இன்றைய இறைமொழி
வியாழன், 7 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரம், வியாழன்
பிலிப்பியர் 3:3-8. திருப்பாடல் 105:2-3, 4-5, 6-7. லூக்கா 15:1-10
காணாமற்போவதும் கிடைப்பதும்
நாம் காணாமற்போன பொழுதுகளும், காணாமற்போன பொருள்களைத் தேடிய பொழுதுகளும் நமக்கு விரக்தியையும், சோர்வையும், வருத்தத்தையும் தந்தாலும் – காணாமற்போவது என்பது வளர்வதற்கான தளமாகவும் இருக்கலாம். தன் பயணத்தை மிக அழகாக முன்மொழிகிறார் பவுல்: தன்னை முழுவதுமாக இழந்து கிறிஸ்துவைக் கண்டுபிடிக்கிறார். காணாமற்போனது பவுல், ஆனால், அவர் கண்டுபிடித்தது கிறிஸ்து. தான் கண்டுபிடித்த கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கத் தயாரானார் பவுல். நம் வாழ்வின் ’99’ அல்ல, மாறாக, தொலைந்த அந்த ‘ஒன்றே’ நம்மை நிர்ணயிக்கக் கூடியது. அந்த ‘ஒன்று’தான் கிறிஸ்து. அந்த ஒன்றுதான் நம் வாழ்வின் நோக்கம். அதைத் தேடிச் செல்லும்போது நம்மையே இழக்கிறோம். அதைக் கண்டடையும்போது நம்மையே கண்டடைகிறோம்.
முதல் வாசகச் சிந்தனை (பிலி 3:3-8)
(அ) சடங்குகளைக் கடந்த வழிபாடு: உண்மையான வழிபாடு ஆவி சார்ந்ததாக இருக்கிறதே தவிர, நாம் வெளிப்படையாகக் கொண்டாடும் சடங்குகளில் அல்ல. கிறிஸ்துவோடு நாம ஏற்படுத்துகிற நெருக்கமான உறவே உண்மையான வழிபாடு.
(ஆ) உலகுசார் வளங்களை இழத்தல்: நம் பிறப்பு, பின்புலம், படிப்பு, பயணம், புகழ், பெயர், ஈட்டிய செல்வம் அனைத்தும் நமக்கு வெளியிலிருந்து வருகின்றன. அவை தரும் மதிப்பு மிகவும் குறுகிய நேரமே நீடிப்பது. ஆனால், நமக்கு உள்ளிருந்து பிறக்கும் மதிப்பு நீடித்தது. அந்த மதிப்பு கிறிஸ்துவை அறிதலில் தொடங்குகிறது.
(இ) கிறிஸ்துவை அறிதலின் மேன்மை: கிறிஸ்துவைப் பற்றிய அறிவை மேன்மையானதாகக் கருதுகிற பவுல், மேன்மையானது கிடைத்தவுடன் தாழ்வானதைத் தள்ளி விடுகிறார். மேலானது வரும்போது கீழானது மறைய வேண்டும்.
பதிலுரைப் பாடல் சிந்தனை (திபா 105:2-3, 4-5, 6-7)
(அ) கடவுளுடைய வியத்தகு செயல்களை அறிவித்தல், அவற்றுக்கான அவரைப் போற்றுதல்: கடவுளின் வியத்தகு செயல்களை நாம் போற்றி அறிவிக்கும்போது, எதுவும் நம்மால் அல்ல, மாறாக, அவரால்தான் என்னும் தாழ்ச்சி உணர்வும், நன்றியுணர்வும் நம்மில் பிறக்கிறது.
(ஆ) ஆண்டவரையும், அவருடைய ஆற்றலையும், அவருடைய திருமுகத்தையும் தேடுங்கள்: நம் வாழ்வின் தேடலை நெறிப்படுத்துகிறார் ஆசிரியர். ஆண்டவரை நோக்கிய பயணத்தில் நாம் அவரை மட்டுமல்ல, நம்மையும் கண்டுகொள்கிறோம். நம் வாழ்வின் இக்கட்டான நேரத்தில் நமக்கு வலிமை தருபவர் ஆண்டவர்.
(இ) கடவுளின் பிரமாணிக்கம்: நம் முன்னோர்களுக்கு கடவுள் வாக்குறுதிகள் கொடுத்ததோடல்லாமல், அவற்றை நிறைவேற்றுகிறார். கடவுளின் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பிரமாணிக்கம்நிறை அன்பின் வெளிப்பாடுகளே.
நற்செய்தி வாசகச் சிந்தனை (லூக் 15:1-10)
(அ) காணாமற்போனதைத் தேடும் கடவுள்: கடவுளின் இதயம் காணாமற்போவதைத் தேடக் கூடியது. ஒவ்வொரு மனிதரும் கடவுளின் பார்வையில் மதிப்புக்குரியவரே. ஒவ்வொருவரும் தேடப்பட வேண்டியவரே.
(ஆ) மனம் திரும்புதலின், திரும்பி வருதலின் மகிழ்ச்சி: காணாமற்போன ஆடு கிடைத்தவுடன் ஆயன் மகிழ்கிறான், காணாமற்போன நாணயம் கிடைத்தவுடன் இளவல் மகிழ்கிறாள். காணமாற்போன மனிதர் கிடைத்தவுடன் கடவுள் மகிழ்கிறார். மீண்டு வருதல் கடவுளுக்கு மட்டுமல்ல, நமக்கும் நம் பெற்றோருக்கும் நம் நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது.
(இ) கடவுளின் இரக்கத்தைப் பகிர்தல்: காணாமற்போனவர்களைத் தேடுதல் நலம். தங்கள் வாழ்வின் நோக்கத்தை இழந்தவர்களுக்கு வழிகாட்டுதல் நலம்.
நிற்க.
தாங்கள் தொலைத்த அந்த ‘ஒன்றை’ நோக்கியே தங்கள் தேடலை நிலைநிறுத்துகிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 242).
அருள்திரு யேசு கருணாநிதி (@ Sower)
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: