இன்றைய இறைமொழி
புதன், 5 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – புதன்
எபிரேயர் 12:4-7, 11-15. திருப்பாடல் 103. மாற்கு 6:1-6
சொந்த ஊருக்கு வருதல்!
பெரிய கூட்டம், இரண்டு வல்ல செயல்கள் – இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல், யாயிரின் மகள் உயிர்பெறுதல் என ஹீரோ போல வலம் வந்த இயேசு சொந்த ஊருக்கு வருகிறார். அவரை ஜீரோ ஆக்குகிறார்கள் அவருடைய சொந்த ஊரார். சொந்த ஊருக்கு வெளியே மக்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள். சொந்த ஊரில் மக்கள் இயேசுவைக் குறித்து இடறல்படுகிறார்கள்.
இயேசுவின் சொந்த ஊரில் மூன்று விடயங்கள் நிகழ்ந்தேறுவதைப் பதிவு செய்கிறார் மாற்கு:
(அ) அவர்கள் இயேசுவை – அவருடைய போதனையை, வல்ல செயல்களை – ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். ‘உன் நிகழ்காலத்தை ஏற்கத் தயங்குபவர்கள் உன் இறந்தகாலத்தைத் தோண்டிப் பார்ப்பார்கள்’ என்பது பழமொழி. இயேசுவின் நிகழ்காலத்தை ஏற்கத் தயங்குகிற அவருடைய சொந்த ஊரார் அவருடைய இறந்தகாலம் நோக்கி – பிறப்பு, வளர்ப்பு, பின்புலம் பற்றி – சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ‘மரியாவின் மகன்தானே!’ என்று இயேசுவின் ‘கன்னிப் பிறப்பையும்’ கேலி செய்கிறார்கள். அவர்களுடைய முற்சார்பு எண்ணம், பயம், கோபம் ஆகியவற்றால் அவர்கள் இயேசுவை ஏற்கவில்லை.
(ஆ) அவர்களுடைய நம்பிக்கையின்மையால் இயேசு வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை. நம்பிக்கையும் வல்ல செயல்களும் இணைந்தே செல்கின்றன. கடவுளால்கூட செயலாற்றாத நிலையை நம் நம்பிக்கையின்மை உருவாக்குகிறது.
(இ) இயேசு மற்ற ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். தாம் ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றி இயேசு வருந்தவில்லை, தம் பணியை முடித்துக்கொள்ளவில்லை. மாறாக, அடுத்த ஊர் நோக்கி நகர்கிறார். ஆக, மற்றவர்கள் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் நம்மைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடம் என்ன?
நம் ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் இருக்கிறது. நம் வேர்கள் அங்கேதான் படர்ந்து நிற்கின்றன. கொஞ்சம் மெய்யியலாக்கம் செய்து பார்த்தால், நம் நிர்வாணநிலையை அறிந்தவர்கள் நம் ஊரார்தாம். குழந்தையாகப் பிறந்த நாளும், இறந்து அடக்கம் செய்யப்படுகிற நாளும் (பெரும்பாலும்) நம் சொந்த ஊரில்தான் நடக்கிறது. நாம் இருப்பது போல ஏற்றுக்கொள்பவர்களும் அவர்கள்தாம், நம்மைக் குறித்து இடறல்படுபவர்களும் அவர்கள்தாம். எப்படி நம் பெற்றோர்களை உடன்பிறந்தவர்களை நாம் தேர்ந்தெடுப்பதில்லையோ, அது போலவே நம் சொந்த ஊரையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நமக்கு அது கொடுக்கப்படுகிறது. நம் சொந்த ஊரோடு நாம் ஒப்புரவாகும்போது ஒட்டுமொத்த உலகத்தோடும் பிரபஞ்சத்தோடும் ஒப்புரவாகிறோம்.
ஆக, நம் சொந்த ஊர் நோக்கி நம் எண்ணங்களையும் பாதங்களையும் வைத்திருப்பது நலம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தம் மக்களை, ‘பிள்ளைகள்’ என அழைக்கிறார். நம் அனைவரின் சொந்த ஊர் கடவுளின் திருமுன்னிலையே என்ற பரந்த உள்ளத்தை நமக்குத் தருகிறது இந்த வாசகம்.
தந்தை-பிள்ளை உருவகம் இன்றைய பதிலுரைப் பாடலிலும் வருகிறது: ‘தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார்’ (திபா 103).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: