இன்றைய இறைமொழி
வெள்ளி, 4 ஏப்ரல் ’25
தவக்காலம் நான்காம் வாரம் – வெள்ளி
சாலமோனின் ஞானம் 2:1, 12-22. யோவான் 7:1-2, 10, 25-30
கொல்லத் தேடுகிறார்கள்!
நீதிமான்களின் இருத்தல் பொல்லாருக்கு இடறலாக இருக்கிறது. ஏனெனில், பொல்லாரின் மனச்சான்றை அவர்கள் நெருடுகிறார்கள்.
முதல் வாசகத்தில், நீதிமான்களுக்கு எதிராக பொல்லார் செய்கிற சூழ்ச்சியை சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் பதிவு செய்கிறார். இங்கே ‘நீதிமான்கள்’ மற்றும் ‘பொல்லார்’ என்னும் வகைப்பாடு அறநெறி சார்ந்தது அன்று. மாறாக, ‘தெரிவு’ சார்ந்தது. கிரேக்கமயமாக்கலால் ஈர்க்கப்பட்டு கிரேக்க ஞானம், கடவுளர், வாழ்க்கைமுறை என்று தங்கள் பாதைகளை மாற்றிக்கொண்டவர்கள் பொல்லார். எபிரேய ஞானம், யாவே கடவுள், வாழ்க்கைமுறை என்று தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர்கள் நீதிமான்கள். இவர்களுடைய இருத்தல் பொல்லாருக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவர்களை அழிக்க நினைக்கிறார்கள்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவைப் பற்றிய குழப்பம் ஒன்று மக்கள் நடுவில் எழுகிறது. அவர் எதிர்க்கப்பட்டவராக இருந்தாலும், அனைவர் நடுவிலும் நின்று உரையாடுகிறார். அவருடைய சொற்களால் ஈர்க்கப்படுகிற மக்கள் அவர் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறுகிறார்கள். ‘இவர் எங்கிருந்து வந்தவர் என்று நமக்குத் தெரியுமே!’ என்று அவர்கள் நினைக்கும்போது, அவர்கள் அறியாத ஒன்று பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.
இயேசுவின் சோதனைகள் பற்றி நாம் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். பாலைநிலத்தில் இயேசுவுக்கு எதிர்கொண்ட மூன்று சோதனைகளை இந்நற்செய்தியாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் சோதனைகளை எதிர்கொண்டார். குறிப்பாக, அவரோடு உடனிருந்தவர்களே அவரை அதிகம் சோதித்தனர். அந்த வகையில், இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், ‘நீர் இவ்விடத்தை (கலிலேயாவை) விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காண முடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!’ என்கின்றனர் (காண். யோவா 7:3-4).
‘உம்மை வெளிப்படுத்தும். நாங்கள் நம்புகிறோம்’ என்று அவர்கள் இயேசுவைச் சோதிக்கின்றனர். ‘நான்தான் மெசியா’ என்று இயேசு தன்னை வெளிப்படுத்தியிருந்தால் யாரும் அவரை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். கேலி பேசிவிட்டு நகர்ந்திருப்பார்கள்.
ஒரு பெரிய புதையலைத் தன்னோடு வைத்திருப்பவர் மற்றவர்களிடம், ‘என்னிடம் புதையல் இருக்கிறது’ என்று சொன்னால் யாரும் அவரை நம்ப மாட்டார்கள். இல்லையா?
இயேசு மறைவாக யூதேயாவுக்கு (எருசலேம்) வருவதையும் அவரை எதிர்கொள்கின்ற மக்கள் அடைகின்ற குழப்பத்தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 7) வாசிக்கின்றோம்.
‘இவரை மெசியா என தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ!’ எனக் குழம்பி நிற்கும் மக்கள், இயேசு எங்கிருந்து வருகிறார் என்று தங்களுக்குத் தெரியுமே என்று சொல்லி அதைக் குறித்து இடறல்படுகின்றனர்.
நேர்மையாளரின் இருத்தல் பொல்லாருக்கு இடறலாக இருக்கிறது என்கிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் (2:1,12-22).
இயேசுவை நான் ஏற்றுக்கொள்வதற்கு இடறலாக இருப்பது எது?
இயேசுவைப் பற்றிய என் குழப்பங்கள் என் தனிப்பட்ட அனுபவம் வழியாகவே தீரும் எனில், அவர் அனுபவம் பெற நான் செய்யும் முயற்சிகள் எவை?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: