• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சட்டமும் மனிதரும். இன்றைய இறைமொழி. செவ்வாய், 21 ஜனவரி ’25.

Tuesday, January 21, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 21 ஜனவரி ’25
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்
எபிரேயர் 6:10-20. திருப்பாடல் 111. மாற்கு 2:23-28

 

சட்டமும் மனிதரும்

 

‘சாப்பிடாமல் இருப்பது’ (நோன்பு இருப்பது) நேற்றைய நற்செய்தியில் பிரச்சினையாக நின்றது. ‘சாப்பிடுவது’ இன்றைய நற்செய்தி வாசகத்தின் பிரச்சினையாக இருக்கிறது. ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து சாப்பிடுகிறார்கள். ஓய்வுநாள் சட்டத்தை அவர்கள் மீறியதாக பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிகழ்வின் பின்புலத்தில் சட்டத்திற்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை எடுத்துரைக்கிறார் இயேசு. மேலும், இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டில் தாவீது அர்ப்பண அப்பங்களை உண்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, தாமே தாவீதின் மகன் என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கிறார்.

 

இரண்டு விடயங்களை நாம் கற்றுக்கொள்வோம்:

 

(அ) சட்டங்கள், புனித புத்தகங்கள், மரபுகள் ஆகிய அனைத்துமே மனிதர்களாகிய நாம் உருவாக்கியவை. நாம் உருவாக்கியவற்றுக்கு நாம் ஆற்றல் அளித்தவுடன் அவை நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. நாமே இவற்றை உருவாக்கினோம், நமக்காகவே சட்டங்கள், புனித நூல்கள் என்பதை நாம் அடிக்கடி நினைவுகூர்வது நல்லது. பரிசேயர்கள் சட்டம் மீறுதலைப் பார்க்கிறார்கள், இயேசுவோ தம் சீடர்கள் பசியாறுவதைப் பார்க்கிறார். ஒரே நிகழ்வுதான். ஆனால், நிகழ்வின் குவியம் மாறுகிறது. பரிசேயர்களின் குவியமாக சட்டம் இருக்கிறது. இயேசுவின் குவியமாக மனிதர்கள் இருக்கிறார்கள்.

 

(ஆ) பிலாத்துவோடு மக்கள் உரையாடுகிற நிகழ்வில், ‘எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்!’ என்று இயேசுவைக் குறித்துச் சொல்கிறார்கள். பல நேரங்களில் சட்டத்தைக் கொண்டு நாம் அன்பையும் இரக்கத்தையும் கொன்றுவிடுகிறோம். எடுத்துக்காட்டாக, கத்தோலிக்கர்களின் திருமணங்கள் பல திருஅவைச் சட்டங்களை மையப்படுத்தி, ‘முறையில்லாத் திருமணங்கள்’ என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. அன்பும் இரக்கமும் கனிவும் திருமணத்தை முறையானவை, முறையற்றவை என்று சொல்ல முடியுமே தவிர, சட்டங்கள் அல்ல. ஒருவர் செய்த தவற்றை நம் சட்டம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், நன்றாக வாழ்கிற நபரைப் பாராட்டுவதை சட்டம் செய்வதில்லை. நாம் சட்டங்கள் படிக்கவில்லை என்றாலும், அன்றாட மனித உறவு நிலைகளில் நாம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்கள்கூட சட்டங்கள்போல மற்றவர்களை நெருக்குகின்றன.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘ஆணையிடுதல்-உறுதிப்படுத்துதல்’ என்பதற்கான சட்டம் கடவுள்-ஆபிரகாம் உடன்படிக்கையில் நிகழ்வதை வாசிக்கிறோம். கடவுளே இங்கு ஆணையிடுவதால் அவருக்கு மேலான ஒன்றின்மேல் அவர் ஆணையிடத் தேவையில்லை.

 

ஆக, சட்டங்களுக்கு விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: