இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 ஜனவரி ’25
புனித தேவசகாயம்
யாக்கோபு 1:2-4, 12. திருப்பாடல் 34. மத்தேயு 10:28-33
சிட்டுக்குருவியைவிட மேலானவர்கள்!
இன்று இந்தியத் திருஅவை புனித தேவசகாயம் (இலாசருஸ்) (1712-1752) அவர்களின் நினைவைக் கொண்டாடி மகிழ்கிறது. கட்டுண்ட சங்கிலியும் முழங்கால்படியிட்ட உருவமுமாகக் காட்சி தரும், நம் தாய் மண்ணின் முதல் பொதுநிலைப் புனிதர், துன்பங்களின் வழியாகக் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தவர்.
புனித தேவசகாயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள் மூன்று:
(அ) துன்புறுத்தப்பட்டபோதும் கைவிடாத நம்பிக்கை
துன்பத்தையும் தாண்டிய ஒரு வாழ்வியல் எதார்த்தத்தைக் கண்டதால் நம் புனிதர் துன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கிறிஸ்துவைத் தெரிந்துகொள்தல் என்பது சிலுவையைச் சுமத்தல் என்பதை அறிந்ததால் தனக்கு வந்த துன்பங்களை, அச்சுறத்தல்களை, உடல்சார் வலிகளை, இறுதியில் இறப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். சோதிக்கப்படாத நம்பிக்கை சோர்ந்துபோகும் என்பது புனிதர் தருகிற முதல் பாடம்.
(ஆ) அனைவருடைய சமத்துவமும் மாண்பும்
தன் சமகாலத்துச் சமூகத்தில் நிலவிய சாதியப் பாகுபாட்டைக் களைய முயற்சி செய்தவர் புனித தேவசகாயம். தனிமனித மாண்பை அடிப்படையாகக் கொண்ட சமூகமே நீதியான சமூகம் என உணர்ந்த அவர், பாகுபடுத்தப்பட்ட மக்கள்மேல் காட்டப்பட வேண்டியது இரக்கம் அல்ல, மாறாக நீதி என நினைத்தவர்.
(இ) அன்றாட வாழ்வில் புனிதம்
புனிதம் என்பது அருள்பணியாளர்களுக்கும் துறவியர்களுக்கும் மட்டுமல்ல, மாறாக, பொதுநிலையினருக்கும் சாத்தியம் என்றும், புனிதம் என்பது ஆலய வளாகத்துக்கும் துறவற இல்லங்களுக்கும் மட்டும் உரியது அல்ல, மாறாக, அனைத்து இடங்களுக்கும் உரியது என்றும் அறிந்தவராக, தன் வாழ்வின் மேன்மையோடு ஒருநாளும் சமரசம் செய்துகொள்ளாதவர் நம் புனிதர்.
இன்றைய முதல் வாசகத்தில், துன்பத்தின் வழியாக ஒருவர் பெறுகிற மனத்திடன் பற்றி எடுத்துரைக்கிறார் யாக்கோபு. நற்செய்தி வாசகத்தில் சீடத்துவம் பற்றி தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிற இயேசு, ‘சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மேலானவர்கள்!’ என்கிறார். காட்டுப்பறவைகளைப் பராமரிக்கிற கடவுள் மனிதர்களையும் பராமரிக்கிறார். பொறுமையும் காத்திருத்தலும் விடாமுயற்சியும் நம்பிக்கை வாழ்வில் வெற்றி தரும்.
நம்மைத் துன்புறுத்துபவர்கள் நம் உடலைத் துன்புறுத்த முடியுமே தவிர, நம் ஆன்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
நம்பிக்கைக்குச் சான்றுபகர்தல் என்பது மறைசாட்சியம் தழுவுதல் அல்ல. சின்னச் சின்ன நிகழ்வுகள், தியாகங்கள், முயற்சிகள் வழியாகவும் நாம் சான்று பகர முடியும்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். நன்றியின், மகிழ்ச்சியின், வளமையின் அடையாளமாக நாம் கொண்டாடும் இந்த நாளில் இனிமையும் நன்மையும் நம் வாழ்வில் என்றும் பொங்க வேண்டும் என்று விரும்புவோம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: