இன்றைய இறைமொழி
சனி, 8 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – சனி
எபிரேயர் 13:15-17, 20-21. திருப்பாடல் 23. மாற்கு 6:30-34
சீடத்துவத்தின் மூன்று பரிமாணங்கள்
மாற்கு நற்செய்தியாளருடைய புரிதலின்படி சீடத்துவத்துக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு: (அ) அழைக்கப்படுதல் – தம்மோடு இருக்குமாறு இயேசு அவர்களை அழைக்கிறார் (மாற் 3:14). (ஆ) அனுப்பப்படுதல் – இருவர் இருவராக அவர்கள் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள் (நேற்றைய நற்செய்தி வாசகம்). (இ) திரும்பி வருதல் – அனுப்பப்பட்டவர்கள் இயேசுவிடம் திரும்பி வந்து நிகழ்ந்தவற்றை அறிவிக்கிறார்கள் (இன்றைய நற்செய்தி வாசகம்).
பணி முடிந்து தம்மிடம் திரும்பிய திருத்தூதர்களைத் தனிமையான இடத்திற்கு அனுப்புகிறார் இயேசு. அங்கே மக்கள் அவர்கள் இன்னாரென்று அறிந்துகொண்டு கூடி நிற்க, தம் திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்கள்மேல் பரிவுகொண்டு அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கிறார்.
கடவுளை நோக்கித் திரும்பும் பயணம் அனைத்தும் நம்மை நோக்கித் திரும்பி தனிமைத்தவம் செய்யும் பயணமாகவும், மற்றவர்களை நோக்கித் திரும்பி பரிவு கொள்வதாகவும் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் ஆன்மிகப் பாடங்கள் எவை?
(அ) இறைவேண்டலில் திரும்பி வருதல் – ஒவ்வொரு நாளும் விடியும்போது கடவுள் நம்மை ஒரு புதிய நாளுக்கு அழைக்கிறார். நம்மை அழைக்கிற அவர் அந்த நாளில் நாம் பணிகள் செய்யுமாறு நம்மை நம் குடும்பத்திற்கும் பணியிடத்துக்கும் வியாபாரத்துக்கும் அனுப்புகிறார். நாளின் இறுதியில் இல்லம் திரும்பும் நாம் சற்றே நேரம் எடுத்து – ஆலயம் சென்றோ அல்லது இறைவார்த்தையைத் திறந்து தனியாக அமர்ந்தோ – இறைவேண்டல் செய்ய வேண்டும். இந்த இறைவேண்டலே நாம் கடவுளை நோக்கித் திரும்பும் தருணம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும்.
(ஆ) நம்மை நோக்கிய பயணம் – நாளின் ஆரவாரத்திலிருந்து மக்கள் கூட்டத்தின் அறிமுகத்திலிருந்து வெற்றி என்னும் மமதையிலிருந்து தோல்வி என்னும் சோர்விலிருந்து நமக்கு விடுதலை தருகிறார் கடவுள். நம்மை நோக்கிய பயணம் நாம் யார் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
(இ) பிறர்நோக்கிய பயணம் – ஓய்வு எடுப்பதற்காகத் தம் சீடர்களோடு வந்த இயேசு மக்களின் தேவை அறிந்து தம் ஓய்வைத் தள்ளிவிட்டு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார். பரிவு என்னும் உணர்வு நம்மை மையப்படுத்தியது அல்ல, மாறாக, பிறரை மையப்படுத்தியது. இந்த உணர்வு நம்மை உடனடியான செயல்பாட்டுக்குத் தூண்டுகிறது.
சீடத்துவத்தின் மூன்று பரிமாணங்களும் மூன்று வாழ்வியல் பயணங்களாக அமைகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், ‘எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!’ என வாழ்த்துகிறார் ஆசிரியர்.
நாம் செய்கிற நன்மைக்கு கடவுளே நம்மைத் தயார் செய்கிறார்.
இன்றைய பதிலுரைப் பாடலில், ஆண்டவரைத் தம் ஆயர் என அழைக்கிற தாவீது, ‘உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள்நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்!’ எனப் பாடுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: