• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கல்லறையும் கடவுளும். இன்றைய இறைமொழி. திங்கள், 3 பிப்ரவரி ’25.

Monday, February 3, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 3 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – திங்கள்
எபிரேயர் 11:32-40. திருப்பாடல் 31. மாற்கு 5:1-20

 

கல்லறையும் கடவுளும்

 

மாற்கு நற்செய்தியாளர் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதற்கும், அவருடைய இலக்கியத்திறத்திற்கும் இன்றைய நற்செய்தி வாசகம் சான்று பகர்கிறது. ‘தீய ஆவி பிடித்தவர், கூட்டம், இயேசு’ என்று முக்கோணமாக நகர்கிறது வாசகம். மாற்கு நற்செய்தியில் பெரும்பாலான நேரங்களில் ‘கூட்டம்’ என்பது சீடத்துவத்துக்குத் தடையாக இருக்கிறது.

 

கட்டுக்குள் அடக்க முடியாத அளவுக்கு இருந்த தீய ஆவிகளை விரட்டுகிற இயேசு, தீய ஆவி பிடித்தவருக்கு நலம் தருகிறார். சங்கிலியால் கட்ட முடியாத அளவுக்கு வன்முறை கொண்டவராக, பகலிலும் இரவிலும் கல்லறைகளில் மலைகளில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தவராக இருந்தவரைப் பற்றி அச்சப்படாத ஊர் மக்கள், அவர் நலம் பெற்று இயேசுவுக்கு அருகில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது அச்சம் கொள்கிறார்கள். நிகழ்வின் இறுதியில் தானும் இயேசுவோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிற நலம் பெற்றவரை அவர்தம் இல்லம் நோக்கி அனுப்புகிறார் இயேசு.

 

மூன்று பாடங்களை நாம் கற்றுக்கொள்வோம்:

 

(அ) இயேசு காட்டிய இரக்கம்

 

தீய ஆவி பிடித்தவரை எல்லாரும் பார்க்கிறார்கள். அவருடைய பரிதாப நிலை இயேசுவின் பரிவைத் தூண்டுகிறது. மனிதர் ஒருவர் தூக்கமில்லாமலும் தனிமையிலும் வாடுவதைக் காண்கிற இயேசு அவர்மேல் பரிவு கொள்கிறார். ‘இவர் எப்படி இருக்கிறார்’ என்பதைக் கண்டதால், ‘இவர் எப்படி மாற முடியும்’ என்பதைக் காண்கிறார் இயேசு. இயேசுவின் இரக்கம் அவருக்கு நலம் தருகிறது. மற்றவர்கள் துன்புறும்போது நாம் அவர்களுடைய துன்பத்தை அகற்றுமாறு அவர்கள்மேல் இரக்கம் கொள்தல் நலம். இரக்கம் என்னும் உணர்வு இருக்கும்போதுதான் அது செயலாக மாறுகிறது.

 

(ஆ) இயல்புநிலை மாறும்போது அச்சம்

 

‘இருக்கிற ஒன்று அப்படியே இருக்க வேண்டும்’ என்பது நம் உள்ளத்தில் உள்ள ‘கூட்டத்து உணர்வு.’ நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் மாற்றம் வரும்போது நாம் அச்சம் கொள்கிறோம். தீய ஆவி பிடித்தவர் தீய ஆவி பிடித்தவராக இருக்க வேண்டும், வறியவர் வறியவராக இருக்க வேண்டும், பெண் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நாம் சில வரையறைகளை வைத்துக்கொள்கிறோம். அவற்றில் மாற்றம் வரும்போது நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறோம். நம் முன் நடந்தேறுகிற நல்லவற்றை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவம் அவசியம்.

 

(இ) கல்லறையா? கடவுளா?

 

கல்லறைகளில் சுற்றித் திரிந்தவர் நலம் பெற்றவுடன் கடவுளோடு சேர்ந்துகொள்ள நினைக்கிறார். தனிமையிலேயே வாழ்ந்துவிட்ட அவர் மீண்டும் தன் ஊருடன் சேர அச்சம் கொள்கிறார். கடவுளைப் பின்பற்றுதல் சில நேரங்களில் நம் தப்பி ஓடுதலாகக் கூட இருக்கலாம். ஒன்று கல்லறை அல்லது கடவுள் என நினைக்கிறோம். ஆனால், இவை இரண்டுக்கும் நடுவே இன்னொரு வாழ்வியல் எதார்த்தம் இருப்பதை அந்த நபருக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு: ‘உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்’. ஊர் நோக்கிச் செல்வதும், ஊராருக்கு இரக்கத்தை அறிவிப்பதும் சீடத்துவமே. கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நபரை கூட்டத்தில் மீண்டும் சேர்க்கிறார் இயேசு. ஆண்டவரின் இரக்கத்தை நம் அன்றாட வாழ்வில் அறிவித்தல் நலம்.

 

முதல் வாசகத்தில், நம்பிக்கையினால் நற்சான்று பெற்ற மூதாதையர்களுக்கு புகழஞ்சலி செலுத்துகிறார் ஆசிரியர். ‘நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டார் கடவுள்’ என்கிறார் ஆசிரியர். மனிதர்களோடு இணைகிற கடவுள் அவர்களை மீண்டும் சக மனிதர்களோடு ஒருங்கிணைக்கிறார்.

 

‘ஆண்டவரை நம்புவோரின் உள்ளம் உறுதி பெறுகிறது’ (திபா 31).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: