இன்றைய இறைமொழி
வியாழன், 12 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வியாழன்
எசாயா 41:13-20. திருப்பாடல் 145. மத்தேயு 11:11-15
சிறியவரும் பெரியவரும்
‘பெரிது சிறிது’ என்பது இறைவனால் நிர்ணயம் செய்யப்படுவது என்றும், நினைத்த நேரத்தில் பெரியதைச் சிறியதாகவும், சிறியதைப் பெரியதாகவும் மாற்றும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்றும், இறைவனுடைய உடனிருப்பால் நம் மேன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலும் என்றும் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
முதல் வாசகத்தில் (எசா 41:13-20), ‘யாக்கோபு என்னும் புழுவே,’ ‘இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே’ எனத் தம் மக்களை அழைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், ‘அஞ்சாதே! நான் உனக்குத் துணையாய் இருப்பேன்!’ என மொழிகின்றார். பண்டைக்கால மேற்கு ஆசியாவில் எகிப்து, அசீரியா, பாபிலோனியா போன்ற நாடுகள் வலிமைமிகு அரசகளாக இருந்தன. அவர்களோடு ஒப்பிடும்போது இஸ்ரயேல் மிகவும் சிறிய நாடாக இருந்தது. இஸ்ரயேல் இனம் மற்ற இனங்களைவிடச் சிறிய இனமாக இருந்ததால் ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தம் சொந்த மக்களாகத் தெரிவு செய்தார். அவர்கள் கடவுளுக்கு நெருக்கமான மக்களினமாக இருந்தாலும் அவர்கள் பாவம் செய்தபோது அவர்களை எதிரிகளின் கைகளில் ஒப்புவிக்கிறார் ஆண்டவர். அந்த வகையில் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குத் தள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்களையே புழு போலவும் பொடிப்பூச்சி போலவும் உணர்கிறார்கள். வலுவற்ற நிலையில் இருக்கும் அவர்களை வலிமையானவர்களாக மாற்றுவதாக எசாயா வழியாக உரைக்கிறார் ஆண்டவராகிய கடவுள். புழு போல இருக்கிற இஸ்ரயேல் நாட்டை போரடிக்கும் கருவிபோல வலிமையுள்ளதாக மாற்றுகிறார் கடவுள். மலைகளையும், குன்றுகளையும் அடித்துத் தவிடுபொடியாக்கும் அளவுக்கு அது வலிமை மிக்கதாக இருக்கும்.
இங்கே மூன்று மாற்றங்கள் நிகழ்கின்றன: (அ) வலுவற்ற இஸ்ரயேல் இனம் இறைவனின் துணையால் வலிமை பெறுகிறது. (ஆ) தாழ்வுற்ற நிலையில் இருந்த மக்கள் விடுதலை பெற்றவர்களாய் இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைகிறார்கள். (இ) வறுமையிலும் தாகத்திலும் இருக்கிற மக்கள் வளமையையும் நீரையும் கண்டுகொள்கிறார்கள்.
நற்செய்தி வாசகத்தில் (மத் 11:11-15), திருமுழுக்கு யோவானின் மேன்மையை எடுத்துரைக்கின்ற இயேசு, தொடர்ந்து, விண்ணரசில் சிறியவர்கள் அவரைவிட மேன்மையானவர்கள் என்று மொழிகின்றார். இயேசுவின் சமகாலத்தில் திருமுழுக்கு யோவானை மக்கள் இறைவாக்கினராகவும் மெசியாவின் முன்னோடியாகவும் கருதினார்கள். தாம் மெசியா அல்ல என்பதை திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகவே அறிவித்தார். ஏரோது அரசன் அவரைக் கொலை செய்கின்றார். திருமுழுக்கு யோவானின் இரத்த சாட்சியம் அவருடைய மேன்மையைக் கூட்டுகிறது. கடவுள் தமக்குக் கொடுத்த பணியை முழுமையாக நிறைவேற்றுகிறார் யோவான். கடவுளுடைய தெரிவு அவரைப் பெரியவர் நிலைக்கு உயர்த்துகிறது.
இயேசுவின் சீடர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததோடு, மற்ற யூதக் குழுக்களோடு ஒப்பிடுகையில் வலிமையற்றவர்களாகவும் சிறியவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களை விண்ணரசின் உறுப்பினர்களாக மாற்றுகிறது. விண்ணரசின் உறுப்பினர்கள் என்னும் நிலையில் அவர்கள் மேன்மையை அடைகிறார்கள். ஆக, நம்பிக்கையின் வழியாக சீடர்கள் மேன்மையை அடைகிறார்கள்.
திருமுழுக்கு யோவான் தம் மேன்மையைத் தக்கவைத்துக்கொண்டதுபோல, சீடர்களும் தங்கள் மேன்மையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மெசியா வாசிப்பில், வலுவற்றவர்களுக்கு வலிமை தருகிறார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் தருகிற மேன்மை அவர் நமக்கு விடுக்கிற அழைப்பு வழியாகவும், அவர்மேல் நாம் கொள்ளும் நம்பிக்கை வழியாகவும் வருகிறது. வலுவற்ற குழந்தையாகக் கடவுள் நம் நடுவில் வருகிறார். வலுவற்ற நிலையைத் தாமே அவர் உணர்ந்திருப்பதால் நம் வலுவற்ற நிலைகளில் நமக்குத் துணையாக நிற்கிறார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?
நம் பெருமையும் சிறுமையும், வலிமையும் வலுவின்மையும், மேன்மையும் தாழ்வும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பொருத்தே அமைகின்றன. புழு போல இருப்பவர்களை இரும்புத் தூண்போல மாற்றுகிற கடவுளிடம் சரணடைதல் நலம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளே தங்கள் வலிமை என்று உணர்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 270).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: