இன்றைய இறைமொழி
திங்கள், 24 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – திங்கள்
சீராக்கின் ஞானம் 1:1-10. திருப்பாடல் 93. மாற்கு 9:14-29
கையறுநிலையும் நம்பிக்கையும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் ஓட்டும் வல்ல செயல் ஒன்று நடந்தேறுகிறது. இந்த நிகழ்வின் தனித்தன்மை என்னவெனில், சீடர்கள் முயற்சி செய்து பேயை ஓட்ட இயலவில்லை. இயேசு பேயை ஓட்டுகிறார். நிகழ்வின் இறுதியில், நோன்பும் இறைவேண்டலும் பேய் ஓட்டுவதற்கு அவசியம் என்று இயேசு அறிவுறுத்துகிறார்.
இந்த நிகழ்வில் மூன்று பேருடைய கையறுநிலையை நாம் காண்கிறோம்:
(அ) பேய் பிடித்த சிறுவனுடைய தந்தையின் கையறுநிலை. தன் மகனுடைய துன்பத்தை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மகனைப் பிடித்திருந்த பேய் அவனை உடலளவில் துன்புறுத்துவதோடல்லாமல் அவனை அழித்துவிட முயற்சி செய்கிறது. தன் கையறுநிலையில் முதலில் மகனை இயேசுவின் சீடர்களிடமும் பின் இயேசுவிடமும் கொண்டு வருகிறார் இந்தப் பெயரில்லாத் தந்தை. தந்தையர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகள்முன் தங்கள் கையறுநிலையைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால், இங்கே இந்தத் தந்தை தன் மகன் நலம் பெற வேண்டும் என்பதற்காகத் தன் கையறுநிலையை ஏற்றுக்கொள்கிறார்.
(ஆ) சீடர்களின் கையறுநிலை. இயேசுவின் சீடர்கள் ஏற்கெனவே பேய்களை ஓட்டுவதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். பேய்களை ஓட்டியிருக்கிறார்கள். ஆனால், இங்கே சிறுவனைப் பிடித்திருந்த பேயை ஓட்ட இயலாமல் நிற்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக் குறைவாக இருக்கலாம், அல்லது சிறுவனுடைய தந்தையின் நம்பிக்கைக் குறைவாக இருக்கலாம், அல்லது கூட்டத்தினரின் நம்பிக்கைக் குறைவாக இருக்கலாம். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் வல்ல செயல் நடந்தேறவில்லை.
(இ) இயேசுவின் கையறுநிலை. தம் சீடர்களால் பேயை ஓட்ட இயலவில்லை என்று கேள்விப்படுகிற இயேசு, ‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்!’ என்கிறார். ‘உம்மால் ஏதாவது இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்!’ என்று சிறுவனின் தந்தை கேட்டுக்கொண்டபோது, ‘இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்!’ என்று கற்பிக்கிறார்.
இங்கே தம்மால் இயலும் என்பதை, அனைவராலும் இயலும் என்று சொல்லி நம்பிக்கையை அனைவருக்கும் பொதுவாக மாற்றுகிறார் இயேசு.
மேற்காணும் மூன்று கையறுநிலைகளும் ‘நம்பிக்கை’ என்னும் ஒற்றைச் சொல்லால் மாறுகின்றன.
தந்தை தன் மகனை நலம் பெற்றவராகத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்.
சீடர்கள் ‘நோன்பு-இறைவேண்டல்’ ஆகியவற்றின் அவசியத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
சிறுவனுடைய தந்தையின், சீடர்களின் நம்பிக்கை வளர்வதற்கு இயேசு உதவி செய்கிறார்.
நம் வாழ்வின் இக்கட்டான சூழல்களில் நாம் அதிகமாக உணரும் ஓர் உணர்வு ‘விரக்தி,’ ‘சோர்வு,’ அல்லது ‘கையறுநிலை.’ கையறுநிலையை நாம் கடக்க வேண்டுமெனில் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். வெறும் நம்பிக்கை மட்டும் செயல்பாட்டை உருவாக்கிவிடாது. நாம் செயல்பட வேண்டும்.
‘நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க எனக்கு உதவும்!’ என்று சிறுவனுடைய தந்தைபோல நாமும் இயேசுவிடம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.
இன்று நாம் உணர்கிற கையறுநிலையை எண்ணிப் பார்ப்போம்:
நம்மிடம் உள்ள தேவை அல்லது குறைவு (சிறுவனுடைய தந்தை), முயற்சி செய்தும் தோல்வி (சீடர்கள்), எவ்வளவோ செய்து பலனைக் காண இயலாத நிலை (இயேசு) போன்றவை நம் கையறுநிலையாகவும் இருக்கலாம்.
கையறுநிலை மறைந்து வெற்றி பிறக்க வேண்டுமெனில் நம்பிக்கைப் பயணம் அவசியம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரே ஞானத்தின் ஊற்று என்றும், ஞானத்தை வழங்குபவர் என்றும் மொழிகிறார் பென் சீராக்.
ஆண்டவர் தருகிற ஞானமும் நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும் நம் கையறுநிலையிலிருந்து நாம் விடுபட உதவுகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: