இன்றைய இறைமொழி
திங்கள், 30 செப்டம்பர் ’24
பொதுக்காலம் 26-ஆம் வாரம், திங்கள்
புனித எரோணிமுஸ், நினைவு
யோபு 1:6-22. லூக்கா 9:46-50
சிறியவற்றின் வழி மேன்மை
ஆற்றல், அதிகாரம், அந்தஸ்து, செல்வம், ஆள்பலம் ஆகியவற்றைக் கொண்டு மேன்மையை வரையறுக்கிறது நம் உலகம். ஆனால், தாழ்ச்சி, எளிமை, பற்றுறுதி ஆகியவைவே உண்மையான மேன்மைக்கான வழிகள் என எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள். கடவுள் மேன்மையைப் பார்க்கும் விதமும் இந்த உலகம் மேன்மையைப் பார்க்கிற விதமும் ஒன்றுக்கொன்று முரணானவை.
(அ) துன்பங்கள் நடுவிலும் மௌனம்
உலகின் பார்வையில் மேன்மையானவராகத் திகழ்கிறார் யோபு (முதல் வாசகம்). பணம் படைத்தவராகவும், நேர்மையாளராகவும், பிள்ளைச் செல்வங்கள் நிறைந்தவராகவும் இருக்கிறார். ஆனால், ஒரே நாளில் அவர் தம் சொத்துகளையும் பிள்ளைகளையும் இழக்கிறார். ஏற்க இயலாத துன்பத்தின் நடுவிலும் மௌனம் காக்கிறார். கடவுளைக் கடிந்துரைக்கவோ அழுது புலம்பவோ இல்லை. தன் எதிர்வினையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். ‘ஆண்டவர் கொடுத்தார். ஆண்டவர் எடுத்தார். அவருடைய பெயர் போற்றப்படுக!’ என்று தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார். யோபுவின் மேன்மை அவருடைய செல்வத்தில் அல்ல, மாறாக, அவர் கொண்டிருந்த தாழ்ச்சியிலும் பற்றுறுதியிலும்தான் உள்ளது. தன்னிடம் உள்ளது அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே என்று அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைப் பார்வை வியப்புக்குரியது.
நமக்கு நேர்கிற அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது என்னும் எண்ணம் நம் மனத்தின் அமைதியை நாம் காத்துக்கொள்ள உதவுவதோடு, அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற எதிர்நோக்கையும் நமக்கு வழங்குகிறது.
(ஆ) கடவுளின் பார்வையில் மேன்மை
தங்களுக்குள் யார் பெரியவர் என்னும் விவாதம் இயேசுவின் சீடர்களிடையே எழுகிறது (நற்செய்தி வாசகம்). அவர்களுடைய எண்ணத்தை அறிகிற இயேசு குழந்தை ஒன்றை அவர்கள் நடுவே நிறுத்தி, ‘இச்சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் … உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்!’ என மொழிகிறார். இயேசுவின் சம காலத்து உலகில், குழந்தைகள் என்பவர்கள் ஆற்றல் இல்லாதவர்களாக, வெறும் பொருள்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய தாழ்ச்சி, வெகுளி, எளிமை ஆகியவற்றை மேன்மையின் எடுத்துக்காட்டாக முன்மொழிகிறார் இயேசு. குழந்தையின் சார்புநிலை வழியாகவே நாம் மேன்மையை அடைகிறோம்.
மேன்மை பற்றிய நம் புரிதலைப் புரட்டிப் போடுகிறார் இயேசு. பெரியவர் ஆதல் என்னும் நிலை சிறியவர் ஆதல் வழியாகவே சாத்தியமாகிறது. பெரியவற்றை நாடுவதில் அல்ல, மற்றவர்களுக்குப் பணிபுரிவதிலும் தாழ்ச்சியாக வாழ்வதிலும்தான் மேன்மை அடங்கியுள்ளது.
(இ) சிறியவற்றில் நம்பகத்தன்மை
வேறொருவர் பேய் ஓட்டுவதைக் காண்கிற யோவான் இயேசுவிடம் அதுபற்றி புகார் அளிக்கிறார். இயேசுவின் சீடர்கள் என்னும் வட்டத்துக்குள் வாழ்பவர்களே வல்ல செயல்கள் ஆற்ற முடியும் என்று குறுகிய மனப்பான்மை கொண்டுள்ளார்கள். ஆனால், கடவுளுடைய ஆட்சிக்குரிய செயல்கள் அனைவர் வழியாகவும் நிகழ்ந்தேற முடியும் என்று அவர்களுடைய பார்வையை அகலப்படுத்துகிறார் இயேசு. சிறியவற்றின் வழியாகக் கடவுள் மேன்மையானவற்றை நடத்திமுடிக்கிறார்.
மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய, எல்லாரும் பாராட்டக்கூடியவற்றை நாடியே நாம் செல்கிறோம். ஆனால், யாரும் கண்டுகொள்ளாதவற்றிலும்கூட மேன்மை இருக்கிறது. பேய் ஓட்டும் அந்த நபரைப் போல, நாம் கொண்டிருக்கிற திறமையைப் பயன்படுத்த வேண்டும். சின்னஞ்சிறிய செயல்கள் பெரிய விளைவை ஏற்படுத்த முடியும்.
புனித எரோணிமுஸ் (ஜெரோம்)
திருஅவையின் மறைவல்லுநர்களில் ஒருவரான புனித எரோணிமுவை நாம் கொண்டாடுகிறேம். விவிலியத்தை அறியாதவர் கிறிஸ்துவை அறியாதவர் என மொழிந்த இவர், தன் ஆழ்ந்த படிப்பாலும், தவ வாழ்க்கையாலும், உண்மைக்கான தேடலாலும் உயர்ந்து நிற்கிறார். இறைவார்த்தைக்கான ஆர்வமும் ஆற்றலும் இவரிடம் நிறைந்திருந்தது. நாம் இறைவார்;த்தையை வாசிக்கவும், கேட்கவும், வாழ்வாக்கவும் இப்புனிதர் நமக்காகப் பரிந்து பேசுவாராக!
நிற்க.
தாழ்ச்சி, பற்றுறுதி, பணி வழியாகக் கடவுளின் பார்வையில் மேன்மையை அடைய விரும்புகிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 212)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: