• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

காணிக்கையாகும் கடவுள். இன்றைய இறைமொழி. ஞாயிறு, 2 பிப்ரவரி ’25.

Sunday, February 2, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 2 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

மலா 3:1-4. எபி 2:14-18. லூக் 2:22-40

 

காணிக்கையாகும் கடவுள்

 

குழந்தை இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்த நாளை இன்று கொண்டாடுகின்றோம். ஆண்டவருக்கும் அவருடைய பணிக்கும் தங்களையே அர்ப்பணம் செய்துகொண்டோரின் திருநாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இன்றுடன் கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவு பெறுகிறது. நாம் இன்றைய திருப்பலியில் கைகளில் ஏந்திச் செல்லும் மெழுகுதிரி, புறவினத்தாருக்கு ஒளியாக வெளிப்படுத்தப்பட்ட இயேசுவைக் குறிப்பதோடு, நாம் அன்றாடம் இறைவனுக்கு நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது.

 

இன்றைய முதல் வாசகம் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தின் இறுதி நூல் இது. ‘நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் திடீரென ஆலயத்திற்குள் வருவார்’ என இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இங்கே மூன்று விடயங்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று, ஆண்டவரின் ஆலய வருகை திடீரென நடைபெறும். இரண்டு, ஆண்டவர் ஆலயத்துக்குள் வருகிறார். மூன்று, ஆண்டவரைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள இயலும்.

 

பாபிலோனியப் படையெடுப்பின்போது எருசலேம் நகரம் அழிவுக்குள்ளாகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் இடிக்கப்பட்டு, மக்கள் அடிமைகளாக வெளியேற்றப்பட்டபோது அவர்களோடு சேர்ந்து ஆண்டவரின் மாட்சியும் ஆலயத்தை விட்டு நீங்குகிறது. அன்று முதல் ஆண்டவரின் மாட்சி திரும்ப வர வேண்டும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். இன்றைய நாளில் ஆண்டவரின் மாட்சி இதோ மீண்டும் ஆலயத்திற்குள் வருகிறது. மலாக்கி இறைவாக்கு நிறைவேறுகிறது. அவரை ஆவலோடு எதிர்நோக்கியவர்களின் அடையாளமாக சிமியோன் மற்றும் அன்னா நிற்கின்றனர். அவர்கள் அவரைக் கண்டுகொள்கின்றனர்.

 

இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், ‘கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று’ என எழுதுகின்றார். இயேசுவின் தலைமைக்குரு பணி அவர் மனுக்குலத்தோடு கொண்ட ஒன்றிப்பிலிருந்து தொடங்குகின்றது. எல்லாக் குழந்தைகளைப் போல இயேசுவும் – கடவுளாக இருந்தாலும் – கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றார்.

 

நற்செய்தி வாசகம், இந்த நாளின் நிகழ்வுகளை நம் முன் கொண்டு வருகின்றது. இயேசுவுக்கும் அவருடைய பெற்றோருக்கும் இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது: ஒன்று, குழந்தைப்பேற்றுக்குப் பின்னர் தாய் தூய்மையாக்கப்படும் நாள் இந்நாள். இரண்டு, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யும் நாள் – சில இடங்களில் எட்டாம் நாள் விருத்தசேதனம் என்னும் குறிப்பும் உள்ளது. மூன்று, ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு உரிமையானது என்பதால், பலி செலுத்தி குழந்தையை மீட்டுக்கொள்ளும் நாள்.

 

சிமியோன் மற்றும் அன்னா ஆலயத்தில் நிற்கின்றனர். வாழ்வின் அஸ்தமனத்தில் நிற்கும் இவர்கள் மனுக்குலத்தின் விடியலைக் கைகளில் ஏந்தும் பேறு பெறுகின்றனர். குழந்தையைக் கைகளில் ஏந்துதல் ஒரு கலையும் கூட.

 

(அ) சிமியோன் குழந்தை இயேசுவின் கண்களில் தன் கண்களைக் கண்டார். அதன் வழியாகத் தன் வாழ்வின் நோக்கம் உணர்ந்தார். நோக்கம் நிறைவேறிய அவர் அமைதியுடன் விடைபெறத் தயாராகின்றார்.

 

(ஆ) சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி நின்ற போது, அந்தக் குழந்தை எப்படி மாறும் – இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் – என்பதை உணர்ந்திருந்தார். குழந்தை மாறுவதற்கான ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது.

 

(இ) சிமியோன் குழந்தையின் ஸ்பரிசத்தைத் தன் கைகளில் உணர்கின்றார். ஒரே நேரத்தில் குழந்தையின் வலுவின்மையையும், அது கொண்டிருக்கும் ஆற்றலையும் கண்டு வியக்கின்ற அவர் தன் எதிர்நோக்கு நிறைவேறியது கண்டு மகிழ்கின்றார்.

 

இந்த நாள் நம் வாழ்வுக்கு அளிக்கும் பாடங்கள் எவை?

 

(அ) பொறுமை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எருசலேம் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படுவர். அனைத்துக் குழந்தைகளையும் கண்டு சிமியோன் பரவசமாகவில்லை. காத்திருக்கின்றார். தூய ஆவியின் தூண்டுதலுக்காகக் காத்திருக்கின்றார். உள்ளத்தில் பொறுமை கொண்டிருப்பவர்களே காத்திருக்க இயலும். நாம் இன்று பொறுமை இழந்து நிற்கின்றோம். காத்திருத்தல் தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. விளைவு, தூய ஆவியின் தூண்டுதலை நம்மால் அறிய இயலாமற் போகிறது.

 

(ஆ) புகழ்ச்சி. சிமியோன் கடவுளைப் புகழ்கின்றார். அக்குழந்தை பற்றி பெற்றோர்களிடம் பேசுகின்றார். கடவுளால் நிரம்பியிருக்கும் ஒருவர் எப்போதும் கடவுளைப் புகழ்வதோடு, மற்றவர்களைப் பற்றியும் நேர்முகமாகப் பேசுவார். இன்று நாம் இறைவனை எப்போதெல்லாம் புகழ்கின்றோம்? மற்றவர்களைப் பற்றிய நம் உரையாடல் நேர்முகமாக இருக்கிறதா? அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

 

(இ) எளிமை. இயேசுவின் பெற்றோர் குழந்தைக்கு ஈடாக இரு புறாக்குஞ்சுகளைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர். காளையோ, ஆடோ வாங்க அவர்களால் இயலவில்லை. அவர்களுடைய ஏழ்மையே அவர்களுடைய நொறுங்குநிலையாக மாறுகின்றது. கடவுள் மனுக்குலத்தோடு குறிப்பாக வலுவற்றவர்களோடு கொண்டுள்ள நெருக்கத்தை இது காட்டுகிறது. ‘ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம்’ என்பது தொடக்கத் திருஅவையின் அழைப்பாகவும் இருக்கிறது (காண். கலா 2:10).

 

(ஈ) கடவுள்மைய வாழ்க்கை. கடவுளுக்கு அர்ப்பணமாகும் குழந்தை கடவுளை மையமாகக் கொண்டு வாழத் தொடங்குகின்றது. நம் வாழ்வின் மையம் எது? இடமா? நபரா? அல்லது இறைவனா?

 

(உ) நோக்கம். குழந்தையின் வாழ்வின் நோக்கத்தை சிமியோன் அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கின்றார். வானதூதர் தனக்கு அறிவித்த நாள் முதல் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் சட்டென ஓடவிட்டுப் பார்க்கின்றார் மரியா. நம் வாழ்வின் நோக்கத்தை இறைவன் நமக்குச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துகின்றார். வாழ்வின் இலக்கு என்பது நாம் நிர்ணயிப்பது. வாழ்வின் நோக்கம் என்பது கடவுள் நிர்ணயிப்பது. இலக்கும் நோக்கமும் இணைதல் நலம்.

 

(ஊ) அன்றாட அர்ப்பணம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அர்ப்பணத்திற்கு நம்மை அழைக்கிறது. அர்ப்பணம் செய்கின்ற உள்ளம் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது, எதையும் பற்றிக் கொள்ளாது. ஒருவகையான சுதந்திரம் அல்லது கட்டின்மை அந்த உள்ளத்தில் குடிகொள்ளும்.

 

திருநாள் வாழ்த்துகள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: