இன்றைய இறைமொழி
செவ்வாய், 28 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – செவ்வாய்
எபிரேயர் 10:1-10. திருப்பாடல் 40. மாற்கு 3:31-35
தாய்மையும் சகோதரத்துவமும்
மனித உறவுகளை இரத்த உறவுகள், திருமண உறவுகள், நட்பு உறவுகள் என்று பிரிக்கலாம். மேற்காணும் மூன்று உறவுநிலைகளிலும் அர்ப்பணம், பற்றுறுதி, உடனிருப்பு இருக்கிறது. மேற்காணும் மூன்று உறவுகளையும் தாண்டிய இறையாட்சி உறவை இன்றைய நற்செய்தி நமக்கு முன்மொழிகிறது.
‘உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்’ என்று தம்மிடம் கூறியவருக்குப் பதில் பகர்கிற இயேசு, ‘இறைத்திருவுளம் நிறைவேற்றுபவர்கள்’ என்னும் வரையறையைத் தருகிறார்.
இவ்வாறாக, மரியா உடல் அளவில் மட்டுமல்ல, ஆன்மிக அளவில் தாயாக நிற்கிறார் என்று உணர்த்துவதோடு, அனைவரும் இந்த நிலைக்குள் வரமுடியும் என்று கூறுகிறார்.
இறையாட்சி உறவு என்பது மூன்று நிலைகளில் வருகிறது:
(அ) இயேசுவைத் தேடுபவர்கள் – இயேசுவைச் சுற்றி நிற்கிற மக்கள் அவரைத் தேடி வந்தவர்களாக இருக்கிறார்கள்.
(ஆ) இயேசுவைப் பின்பற்றுபவர்கள் – ‘என்னைப் பின்பற்றி வா!’ என்று இயேசு அழைத்தபோது அவரைப் பின்பற்றிய சீடர்கள்.
(இ) இறைத்திருவுளம் நிறைவேற்றுபவர்கள் – தன் விருப்பம் அகற்றி இறைவிருப்பம் நிறைவேற்றுபவர்கள்.
இங்கே ‘விருப்பம்’ என்றால் என்ன?
‘ஆர்வமும்’ ‘ஆற்றலும்’ இணைந்தே செல்கின்றன. நமக்கு எது ஆர்வம் தருகிறதோ அதை நோக்கியே நம் ஆர்வம் நகர்கிறது. நம்முடைய வாழ்வில் கடவுள் நம் ஆர்வமாக மாறும்போது நாம் அவருடைய திருவுளம் நிறைவேற்றுகிறோம்.
சில நேரங்களில் நாம் விரும்புவதே நமக்குத் தெரிவதில்லை. கடவுள் விரும்புவதை எப்படிக் கண்டுபிடிப்பது?
இன்றைய முதல் வாசகத்தில், ‘உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்!’ என்று சொல்லி இயேசு இந்த உலகுக்கு வருவதாகப் பதிவு செய்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்.
இறைத்திருவுளம் நிறைவேற்றுவதன் வழியாக மனுக்குலத்தின் சகோதரராக மாறுகிறார் இயேசு.
இறைத்திருவுளம் நிறைவேற்றுவதன் வழியாகக் கடவுளின் தாயாக மாறுகிறார் மரியா.
இரத்த உறவு, திருமண உறவு, நட்பு உறவு போலவே இறைத்திருவுளம் நிறைவேற்றுகிற இறையாட்சி உறவும் மேன்மையானது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: