இன்றைய இறைமொழி
வெள்ளி, 20 டிசம்பர் ’24
திருவருகைக்கால வார நாள்
எசாயா 7:10-14. லூக்கா 1:26-38
தாவீதின் திறவுகோலே, வாரும்!
கிறிஸ்து பிறப்பு நவநாளின் நான்காம் நாள் ‘ஓ அழைப்பு’, ‘தாவீதின் திறவுகோலே, வாரும்!’ என்பதாகும். ‘அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்கமாட்டான்’ (எசா 22:22), ‘தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்துவிடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும் கூறுவது இதுவே’ (திவெ 3:7) என்னும் அருள்வாக்கியங்களின் பின்புலத்தில் எழுகிறது இந்த ‘ஓ அழைப்பு.’
திறவுகோலைக் கொண்டிருத்தல் ஒருவர் அந்த இல்லத்தின்மேல் கொண்டிருக்கிற உரிமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. விண்ணகத்தின் திறவுகோலைக் கொண்டிருக்கிற இயேசு அதைத் திறந்து அனைவரையும் உள்ளே அனுமதிக்கிறார் (காண். லூக் 23:43). மேலும், திறவுகோல் என்பது மறைபொருளை விளக்குகிற, பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிக்கிற கருவியாகவும் இருக்கிறது.
‘தாவீதின் திறவுகோல்’ என்பது மூன்று விடயங்களைக் குறிக்கிறது: (அ) நகரத்தின் திறவுகோல். அதாவது, ஓர் அரசன் ஒட்டுமொத்த நகரத்தின்மேல் அதிகாரம் கொண்டிருக்கிறார். அவருடைய அனுமதியின்றி, யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் இயலாது. (ஆ) கருவூலத்தின் திறவுகோல். ஒரு நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கின்ற கருவூலத்தின் திறவுகோல் அரசரிடமே இருக்கின்றது. (இ) ஆலயத்தின் திறவுகோல். எருசலேமில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கும். அதாவது, அந்தக் கதவை மெசியாவால் மட்டுமே திறக்க முடியும் என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை. மெசியா மட்டுமே அந்தக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியும்.
தங்கள் வாழ்க்கைச் சூழல்களின் பின்புலத்தில் குழப்பத்திலிருந்த இரண்டு நபர்களின் குழப்பங்களை நீக்கி, தெளிவுகளைத் தந்து, புதிய வாழ்வு என்னும் கதவுகளை அவர்களுக்குத் திறக்கும் நிகழ்வுகளை இன்றைய வாசகங்கள் நம்கண்முன் கொண்டு வருகின்றன.
முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, இம்மானுவேல் அடையாளத்தை, ஆகாசு அரசருக்கு வழங்குகிறார். சாலமோனின் ஆட்சிக்குப் பிறகு ஒருங்கிணைந்த இஸ்ரயேல், தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரிகிறது. எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு நாடு யூதா என்றும், சமாரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட வடக்கு நாடு இஸ்ரயேல் என்றும் அழைக்கப்படுகிறது. கிமு 735 முதல் கிமு 720 வரை யூதாவை ஆட்சி செய்கிறார் ஆகாசு. அந்த நாள்களில் வடக்கு நாட்டை ஆட்சி செய்த பெக்கா யூதாவுக்கு எதிராகப் போர்தொடுத்து அதை வெற்றி கொண்டு அசீரியாவை எதிர்கொள்ள விழைகிறார். பெக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில் ஆகாசு எதிரி நாடான அசீரியாவிடம் சரணடைய வேண்டும், அல்லது எகிப்தின் உதவியை நாட வேண்டும். குழப்பம், அச்சம், நம்பிக்கையின்மை என்று நின்றிருந்த ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அடையாளம் ஒன்றை வழங்குகிறார்: ‘கன்னிப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.’ இந்த ஆண்மகவு எசேக்கியாவைக் குறிக்கிறது என்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இந்த அடையாளம் வழியாக ஆண்டவராகிய கடவுள் தம்மை மட்டுமே பற்றிக்கொள்ளுமாறு அரசர் ஆகாசை அழைக்கிறார்.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்கிறது. நாசரேத்தில் வாழ்ந்த மரியாவிடம் வருகிற வானதூதர், ‘இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்’ எனச் சொல்கிறார். வானதூதரின் சொற்கள் கேட்டுக் கலங்குகிறார் மரியா. ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!’ என்று மரியா கேட்டபோது, ‘எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ எனப் பதில் தருகிறார் தூதர். வானதூதரின் பதிலுரையைக் கேட்ட மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார். மரியாவின் மனத்தில் எழுந்த அச்சமும் தயக்கமும் மறைகின்றன.
மரியாவின் சொற்களை நம் இன்றைய நாளின் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்வோம். ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார் மரியா. ‘உம் சொற்படியே நான் செய்கிறேன்’ என்றோ, ‘நான் செய்கிறேன்’ என்றோ அவர் சொல்லவில்லை. ஆகாசும் ஆண்டவராகிய கடவுள் உரைத்த சொல் கேட்டவுடன் மௌனம் காக்கிறார்.
நம் வாழ்வில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என நினைத்துச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து ஓடுகிறோம். கடவுளுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தும் செயல்படுகிறோம். இந்தப் பரபரப்பிலும் கலக்கத்திலும் ஆண்டவராகிய கடவுள் நம் வாழ்வில் செயல்பட அவரை அனுமதிக்க மறந்துவிடுகிறோம்.
ஆண்டவராகிய கடவுள் தம்மில் செயலாற்றுமாறு அனுமதிக்கிற மரியா, ‘எனக்கு நிகழட்டும்’ எனச் சரணாகதி அடைகிறார். எதுவும் செய்யாமல் இறைவனின் கைகளில் நம்மைச் சரணாகதி ஆக்குதல் நலம். இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி அழைத்துச் செல்கிற ஆண்டவராகிய கடவுள், அவர்கள் செங்கடலைக் கண்டு பயந்தபோது, ‘ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்’ (காண். விப 14:14) என்கிறார். கடவுள் செயலாற்றுமாறு அவர்கள் அனுமதித்தாலே போதும்! அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இன்றைய நாளின் சவால் என்ன?
குழப்பம், அச்சம், தயக்கம், கலக்கம் நம் வாழ்வைச் சூழும்போது பொறுமையுடனும் அமைதியுடனும் இருப்பது. கடவுள் வந்து திறந்துவிடும் வரை, பூட்டுபோல காத்திருப்பது. அவர் நம்மைப் பிடித்துத் திறக்குமாறு அவருடைய கைகளில் நம்மையே ஒப்புவிப்பது.
தாவீதின் திறவுகோலே, எங்கள் வாழ்க்கையைத் திறந்தருளும்!
‘ஓ தாவீதின் திறவுகோலே! (எசா 22:22, திவெ 3:7),
இஸ்ரயேல் வீட்டின் செங்கோலே!
எவரும் பூட்ட இயலாதவாறு நீர் திறக்கிறீர்!
எவரும் திறக்க இயலாதவாறு நீர் பூட்டுகிறீர்! (எசா 22:22)
வாரும்! இருளிலும் சாவின் நிழலிலும் அமர்ந்திருக்கும் எங்களுடைய
சங்கிலிகளை உடைத்து எங்களை மீட்டருளும்! (திபா 107:10)’
இதுவே இன்றைய இறைவேண்டல்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: