• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

சான்று பகர்தல். இன்றைய இறைமொழி. வியாழன், 3 ஏப்ரல் ’25.

Thursday, April 3, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
வியாழன், 3 ஏப்ரல் ’25
தவக்காலம் நான்காம் வாரம் – வியாழன்
விடுதலைப் பயணம் 32:7-14. யோவான் 5:31-47

 

சான்று பகர்தல்

 

யோவான் நற்செய்தியில் சான்று பகர்தல் என்பது ஒரு முக்கியமான கருத்துரு. இயேசுவை அவருடைய சமகாலத்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஒருவர் ஒரு நற்செயல் செய்தால், அது அவரால் செய்யப்பட்டது என்பதற்கு இன்னொருவர் சான்றளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய மரபாக இருக்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் பொற்கன்றுக்குட்டி நிகழ்வை வாசிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் மோசேயுடன் சீனாய் மலையில் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், கீழே மக்கள் ஆரோனின் தலைமையில் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். இது ஆண்டவரின் கோபத்தைத் தூண்டி எழுப்புகிறது. ஆண்டவரின் கோபம் இஸ்ரயேல் மக்களை அழித்துவிடும் என்ற நிலையில், இஸ்ரயேல் மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார் மோசே. ஆண்டவராகிய கடவுளின் நற்செயலையும் அவருடைய வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டி, அவரின் கோபத்தை மாற்றி, மக்களைத் தண்டனையிலிருந்து தப்புவிக்கிறார் மோசே. இங்கே மோசே ஒரு தன்னலமற்ற தலைவராகத் திகழ்கிறார்.

 

இயேசு தன் சமகாலத்து மக்களிடம் பேசும்போது தனக்கான சான்று என நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றார்:

 

ஒன்று, யோவான். இவர் உண்மைக்குச் சான்று பகர்ந்தார் என்று சொல்லும் இயேசு, அந்த உண்மை என்பது தானே என்று மறைமுமாகக் குறிப்பிடுகின்றார்.

 

இரண்டு, என்னுடைய செயல்களே சான்று. தந்தையின் திருவுளப்படி இயேசு இங்கே ஆற்றும் நற்செயல்கள் சான்றாக அமைகின்றன.

 

மூன்று, என்னை அனுப்பிய தந்தை சான்று. இந்த தந்தை இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு மறைவாக இருக்கின்றார்.

 

நான்கு, மறைநூல் சான்று. மறைநூல் வாழ்வு தருவதாக இருந்தாலும் அவர்கள் இயேசுவைத் தேடி வரத் தயங்கினர்.

 

மேற்காணும் நான்கு சான்றுகளில், முதல் சான்றை, ‘மனிதர் தரும் சான்று’ எனக் குறிப்பிடுகின்றார் இயேசு. முதற் சான்று நேரிடையாக இருந்தாலும், மக்கள் சிறிது காலமே ‘அந்த ஒளியில் தங்க விரும்பினர்’ என்று அவர்களுடைய கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

 

மேலும், மோசேயையும் மக்கள் நம்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

 

இங்கே, நம்புதல், ஏற்றுக்கொள்தல், சான்றுகொள்தல் என்ற மூன்று வார்த்தைகளாக கருத்துரு நகர்கிறது.

 

இயேசுவை அவருடைய சமகாலத்தவர்கள் நம்பவில்லை. ஆகையால், அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. விளைவு, அவர்கள் சான்று பகரவில்லை.

 

மொத்தத்தில் அவர்களுடைய கடின உள்ளத்தால் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

 

இன்றைய முதல் வாசகத்தில் நெருப்பிலிருந்து வெளிப்பட்ட பொன்னாலான கன்றுக்குட்டி இஸ்ரயேல் மக்களின் கடின உள்ளத்தின் உருவகமாக இருக்கிறது என்று நாம் சொல்லலாம்.

 

ஏனெனில், நெருப்பில் விழுகின்ற பொன் நெகிழ்கின்றது. நெகிழ்வாக இருக்கும் வரையில் அதன் உருவத்தை மாற்ற முடியும். இறுகிவிட்டால் அதன் கடினத்தன்மையில் அதன் உருவை மாற்றுதல் அரிது.

 

இறைவனின் அரும்பெரும் செயல்களைக் கண்டு நெகிழாத உள்ளம், கடினப்பட்டே இருக்கும்.

 

இன்று நாம் இறைவனைப் பற்றி மட்டுமல்ல, நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கூட கடின உள்ளம் கொண்டிருக்கின்றோம்.

 

இதையே, ‘கல்லால் ஆன இதயம்’ எனக் கடிந்துகொள்கின்றார் கடவுள்.

 

நம் இதயங்கள் ஒருவர் மற்றவருக்கு நெகிழ்வாவதற்கு முன், எனக்கு நானே என்ற உறவு நிலையில் நெகிழ்வாக இருத்தல் வேண்டும். என்னை மன்னிக்கவும், என்னை ஏற்றுக்கொள்ளவும் அது பக்குவப்பட வேண்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: