இன்றைய இறைமொழி
வியாழன், 31 அக்டோபர் 2024
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் வியாழன்
தீப ஒளித் திருநாள்
எசாயா 9:1-2. எபே 5:8-14. யோவா 9:1-17
(பின்வரும் சிந்தனை, ‘கிறிஸ்து உலகின் ஒளி: தீபாவளி, நேர்ச்சித் திருப்பலி எண் 8:1, பக். 1162-1163’ என்னும் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களின் – எசாயா 9:1-2 (அ) எபே 5:8-14, யோவா 9:1-17 – பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது)
‘பகலை ஆளும் பெருஞ்சுடராகக் கதிரவனையும்
இரவில் ஒளிதர நிலவையும் விண்மீன்களையும்
நீர் தொடக்கத்தில் படைத்தீர்.
காலம் நிறைவுற்றபோது
உலகின் ஒளியாகத் திகழ உம் ஒரே திருமகனை அனுப்பினீர்.
பாவ இருள், அலகை, சாவு ஆகியவற்றின்
ஆதிக்கத்திலிருந்து எங்களை விடுவித்து
உமது வியப்புக்கு உரிய ஒளிக்கு அழைத்துள்ளீர்.’
இன்றைய நாள் திருப்பலிக்கான தொடக்கவுரையில் காணும் மேற்காணும் வார்த்தைகள் மூன்று விடயங்களை மிகவும் சுருக்கமாகவும் அழகாகவும் பதிவு செய்கின்றன:
(அ) கடவுள் ஒருவரே ஒளியின் ஊற்று. அவரே அதைப் படைத்தவர்.
(ஆ) கிறிஸ்துவே உலகின் ஒளி.
(இ) இருளின் காரணிகள் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் ஒளிக்கு நாம் கடந்து போக முடியும்.
ஆக, ஒளியான இறைவன் தன் மகனை உலகின் ஒளியாக அனுப்பி, ஒளிக்கு நம் அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். இதையே இன்றைய முதல் வாசகத்தில் (எபே 5:8-14), புனித பவுல், ‘ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது’ என்கிறார்.
தீப ஒளித் திருநாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்களாகப் பல சொல்லப்பட்டாலும், அடிப்படையாக நம் உள்ளத்தில் இந்த நாளில் எழுகின்ற உணர்வு இதுதான்: ‘கொஞ்ச நேர ஒளியும்கூட – மத்தாப்பு, சங்கு சக்கரம் – நமக்கு மகிழ்ச்சி தருகிறது. நம் கண்கள் ஒளியைக் கண்டு மகிழ, நம் நாக்கு இனிப்பு உண்டு மகிழ்கின்றது.’ மகிழ்ச்சிக்கும் ஒளிக்கும் இனிப்புக்கும் உள்ள தொடர்பை சபை உரையாளர் மிக அழகாக முன்மொழிகின்றார்: ‘ஒளி இனிமையானது (மகிழ்ச்சியூட்டும்). கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதை அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே’ (சஉ 11:7-8).
பொருள்களுக்கு உயிர் தருவது ஒளியே. அதாவது, ஒளி இருக்கும் வரைதான் எனக்கு மற்றவர்களும், மற்றவையும் தெரிகின்றன. என் கண்களை நான் மூடிக்கொண்டால் எல்லாம் மறைந்துவிடுகின்றது
ஒளி நிரந்தரமா? அல்லது இருள் நிரந்தரமா? என்பது பற்றிய கேள்வி இன்னும் விடையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது
ஆண்டவரே தன் ஒளி என்றும், மீட்பு என்றும், தன் விளக்குக்கு ஒளி ஏற்றுகிறவர் என்றும் பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 18, 27).
‘உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழியைக் கொண்டிருக்க மாட்டார்’ (யோவா 8:12) எனச் சொல்கின்ற இயேசு, ‘இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துசெல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது’ (யோவா 12:35).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற மனிதருக்குப் பார்வை தருகின்றார் இயேசு. எதையும் காண இயலாத நிலையில் இருந்த நபர் இப்போது அனைத்தையும் காண்கின்றார். மேலும், இயேசு மெசியா என்பதையும் காண்கின்றார். அவரைச் சுற்றி இருந்த யூதர்களின் கண்கள் ஒளிபெற்று இருந்தாலும் அவர்களால் இயேசுவை மெசியா என்று காண இயலவில்லை.
‘இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது தெரியாது’ என்கிறார் இயேசு. இருளில் நடப்பவர் தான் தொடங்கிய இடத்திலேயே நின்றுவிடுகின்றார். அல்லது தவறி கீழே விழுகின்றார்
இத்திருநாளில் நாம் இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். நாம் ஏற்றுகின்ற விளக்குத் திரிகளும், மத்தாப்புகளும் தரும் ஒளி ஒருவர் மற்றவரின் கன்னங்களில் பட்டு மின்னுகின்றது. இந்த ஒளி என் அக இருள் போற்றுகின்றதா? வாழ்வின் முதன்மைகளை நான் கண்டுகொள்ளவும், அவற்றைப் பின்பற்றவும் அது என்னைத் தூண்டுகிறதா?
ஒளி மாறக் கூடியது, மறையக் கூடியது. இருக்கும் வரை அனைத்தையும் மாற்றக் கூடியது.
தீப ஒளி நம் அகஇருள் போக்குவதாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: