இன்றைய இறைமொழி
செவ்வாய், 18 மார்ச் 2025
தவக்காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்
எசாயா 1:10, 16-20. திருப்பாடல் 50. மத்தேயு 23:1-12
சொற்களும் செயல்களும்!
எபிரேயத்தில் ‘தவார்’ என்னும் சொல் ஒரே நேரத்தில் ‘சொல்லையும்’ ‘செயலையும் குறிக்கிறது.’ ‘தவார் யாவே’ என்னும் சொல்லாடல் ஒரே வேளையில் ‘ஆண்டவரின் சொல்’ என்னும் ‘ஆண்டவரின் செயல்’ என்றும் பொருள்படுகிறது. ஏனெனில், கடவுளைப் பொருத்தவரையில் சொல் வேறு, செயல் வேறு அல்ல. அல்லது புனித அகுஸ்தினார் எழுதுவதுபோல, சொல்லும் செயலும் கடவுளைப் பொருத்தவரையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் அல்ல. மாறாக, சொல்லும் செயலும் ஒரே நேரத்தில் நடப்பவை. ‘ஒளி உண்டாகுக!’ என்று கடவுள் கூறுகிறார். ‘ஒளி உண்டாயிற்று.’ இங்கே ‘ஒளி உண்டாகுக!’ என்னும் கடவுளின் சொல்லோடு இணைந்து ‘ஒளி உண்டாகிறது.’
கடவுளைப் பொருத்தவரையில் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி என்பது இல்லை.
சொற்கள் உரையாடுவதற்கு மட்டுமல்ல, உருவாக்குவதற்கும் பயன்படும் என்று நாம் அறிவோம். ‘இதைச் செய்!’ என்று நான் பணியாளரிடம் சொல்ல அவர் அதைச் செய்து முடிக்கிறார். இங்கே, சொற்களின் வழியாக நான் பணியாளரோடு உரையாடியதோடல்லாமல், என் சொற்கள் வழியாக (அவர் வழியாக) புதியதாக ஒன்றை உருவாக்குகிறேன். வரலாற்றைப் பார்க்கும்போதும் சொற்கள் மாற்றங்களை உருவாக்கின என்தை நாம் காண்கிறோம். ‘எனக்கு ஒரு கனவு உண்டு!’ என்று மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய உரையின் சொற்கள் அவர்முன் நின்றவர்களோடு பேசிய உரையாடல் சொற்களாக இருந்தாலும், கறுப்பர் இன மக்களின் விடுதலை உருவாக வித்திட்ட சொற்கள் அவையே என்பதை நாம் அறிவோம்.
நம் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருபவை நாம் படிக்கிற தன்-வளர்ச்சி நூல்களோ, காலையில் சீக்கிரம் எழுவதோ, கடினமாக உழைப்பதோ அல்ல. மாறாக, நம் சொற்கள் செயல்களாக மாறுகிற நிகழ்வே நம் வாழ்க்கை முன்நோக்கி நகர்த்துகிறது. தனிமனித ஒழுக்கம், வளர்ச்சி, மேன்மை அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. ‘நான் ஐந்து மணிக்கு எழுவேன்!’ என்று எனக்குள் நான் சொல்லும் சொற்கள், காலையில் ஐந்து மணிக்கு நான் படுக்கையிலிருந்து எழுகிற செயலாக மாறும்போது எனக்குள்ளே தன்னம்பிக்கை பிறக்கிறது. அது அப்படியே என்னை நகர்த்துகிறது.
மக்களுக்குத் தலைவராக இருக்கிறவர்களுடைய சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.
நற்செய்தி வாசகத்தில், தம் சமகாலத்து பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைப் பற்றி சீடர்களோடு உரையாடுகிற இயேசு, ‘அவர்கள் சொல்வதுபோல செய்யுங்கள். அவர்கள் செய்வதுபோல செய்யாதீர்கள்!’ என்கிறார். மேலும், ‘ரபி’ என்னும் நிலையில் அவர்கள் வாழாமல் அந்த வெற்றுச் சொல்லை மட்டும் விரும்புவதையும் சுட்டிக்காட்டுகிறார். நான் ஒரு நல்ல ஆசிரியராக இல்லாமல் இருந்துகொண்டு, மற்றவர் என்னை ‘நல்லாசிரியர்’ என நான் அழைக்க விரும்பினால், மற்றவர் பேசுவது வெற்றுச் சொல்லே. ஏனெனில், அவருடைய சொல்லும் என் செயலும் இணைந்து செல்வதில்லை.
செயல்களை உருவாக்காத சொற்கள் அனைத்தும் வெற்றுச் சொற்களாகவே காற்றில் தோன்றி மறைகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் சொற்களைக் கேட்டு அவற்றின்படி செயல்படாமல் இருந்ததால் அவர்களைக் கடிந்துகொள்கிறார் எசாயா. பதிலுரைப்பாடலில் (திபா 50), ‘என்னுடைய விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?’ எனக் கேட்கிறார் கடவுள்.
இன்று நாம் உதிர்க்கிற சொற்களும் வெறும் உரையாடல், உறவாடல் சொற்களாக இல்லாமல் உருவாக்கும் சொற்களாக மாறட்டும். நமக்குள்ளே நாம் பேசும் சொற்களும் செயல்களாக மாறட்டும். நம் சொற்கள் அல்ல, நம் செயல்களே நம்மை அடையாளப்படுத்துகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: