• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

திரும்பி வருகிற சமாரியர். இன்றைய இறைமொழி. புதன், 13 நவம்பர் ’24

Wednesday, November 13, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 13 நவம்பர் 2024
பொதுக்காலம் 32-ஆம் வாரம், புதன்
தீத்து 3:1-7. திருப்பாடல் 23:1-3அ, 3அ-4, 5-6. லூக்கா 17:11-19

 

திரும்பி வருகிற சமாரியர்

 

‘திரும்பி வருதல் உடல்நலம் பெறுதலை உறுதிசெய்வதோடு உள்ளத்துக்கும் நலம் தருகிறது’

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்குகின்றார். அவர்களில் ஒருவர் மட்டும் – சமாரியர் மட்டும் – இயேசுவுக்கு நன்றி சொல்வதற்குத் திரும்புகின்றார்.

 

நிகழ்வின்படி, இயேசுவின் பயணம் எருசலேம் நோக்கியதாக இருக்கிறது. கலிலேய, சமாரிய எல்லைகளை அவர் கடக்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் தொழுநோயுற்றவர்கள் ஊரின் எல்லைப்புறங்களில் குடியேற்றப்பெற்றனர். அவர்கள் மூன்றுநிலைகளில் துயருற்றார்கள்: உடல்சார்துன்பம் ஏனெனில் அவர்களுடைய நோய் அவர்களுடைய உடலை உருக்குலைத்தது. உணர்வுசார் துன்பம், ஏனெனில் அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர். ஆன்மிகம்சார் துன்பம், ஏனெனில், தொழுநோய் என்பது அவர்களுடைய பாவங்கள் அல்லது அவர்களுடைய பெற்றோருடைய பாவங்களுக்கான தண்டனை என்று கருதப்பட்டது.

 

இயேசுவை எதிர்கொண்டு வருகின்ற பத்து தொழுநோயாளர்கள், ‘ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்!’ என்று குரல் எழுப்புகின்றனர். ‘நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்!’ என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. வழியில் நலம் பெறுகின்றனர். நலம் பெற்ற சமாரியர் மட்டும் கடவுளைப் புகழ்ந்து கொண்டே திரும்பி வருகின்றார்.

 

சமாரியர் மட்டும் திரும்பி வரக் காரணம் என்ன?

 

சமாரியர் என்பவர் லூக்கா பயன்படுத்தும் இலக்கியக் கருவியா? சமாரியர்களுக்கும் புறவினத்தாருக்கும் இறையாட்சியில் இடமுண்டு என்று சொல்வதற்காக லூக்கா இவரைக் கருவியாகப் பயன்படுத்துகிறாரா?

 

அல்லது

 

தொழுநோய் பீடித்திருந்த வரை, ‘தொழுநோயாளர்’ என அவரை அறிந்து, ஏற்றுக்கொண்ட மற்ற யூத தொழுநோயாளர்கள், நோய் நீங்கியவுடன், ‘இவன் சமாரியன்!’ என்று சொல்லி அவரை நிராகரித்தார்களா?

 

அல்லது

 

எருசலேமில் உள்ள யூத ஆலயத்திற்கும் அங்குள்ள யூதக் குருக்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று அந்த சமாரியர் திரும்பினாரா?

 

அல்லது

 

கடவுளே இங்கு இருக்க, குரு எதற்கு என்று கேட்டுக் கொண்டு அவர் இயேசுவிடம் திரும்பினாரா?

 

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அவர் திரும்புகின்றார்.

 

திரும்புதல் நம் வாழ்வில் மிக முக்கியமானது. திரும்புதலில் இரு வகை உண்டு: ஒன்று, இளைய மகன் வகை. தன் தந்தையிடமிருந்து சொத்துக்களைப் பிரித்து வாங்கிக்கொண்டு புறப்படுகின்ற இளைய மகன், அறிவு தெளிந்தவராய் தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார். இரண்டு, இயேசு வகை. தன்னுடைய நாளைப் பணியிலும் திருத்தூதர்களோடும் செலவழிக்கின்ற இயேசு, இரவில் தனிமையான ஓர் இடத்தில் தன் தந்தையிடம் திரும்புகின்றார். முதல் வகை திரும்புதல் ஒரே முறை நடக்கிறது. இரண்டாம் வகை திரும்புதல் அடிக்கடி நடக்கிறது. முதல் வகை திரும்புதல் மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது. இரண்டாம் வகை திரும்புதல் நன்றி மற்றும் புகழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறது. முதல்வகை தன்மையம் கொண்டது. இரண்டாம் வகை இறைமையம் கொண்டது.

 

சமாரியத் தொழுநோயாளர் இரண்டாம் வகையில் திரும்புகின்றார்.

 

மார்ட்டின் ஹைடெக்கர் என்ற மெய்யியல் அறிஞர், ‘வீடு திரும்புதல்’ (‘ஹோம்கமிங்’) பற்றி அடிக்கடிப் பேசுகின்றார். ‘வீடு திரும்புதல்’ என்பதை, ‘நம் வேர்களுக்குத் திரும்புதல்,’ ‘நம் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்தல்,’ ‘நம் தொடக்கத்தை மறுஆய்வு செய்து பார்த்தல்’ என்று முன்மொழிகின்றார். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் சமாரியத் தொழுநோயாளர் இந்த மூன்று நிலையிலும் திரும்புகின்றார். தன் வேர் என இயேசுவை ஏற்றுக்கொள்கின்றார். தான் கடந்து வந்த பயணத்தையும் அந்தப் பயணத்தில் தான் பெற்ற உடல்நலத்தையும் எண்ணிப்பார்க்கின்றார். ‘இயேசு’ என்று அறிக்கையிட்ட ஒருவர் முன் காலில் முகங்குப்புற விழுவதன் வழியாக அவரைக் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றார்.

 

திரும்பி வருதல் எப்படி நடக்கிறது?

 

(அ) நிற்றல்

 

நிற்கின்ற ஒருவர்தான் திரும்ப முடியும். ஓடிக்கொண்ட இருக்கின்ற ஒருவர் திரும்பினால் கீழே விழுந்துவிடுவார். மற்றவர்கள் நடந்துகொண்டே இருக்க, சமாரியர் மட்டும் நிற்கின்றார். அமைதி கொண்ட உள்ளமே நிற்கும். பதைபதைப்பு கொண்ட உள்ளம் ஓடிக்கொண்டே இருக்கும்.

 

(ஆ) தன்நிலை அறிதல்

 

தொழுநோய் நீங்கியவர்கள் குருக்களிடம் சான்று பெற்றவுடன் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது மோசேயின் சட்டம். தான் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படுமுன் கடவுளுடைய குழுமத்தில் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்கிறார் சமாரியர். தன் நிலை மேம்பட்டதற்கான காரணம் இயேசு என்பதை உணர்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் தொழுநோய் என்பது குணமாக்க இயலாத நோயாகவும், பாவத்தின் அடையாளமான நோயாகவும் இருந்தது. தொழுநோய் குணமானவுடன் தனக்கு மீண்டும் உயிர் வந்ததாகவும், தான் மீண்டும் கடவுளோடும் குழுமத்தோடும் இணைந்துவிட்டதாகவும் உணர்ந்து துள்ளிக் குதிக்கிறார் சமாரியர்.

 

(இ) எதிர்திசையில் பயணிக்க வேண்டும்

 

இது மிகவும் முக்கியம். மற்ற தொழுநோயாளர்கள் இவரின் திரும்புதலைத் தடுத்திருப்பார்கள். ‘சொல் பேச்சு கேட்க மாட்டாயா! அவர் நம்மைக் குருக்களிடம்தானே காட்டச் சொன்னார்! வா! போவோம்!’ என்று சொல்லி சட்டம் பேசியிருப்பார்கள். அல்லது ‘அவர் ஒரு நடமாடும் போதகர். இப்போது எங்கே இருப்பார் என நமக்குத் தெரியாது. அவரை எப்படித் தேடுவது?’ என்று சாக்குப் போக்கு சொல்லியிருப்பார்கள். ஆனால், சமாரியர் துணிவுடன் தன் பாதையின் திசையை மாற்றுகின்றார். எதிர்திசையில் பயணிப்பது அவருக்கு எளிதாக இருந்திருக்காது. ஏனெனில், இயேசு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிச் சென்றுகொண்டிருப்பார். இருந்தாலும், அவரைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் புறப்படுகின்றார்.

 

அவருடைய திரும்பி வருதலை இயேசு பாராட்டுகின்றார்.

 

‘உமது நம்பிக்கை நலம் தந்தது. எழுந்து செல்லும்’ என அனுப்புகின்றார். மற்றவர்கள் உடலில் மட்டும் நலம் பெற, இவர் உண்மைக் கடவுளை அறிந்துகொண்டதால் உள்ளத்திலும் நலம் பெறுகிறார்.

 

‘கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க – திரும்பி நடக்க’ நம்மை அழைக்கிறார் சமாரியர்.

 

இன்றைய முதல் வாசகத்தில், தீத்துவுக்கு எழுதுகிற பவுல், அனைவரும் நற்செயல்கள் செய்யத் தயராhக இருக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு பணிக்கிறார். கடவுளின் அருளை நாம் பெற்றுள்ளோம் எனில் அதற்கேற்ற பதிலிறுப்பே நாம் செய்யும் நற்செயல்கள்.

 

பதிலுரைப் பாடலில், ஆண்டவரைத் தன் ஆயர் எனக் கொண்டாடுகிற தாவீது, ஆண்டவரின் அருள்நலமும் பேரன்பும் தன்னைப் புடைசூழ்ந்து வருகிறது என்று சொல்லி ஆறுதல் அடைகிறார்.

 

‘திரும்பி வருதல் உடல்நலம் பெறுதலை உறுதிசெய்வதோடு உள்ளத்துக்கும் நலம் தருகிறது’

 

நிற்க.

 

நம்மை நோக்கிய பயணம் அனைத்தும் இறைவனை நோக்கிய பயணம் என்றும், நம்மை நோக்கித் திரும்பும்போது நாம் இறைவனை நோக்கித் திரும்புகிறோம் என்பதையும் உணர்ந்தவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 247).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: