இன்றைய இறைமொழி
திங்கள், 9 டிசம்பர் 2024
தூய கன்னி மரியாவின் அமல உற்பவம்
தொடக்கநூல் 3:9-15, 20. எபேசியர் 1:3-6, 11-12. லூக்கா 1:26-38
தாய்மை – தகுதிப்படுத்துதல் – தற்கையளிப்பு
இன்று நாம் தூய கன்னி மரியாவின் அமல உற்பவம் (‘மாசற்ற தொடக்கம்,’ ‘பாவமற்ற பிறப்பு,’ ‘தூய்மையான பிறப்பு’) பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் 1854-ஆம் ஆண்டு, ‘இன்எஃபாபிலிஸ் தேயுஸ்’ (‘புரிதலுக்கு அப்பாற்பட்ட கடவுள்’) என்னும் ஏட்டின் வழியாக ‘வழுவாநிலைக் கோட்பாடாக’ இதை அறிவிக்கிறார்:
‘தூய கன்னி மரியா, மனுக்குலத்தின் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பேறுகளை முன்னிட்டு, எல்லாம் வல்ல கடவுள் வழங்கிய தனிப்பெரும் அருளாலும் சிறப்புரிமையாலும் கருவுருவாதல் நிலையிலிருந்தே தொடக்கநிலைப் பாவத்தின் கறையிலிருந்து காப்பாற்றப்பெற்றார். இந்தக் கோட்பாடு கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதால், நம்பிக்கையாளர்கள் அனைவரும் உறுதியாகவும் தொடர்ந்தும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.’
1858-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் மெசபியல் குகையில் தம்மை பெர்னதெத்துக்குத் தோன்றுகிற தூய கன்னி மரியா, ‘நாமே அமல உற்பவம்’ (மே மாதம், 16-வது தோற்றமளித்தல்) என்று தம் பெயரை அறிவிக்கிறார்.
தூய கன்னி மரியாவின் அமல உற்பவத்துக்கு தொடக்கநூல் 3:15 (‘பெண்ணின் வித்து’), லூக்கா 1:28 (‘அருள் நிறைந்தவர்’) என்னும் இறைவார்த்தைப் பகுதிகளும் புனித இரேனியுவின் விளக்கவுரையும் சான்றாக அமைகின்றன.
இந்தக் கோட்பாட்டின் உட்கூறுகள் பின்வருமாறு: (அ) தொடக்கநிலைப் பாவம் மாந்தர்கள் அனைவரையும் கறைப்படுத்துகிறது. இந்தக் கறையிலிருந்து மரியா கடவுளின் அருளால் காப்பாற்றப்படுகிறார். (ஆ) ஏனெனில், பாவக்கறையில்லாத கடவுளை அவர் மனிதராகப் பெற்றெடுக்க வேண்டும். (இ) மரியாவுக்குக் கடவுள் வழங்குகிற தனிப்பட்ட அருள்கொடை இது.
இன்றைய முதல் வாசகத்தின் (தொநூ 3:9-15,20) இறுதியில், ‘மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்’ என்று வாசிக்கின்றோம். நம் தொடக்கத்தாய் இரு பெயர்களைப் பெறுகிறாள்: ஒன்று, ‘பெண்’ (தொநூ 2:23). ‘பெண்’ (எபிரேயத்தில் ‘ஈஷ்ஷா’) என்னும் பெயர் படைப்பின் தொடக்கத்தில், இரண்டாம் கதையாடலின்படி, ‘ஆண்’ (எபிரேயத்தில் ‘ஈஷ்’) வழங்குவதாக உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொருந்தக்கூடிய தன்மையை இந்தப் பெயர் எடுத்துரைக்கின்றது. இரண்டாவது பெயர், ‘தாய்’ (தொநூ 3:20). ‘தாய்’ (எபிரேயத்தில், ‘ஹவ்வா’) என்னும் பெயர், நம் முதற்பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதால் கடவுள் அவர்களைச் சபித்ததற்குப் பின்னர் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வு வரை ஆதாம்-ஏவா என்னும் இருவரும் தங்கள்மையம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்போது அடுத்த தலைமுறை தொடங்குகின்றது.
ஏன் தொடங்க வேண்டும்? பெண்ணை ஏமாற்றிய பாம்பைச் சபிக்கின்ற கடவுள், ‘உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ என்கிறார். ‘வித்து’ என்பது ஆணுக்கு உரியது. இங்கே ‘பெண்ணின் வித்து’ எனக் குறிப்பிடப்படுவதால், இது ‘முன்நற்செய்தி’ (அதாவது, மரியா ஆணின் உறவு இன்றி குழந்தை பெறுவது முன்னறிவிக்கப்படுதல்) என்று திருஅவைத் தந்தையர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. ‘பெண்ணின் வித்து’ என்பதைப் பெண்ணின் வழிமரபு என்றும் எடுக்கலாம். அந்த வழியில், மரியா என்னும் பெண்ணின் வழிவரக்கூடிய இயேசு தன் சிலுவையைக் கொண்டு பாம்பின் தலையை நசுக்குவார் என்றும் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பிறப்பில் மரியா தாய்மை ஏற்கின்றார். மரியாவின் தாய்மை வழியாகவே தீமை அழித்தல் நிகழ்வு தொடங்குகிறது. ஆக, ‘அமல உற்பவம்’ என்பது மரியாவின் ‘தாய்மை’ நிலைக்கான தயாரிப்புநிலையாக இருக்கிறது. தாய்மை ஏற்பதற்காகவே மரியா பாவ மாசின்றி பிறக்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), எபேசு நகர இறைமக்களை, ‘தூயவர்கள்’ (‘புனிதர்கள்’) என அழைக்கின்ற பவுல், தூய்மை நிலை என்பது கடவுள் அளித்த தகுதியால் வந்தது என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார். கடவுள் மனிதர்களைத் தகுதிப்படுத்தும் நிலை மூன்று தளங்களில் நடந்தேறுகிறது: ஒன்று, ‘உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.’ இரண்டு, ‘அன்பினால் அவர்களை முன்குறித்து வைக்கின்றார்.’ மூன்று, ‘கிறிஸ்து வழியாக உரிமைப்பேற்றை வழங்குகின்றார். அமல உற்பவ நிகழ்வில் அன்னை கன்னி மரியா தகுதிப்படுத்தப்படுகின்றார். இச்செயலைக் கடவுளே நிகழ்த்துகின்றார். தகுதிப்படுத்துதல் என்பது கடவுளின் அருள்கொடையால் நடைபெறுகிறதே அன்றி, நம் நற்செயல்களாலோ அல்லது செயல்களின் பேறுபலன்களாலோ நடபெறுவதில்லை.
நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38), இயேசு பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று வானதூதர் கபிரியேல் மொழிந்தவுடன், ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று சரணாகதி அடைகின்றார் மரியா. தொடர்ந்து, எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில் அவர் பாடும் புகழ்ச்சிப் பாடலிலும், ‘ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்’ எனப் பாடுகின்றார். தாழ்ச்சி என்பது அடையாளங்களை இழக்கின்ற நிலை. தன் இருத்தல் நிலை (‘களிமண்’ நிலை) இதுதான் என்று உணர்கின்ற நிலை. தன் கையறுநிலையை ஏற்றலே தாழ்ச்சி. ‘நீர் என்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்’ என்று களிமண் தன்னை உருவாக்குபவரிடம் தன்னைக் கையளிப்பது போல மரியா தன்னை இறைத்திட்டத்திற்குக் கையளிக்கின்றார்.
ஆக, தாய்மை, தகுதிப்படுத்துதல், தற்கையளிப்பு என்னும் மூன்று கருத்துருக்களின் வழியாக தூய கன்னி மரியாவின் அமல உற்பவத்தை நாம் புரிந்துகொள்ள இயலும்.
இன்றைய பெருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) கடவுளின் பராமரிப்பும் அருளும்
கடவுள் தாம் படைத்த உலகையும் மாந்தர்களையும் அழிவுக்கு உட்படுத்தவில்லை. மாறாக, அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டுத் தமதாக்கிக்கொள்ள விழைகிறார். அதற்கான தயாரிப்பாக மரியாவை பாவ மாசு தாக்காத வண்ணம் பாதுகாக்கிறார். அமல உற்பவம் என்பது கடவுள் மரியாவுக்கு நிகழ்த்திய பராமரிப்புச் செயல். மரியாவுக்கு நிகழ்த்தியதுபோல நம் வாழ்விலும் வேறு வேறு தளங்களில் கடவுளின் பராமரிப்பு நடந்தேறுகிறது. இதை நாம் உணர்ந்துகொள்வோம்.
(ஆ) மரியாவின் கீழ்ப்படிதல்
‘இதோ ஆண்டவரின் அடிமை!’ என்று கன்னி மரியா தம்மையே இறைத்திட்டத்திற்குக் கீழ்ப்படுத்துகிறார். கடவுள் மேற்கொண்ட தயாரிப்பு மரியாவின் கீழ்ப்படிதலில் நிறைவுபெறுகிறது. நம் வாழ்வுக்காகக் கடவுள் கொண்டிருக்கிற திட்டம் அவரிடம் அடையும் சரணாகதியில்தான் நிறைவுபெறுகிறது. நம் வாழ்வின் திட்டங்களை விடுத்து அவருடைய திட்டங்களைப் பற்றிக்கொள்ள அழைக்கிறார் மரியா.
(இ) தூய்மைக்கான அழைத்தல்
பாவத்திலிருந்து தூய்மை கன்னி மரியாவுக்குக் கடவுளின் கொடையாக வழங்கப்பட்டது. நமக்கோ அது நாம் செய்ய வேண்டிய செயலாக இருக்கிறது. தூய்மை என்பது தயார்நிலை. வாழ்க்கைக்கான தயார்நிலையை நாம் என்றென்றும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மரியா தம் வாழ்விற்கான அழைத்தலை வானதூதர் கபிரியேல் வழியாகத் தெரிந்துகொள்கிறார். நமக்கு அப்படிப்பட்ட வெளிப்பாடு எதுவும் நடப்பதில்லை. நாமாகவோ சிரமப்பட்டு, பல்வேறு முயற்சிகள் செய்து தெரிந்துகொள்ளவும், தெரிந்துகொண்டவுடன் அதை நோக்கி நடக்கவும் வேண்டும்.
(ஈ) மானிட வாழ்வின் உடலின் மாண்பு
கடவுள் மானிட உடலை ஏற்பதால் மானுடத்தின் மாண்பு உயர்கிறது. மானுட உடல் கடவுளால் மதிப்பு பெறுகிறது. மரியா என்னும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்வும் உடலும் கடவுளுக்குத் தேவைப்படுகின்றன. நம் வாழ்க்கை வரலாற்று விபத்து அல்ல. நம் வாழ்க்கைக்கென கடவுள் ஒரு நோக்கத்தை வரையறுத்துள்ளார். நம் உடலும் நமக்கு அடுத்திருப்பவரின் உடலும் மாண்புடன் நடத்தப்படவே கடவுள் விரும்புகிறார்.
நிற்க.
தூய கன்னி மரியாவின் அமல உற்பவம் அல்லது மாசின்மை பற்றி ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி’ பின்வருமாறு கற்பிக்கிறது: ‘கடவுளின் சிறப்பான கொடைகளால் மரியா அணிசெய்யப்பட்டார் … மரியாவின் தனித்துவமான புனிதநிலை … கடவுள் முன்குறித்து வைத்து அவரை அழைத்தார் … புதிய படைப்பாக உருவாக்கப்பட்டார்’ (காண். எண்கள் 490-493).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: