இன்றைய இறைமொழி
செவ்வாய், 10 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்
எசாயா 40:1-11. திருப்பாடல் 96. மத்தேயு 18:12-14
சிறியவற்றைத் தேடுதல்!
பெரிய கட்டடங்கள், பெரிய வாகனங்கள், பெரிய வீடுகள், பெரிய மனிதர்கள் என்று பெரியவற்றைத் தேடிக்கொண்டிருக்கும் நம்மைச் சிறியவை நோக்கி, சிறியவர்கள் நோக்கித் திருப்புகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்மாந்தர்கள் அனைவரும் உலகின் பார்வையில் சிறியவர்களே: ‘நாசரேத்து மரியா,’ ‘தச்சர் யோசேப்பு,’ ‘பெத்லகேம் இடையர்கள்,’ ‘புறவினத்து அரசர்கள்.’
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் மீண்டும் எருசலேம் திரும்புவர் என்னும் செய்தியை அவர்களுக்கு அறிவிக்கிற இறைவாக்கினர் எசாயா, ‘ஆயன்-ஆடுகள்’ என்னும் சொல்லோவியத்தை முன்மொழிகிறார்.
ஆயன்போல இருந்த அரசர்கள் தங்கள் மக்களைச் சிதறடித்தார்கள். ஆனால், ஆண்டவராகிய கடவுள் ஆயன்போலத் திகழ்ந்து அவர்களை மீண்டும் எருசலேம் நோக்கிக் கூட்டி வருகிறார். ஆயனுக்குரிய நான்கு செயல்களை இங்கே பார்க்கிறோம்: ‘அவர் மேய்க்கிறார்’ – ‘உணவு தருதல்,’ ‘ஒன்றுசேர்க்கிறார்’ – ‘காணாமற்போகும்வண்ணம் பாதுகாத்தல்,’ ‘சுமக்கிறார்’ – ‘தேவை அறிந்து செயலாற்றுதல், மாண்புடன் நடத்துதல்,’ ‘சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்’ – ‘ஆடுகளின் நிலை அறிந்து அவற்றின்மேல் தனிப்பட்ட அக்கறை.’
நற்செய்தி வாசகத்தில், ‘காணாமற்போன ஆடு’ எடுத்துக்காட்டை வழங்குகிறார் இயேசு. 100 ஆடுகள் வைத்திருக்கிற ஆயன், காணாமற்போன ஓர் ஆட்டுக்காக 99 ஆடுகளை விட்டுவிட்டுச் செல்கிறார். மனிதக் கணிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 99 என்பது 1-ஐவிட பெரியது. தன்னிடம் இருப்பது பெரியது, காணாமல்போனது சிறியது என்று அமர்ந்துவிடாமல், சிறியதே பெரியது என்று தேடிச் செல்கிறார் ஆயன்.
‘சிறியோருள் ஒருவரும் நெறிதவறிப் போகக் கூடாது’ என்பதே விண்ணகத் தந்தையின் திருவுளம் என்கிறார் இயேசு.
சிறியவற்றின்மேல், சிறியவர்கள்மேல் அக்கறை காட்டுகிறார் கடவுள்.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
(அ) ‘சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாக அழிவர்’ (சீஞா 19:1) என எச்சரிக்கிறது விவிலியம். பெரிய கட்டடத்தைச் சாய்க்க வேண்டுமெனில் அதன் அடிப்பகுதியில் உள்ள சிறிய செங்கல்லை எடுத்துவிட்டால் போதும். கட்டடம் தானாகச் சரிந்துவிடும். சிறிய விடயங்களே நம் வாழ்வின் பெரிய மதிப்பீடுகளை நிர்ணயிக்கின்றன. சிறியவற்றில் கவனம் சிதைந்து பெரியவற்றை நாம் இழந்த நேரங்கள் பல. ஆக, வாழ்வின் சின்னஞ்சிறியவற்றில் கவனமாக இருப்போம்.
(ஆ) ஒரு மனிதரின் மதிப்பு அல்லது பண்பு என்பது அவர் சிறியவர்களை எப்படிக் கையாளுகிறார் என்பதில்தான் உள்ளது. சிறியவர்கள் என்பவர்கள் நம் நெருங்கிய உறவுவட்டத்துக்குள், நம் வாழ்வின் சிறிய வட்டத்துக்குள் இருப்பவர்கள். இவர்கள் நமக்கு அருகில் இருப்பதுபோலத் தெரிந்தாலும், யோசித்துப் பார்த்தால் இவர்களைவிட்டு நாம் தூரமாக நிற்கிறோம். அவர்களுக்குரிய நேரம், ஆற்றல், திறன், பொருள் ஆகியவற்றைக் கொடுக்க நாம் தவறுகிறோம். நமக்கு அருகில் இருப்பவர்களைக் கண்டுகொள்வது நலம்.
(இ) நாம் ‘சிறுமைப்பட்ட’ நேரங்கள், ‘சிறியவராக’ உணரும் நேரங்கள் பல இருக்கின்றன. உடல்நலக் குறைவு, பணக் குறைவு, முதுமை, ஆற்றல் குறைவு ஆகிய நேரங்களில் நாம் மற்றவர்களுடைய இரக்கத்தில் இருப்பதுபோல உணர்கிறோம். மற்றவர்களிடமிருந்து காணாமல்போய் விடுகிறோம். இம்மாதிரியான நேரங்களில் கடவுள் நம்மைத் தேடிவருகிறார் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோம். அவருடைய வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ சிறியவர்களைத் தேடிச் செல்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 268).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: