இன்றைய இறைமொழி
திங்கள், 4 நவம்பர் 2024
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் திங்கள்
புனித சார்லஸ் பொரோமியோ, ஆயர் – நினைவு
பிலிப்பியர் 2:1-4. லூக்கா 14:12-14
கைம்மாறு கிடைக்கும்!
‘அனைத்தையும் கடவுளிடமிருந்து அருள்செல்வமாகப் பெற்றுக்கொண்ட நாம் பொருள்செல்வத்தைக் கொண்டு கடவுளையே கடன்படச் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.’
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் முதன்மையான இடங்களைத் தேடக் கூடாது என மொழிந்த இயேசுவின் பார்வை, இப்போது விருந்துக்குத் தம்மை அழைத்தவர்மேல் விழுகிறது. விருந்துக்கு அழைப்பவர்கள் அல்லது விருந்து வைப்பவர்கள் பெற்றிருக்க வேண்டிய மனநிலையையும் செயல்பாட்டையும் இயேசு எடுத்துரைப்பதே இன்றைய நற்செய்தி வாசகம்.
இயேசுவின் போதனையில் மையமாக இருக்கிற ஒரு சொல் ‘கைம்மாறு’ அல்லது ‘பரஸ்பரம்.’
சமூக உறவுகளில் ‘பரஸ்பரம்’ (‘ஒருவர் மற்றவருக்குத் திரும்பிச் செலுத்துவது’) என்பது எழுதப்படாத ஒரு விதி. அதாவது, மனித உறவுகள் கண்ணாடி மாதிரி ஒன்று மற்றொன்றை நோக்கி என பிரதிபலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால், நீங்களும் என்னைத் தொடர்புகொள்ள வேண்டும். நான் உங்களுடைய பிறந்த நாளில் உங்களுக்கு வாழ்த்து சொன்னால் நீங்களும் எனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். நான் உங்களுக்குப் பரிசு தந்தால் நீங்களும் பரிசு தர வேண்டும். நான் உங்களை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தால் நீங்களும் உங்கள் வீட்டுக்கு என்னை விருந்துக்கு அழைக்க வேண்டும். நம் உறவுகள் கைம்மாறு சார்ந்த, அல்லது பயன்களை, பலன்களை எதிர்பார்க்கிற உறவுகளாகவே இருக்கின்றன.
நாம் ஏன் கைம்மாறு சார்ந்த அல்லது பயன்கள் எதிர்பார்க்கிற சமூக உறவுகளைப் பேணுகிறோம்? (அ) இது நம் பயம் போக்குகிறது. இந்த நபரால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவுகிறது. (ஆ) நான் மற்றவருக்குக் கொடுப்பதை மற்றவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது எனக் கருதத் தூண்டுகிறது. (இ) நாம் பெற்றிருக்கிற எதுவும் இலவசமல்ல, மாறாக, நாம் உழைத்துப் பெற்றது. ஆக, உழைத்துப் பெற்ற ஒன்றை நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அது எனக்குத் திரும்பக் கிடைக்க வேணடும் என எண்ணுவது.
கைம்மாறு பற்றிய நம் புரிதலைப் புரட்டிப் போடுகிறார் இயேசு: ‘உங்களைத் திரும்ப விருந்துக்கு அழைத்து கைம்மாறு செய்பவர்களை அல்ல, மாறாக, உங்களுக்குக் கைம்மாறு அளிக்க இயலாத ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியவர்களை அழையுங்கள்!’ மேலும், இவர்களால் கைம்மாறு செய்ய இயலாது. ஆனால், இவர்கள் சார்பாகக் கடவுள் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார் – நீதிமான்கள் உயிர்த்தெழும்போது!
இயேசுவின் இந்த அறிவுரையின் உட்கூறுகள் எவை?
(அ) நாம் பெற்றிருக்கிற வளங்கள் அனைத்தும் இறைவனின் அருள்கொடைகளே! நம் உழைப்பும் திறமையும் வளங்கள் ஈட்டுவதற்குத் துணைநின்றாலும் வளங்களின் ஊற்று கடவுளே.
(ஆ) ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் போன்றவர்கள் இயேசுவின் சமகாலத்தில் தாழ்ந்தவர்கள், பாவிகள் எனக் கருதப்பட்டார்கள். இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட வேண்டும் என்று சொல்வதால் இயேசு அவர்களுடைய மாண்பை உயர்த்துகிறார். மாண்பு, மதிப்பு இவர்களுக்கு நாம் வழங்குவது இரக்கத்தால் அல்ல. மாறாக, நீதியால்!
(இ) நீதிமான்கள் உயிர்த்தெழும்நாளில் கைம்மாறு கிடைக்கும்! மனித வாழ்வு என்பது இந்த உலகுடன் முடிவடைந்துவிடுவதில்லை என்று சொல்லி வாழ்வு பற்றிய நம் பார்வையை அகலமாக்குகிறார் இயேசு. மேலும், நாம் இவ்வுலகப் பொருள்களைக் கொண்டு அவ்வுலகுக்கான அருளைச் சேர்க்க முடியும் என்பதற்கான வழியையும் இயேசு காட்டுகிறார். ‘ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்!’ (நீமொ 19:17) என்னும் முதல் ஏற்பாட்டின் அறிவுரையை விட மேன்மையானதாக இருக்கிறது இயேசுவின் அறிவுரை.
(ஈ) விருந்துக்கு அழைக்கும்போது நம்மைவிட வசதிபடைத்தவர்களையும் சமூக அந்தஸ்தில் மேலாக இருப்பவர்களையும் அழைக்கிறோம். ஏழைகள், உடல்ஊனமுற்றோரை அழைத்தல் நம் சமூக நிலைக்குத் தாழ்வாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், இவர்களை அழைப்பதால் நம் சமூக நிலை தாழ்வதில்லை. மாறாக, இவர்கள் வழியாக நாம் கடவுளையே விருந்துக்கு அழைப்பதால் கடவுளின் திருமுன் நம் நிலை உயர்கிறது. சமூக எதிர்பார்ப்புகளை நாம் கடக்க வேண்டும் என்று சொல்வதுடன், கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை மனத்தில் கொண்டு வாழ அழைக்கிறார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில், ‘என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்!’ என்று தன் குழுமத்தை அழைக்கிற பவுல், ‘நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறைகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
‘அனைத்தையும் கடவுளிடமிருந்து அருள்செல்வமாகப் பெற்றுக்கொண்ட நாம் பொருள்செல்வத்தைக் கொண்டு கடவுளையே கடன்படச் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.’
நிற்க.
வறியவர்களுக்கு உதவுதல் சகோதர அன்பின் வெளிப்பாடு என்று அறிந்தவர்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 239).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: