு உணவளிக்கிறார் கைம்பெண்.
நற்செய்தி வாசகத்தில், தன் காசு முழுவதையும் காலியாக்கி கடவுளின் மகன் முன் உயர்ந்து நிற்கிறார் கைம்பெண்.
இந்த இருவரும் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
(அ) இறைப்பராமரிப்பின்மேல் நம்பிக்கை
‘வானத்துப் பறவைகளுக்கு உணவும் வயல்வெளி மலர்களுக்கு உடையும் வழங்கும் இறைவன்’ தங்களுக்கும் உணவளிப்பார் என்று நம்பினர். முதல் வாசகத்தில், முதலில் அக்கைம்பெண் தன் கலயத்தையே பார்க்கின்றார். ஆகையால்தான், உண்டு முடித்தபின் நானும் என் மகனும் இறப்போம் என்கிறார். ஆனால், எலியாவின் இறைவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் துணிந்து புறப்படுகின்றார். இந்த ஒற்றைக் கைம்பெண் அந்தக் கலயத்தைக் கொண்டு ஊருக்கே உணவளித்திருப்பாள். கலயத்தில் மாவும் எண்ணெயும் குறைவுபடாததை ஒட்டுமொத்த ஊரும் அறிந்திருக்கும். பாகால் வழிபாடு நடக்கும் இடத்திலேயே ஆண்டவராகிய கடவுள் தன் பராமரிப்பை நிலைநிறுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் ஏழைக் கைம்பெண் ஆலய வரி என்பதை இறைப்பராமரிப்புக்கான நன்றி என்று பார்க்கின்றார். அனைத்தையும் கொடுக்கின்றார். ‘அநாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆண்டவர் ஆதரிக்கின்றார்’ (காண். திபா 146) என்னும் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை அறிந்தவராக இருந்திருப்பார் இக்கைம்பெண்.
(ஆ) மனச் சுதந்திரம்
நான் எதைப் பிடித்திருக்கிறேனோ, அதுவே என்னைப் பிடித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாய்க்குட்டியை கயிறு ஒன்றால் கட்டி நான் நடத்திச் செல்கிறேன் என்றால், முதலில் நான் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பது போலத்தான் இருக்கும். ஆனால், அடிகள் நகர நகர, நாய்க்குட்டிதான் என்னைப் பிடிக்கத் தொடங்குகிறது. என்னைவிட்டு அது ஓடிவிடக் கூடாது என நினைக்கின்ற நான், அதைவிட்டுவிட்டு நான் ஓட முடியாத நிலைக்கு மாறிவிடுகிறேன். செல்வம், பெயர், புகழ், அதிகாரம் அனைத்தும் அப்படியே. மேற்காணும் கைம்பெண்கள் இருவரும் எதையும் பற்றிக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இது இவர்களுடைய மனச்சுதந்திரத்தின் அடையாளமே. விரக்தியின் அடையாளமாக இருந்தால் முதல் கைம்பெண் கலயத்தை உடைத்துப் போட்டிருப்பார். இரண்டாம் கைம்பெண் செப்புக் காசுகளை வெளியே நின்று ஆலயத்தின்மேல் எறிந்திருப்பாள்.
(இ) வலுவற்றவர்களுடன் உடனிருப்பு
லூக்கா நற்செய்தியின்படி தம் பணியை நாசரேத்தில் தொடங்குகின்ற இயேசு, எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டதை மேற்கோள் காட்டுகின்றார். புறவினத்துக் கைம்பெண் என்ற நிலையில் வலுவற்று நின்ற அவருக்கு இறைவன் துணைநிற்கின்றார் கடவுள். எருசலேம் ஆலயத்தில் தங்களிடம் உள்ளதிலிருந்து காணிக்கை இட்ட பலர்முன் வலுவற்று நின்ற கைம்பெண்ணைப் பாராட்டுவதன் வழியாக அவருக்கு நற்சான்று பகர்ந்து அவருடன் உடன் நிற்கின்றார் இயேசு. இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் எருசலேம் ஆலயத்தின் தலைமைக்குருவையும், வானக எருசலேமின் ஒப்பற்ற தலைமைக்குரு இயேசுவையும் ஒப்பிட்டு, இயேசுவின் குருத்துவம் அவர் வலுவற்றவர்களுக்குத் துணையாக நிற்பதில் அடங்கியுள்ளது என்கிறார் (காண். எபி 4). இன்று வலுவற்றவர்களோடு நாம் உடன் நிற்கத் தயாரா? வலுவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு நாம் எப்படி வலு சேர்க்க இயலும்?
இறுதியாக,
கலயம், காசு என அனைத்தும் புரட்சியின், மாற்றத்தின், வாழ்வின் கருவிகள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: