இன்றைய இறைமொழி
புதன், 11 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – புதன்
எசாயா 40:25-31. திருப்பாடல் 103. மத்தேயு 11:28-30
சோர்விலிருந்து விடுதலை
காலை 9:00 மணிக்கு அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்து வேலை செய்யத் தொடங்குகிறோம். மணி நேரங்கள் நகர நகர உடல் சோர்வடைகிறது. காலையில் புத்துணர்ச்சியோடு வேலை செய்த உடல், மாலையானதும் வெற்று உணவுப் பையைத் தூக்க முடியாத அளவுக்குச் சோர்ந்து விடுகிறது.
புத்தகத்தை வாசித்துக் குறிப்பெடுத்தல், சிந்தித்து முடிவெடுத்தல், கணக்குகள் பார்த்தல், ஆய்வுத்தாள் எழுதுதல் போன்ற செயல்கள் நம் மூளையைச் சோர்வடையச் செய்கின்றன.
இயல்பு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது திடீரென வருகிற அலைபேசிச் செய்தி இறப்பு, இழப்பு ஆகியவற்றைத் தாங்கி வரும்போதும், எதிர்மறையான உணர்வு நெருடல்கள், உறவுச் சிக்கல்கள், ஏமாற்றம் ஏற்படும்போதும் நம் உள்ளம் சோர்ந்து விடுகிறது.
நாம் இன்று வைத்திருக்கும் எல்லாக் கண்டுபிடிப்புகளும் – சலவை எந்திரம், அலைபேசி, கணினி, செயற்கை நுண்ணறிவு, மருந்து, மாத்திரை, மருத்துவர், ஆலோசகர், சமயம், ஆன்மிகம் – ஏதோ ஒரு வகையில் மேற்காணும் சோர்வுகளை – உடல், மூளை, உள்ளம் – நீக்குவதற்காக உருவாக்கப்பட்டவையே.
மெசியாவின் வருகை நம் சோர்வை நீக்கும் என்பது இன்று நாம் கற்கிற பாடமாக இருக்கிறது.
நாடுகடத்தப்பட்ட மக்கள் சொந்த நாடு திரும்புதல் பற்றி முன்னுரைக்கிற இறைவாக்கினர் எசாயா, ‘ஆண்டவர் சோர்வடையார், களைப்படையார்,’ ‘ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவரும் சோர்வடையார், களைப்படையார்’ என்று முன்மொழிகிறார்.
படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் ஏழாம் நாளில் ஓய்வெடுக்கிறார் (காண். தொடக்கநூல் 2:2). அவருடைய ஓய்வுக்கான காரணம் அவர் அடைந்த சோர்வு அல்ல, மாறாக, வேலைக்கும் வேலை செய்யாமல் ஓய்ந்திருப்பதற்குமான வேறுபாட்டை நமக்கு உணர்த்துவதே!
சீனாய் மலைக்கு அருகில் பொன்னால் ஆன கன்றுக்குட்டியை வழிபடத் தொடங்கிய நாள் முதல் (காண். விடுதலைப் பயணம் 32) , பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நாள் வரை இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து, அவருடைய கட்டளைகளை மீறி, அவரிடமிருந்து விலகிச் சென்றார்கள். தங்களுடைய செயல்களால் அவர்கள் ஆண்டவரைக் களைப்படையச் செய்துவிட்டதாக நினைத்தார்கள். மன்னித்தே சோர்ந்துபோன, களைத்துப்போன ஆண்டவர் தங்களை இப்போது அடிமைத்தனத்திற்குக் கையளித்ததாக நினைத்தார்கள். அவர்களின் எண்ணத்தைத் திருத்தும் விதமாகவே, எசாயா, ‘ஆண்டவர் சோர்வடையார், களைப்படையார்’ என அறிவிக்கிறார்.
‘இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர், களைப்படையார். நடந்து செல்வர், சோர்வடையார்’ என உரைக்கிறார் எசாயா.
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு புதிய ஆற்றலைத் தருகிறார். அவர்களுடைய ஆற்றல் இளைஞர்களின் ஆற்றலைவிட மேலானதாக, புவிஈர்ப்பு விசையையும் காற்றின் வேகத்தையும் மீறி உயரே பறக்கும் கழுகின் ஆற்றல் போல இருக்கும். அதாவது, தாழ்வானவை நோக்கி அவர்கள் ஈர்க்கப்பட மாட்டர்கள். அவர்களுடைய உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும். ஆக, இங்கே கடவுள் வாக்குறுதி தருவதோடு அவர்கள் செய்ய வேண்டிய கடமையையும் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
மெசியா இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுவதை நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம். சமூக, அரசியல், பொருளாதார, ஆன்மிகச் சுமைகளைச் சுமந்து நின்ற தம் சமகாலத்து மக்களை நோக்கி உரையாடுகிற இயேசு, ‘பெருஞ்சுமை சுமந்திருப்பவர்களே’ என எல்லாரையும் அழைத்து, ‘என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் … என் நுகம் அழுத்தாது’ என அறிவிக்கிறார்.
நம் நுகங்களை எடுப்பதற்குப் பதிலாக இயேசு தன் நுகத்தை நம்மேல் ஏற்றுகிறார். இயேசுவின் நுகத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் நம் கழுத்தின்மேல் உள்ள மற்ற நுகங்களை நாம் தூக்கி எறிய வேண்டும். பாவத்தின் நுகமும் வேண்டும், இயேசுவின் நுகமும் வேண்டும், சிற்றின்பத்தின் நுகமும் வேண்டும், கடவுளின் நுகமும் வேண்டும் என நாம் இரண்டையும் பிடித்துக்கொள்ள இயலாது.
இதையொட்டியே பவுல், ‘கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ (கலாத்தியர் 5:1) என எழுதுகிறார்.
வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:
(அ) இன்று நம்மை வருத்துகிற சோர்வு எது? உடல் சோர்வு என்றால் மருந்தும் ஓய்வும் எடுத்துக்கொள்ளலாம். மூளைச் சோர்வு எனில் யோசிப்பதை நிறுத்திக்கொள்ளலாம். உள்ளச் சோர்வு எனில் யாரிடமாவது உரையாடலாம். இவற்றையும் தாண்டிய ஒரு சோர்வு ஆன்மிக் சோர்வு. ‘என்னால் ஒன்றும் செய்ய இயலாது,’ ‘கடவுளால்கூட என்னைக் காப்பாற்ற முடியாது’ என்ற அவநம்பிக்கையால் வரும் இச்சோர்வை நாம் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால், தன்னம்பிக்கையால் அகற்ற வேண்டும்.
(ஆ) சோர்வுற்றவர்களுக்கு ஆறுதல்மொழி கூறுதல். இந்த உலகில் நாம் சந்திக்கும் எல்லாருமே ஏதோ ஒரு போராட்டத்தைப் போராடிக்கொண்டிருக்கிறார் – உடல் நோய், பணிச்சுமை, பயணச் சோர்வு, உறவுச் சிக்கல், சமூக அடிமைத்தனம். மற்றவர்களின் சோர்வை நாம் கூட்டாத வண்ணம், அவர்களுக்குத் தேவையான ஆறுதல்மொழி மட்டும் பகர்வோம்.
(இ) மற்றவர்களின் நுகம் ஏற்றல். மற்றவர்களுக்கு ஆறுதல்மொழி பட்டும் பகராமல், செயல்களாகவும் அதை வெளிப்படுத்துவோம். முதியவர்களுக்கு உதவுதல், வறியவர்களுக்குப் பொருள் வழங்குதல், அறிவற்றோருக்குக் கற்பித்தல், இளைஞருக்கு வாழ்வியல் வழிகாட்டுதல், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளித்தல் என ஏதோ ஒரு செயல் வழியாக மற்றவர்களின் நுகத்தை அகற்ற முயற்சி செய்வோம்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டுள்ளதால் களைப்படையாமல் நடந்து முன்செல்வர் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 269).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: