இன்றைய இறைமொழி
வியாழன், 24 அக்டோபர் 2024
பொதுக்காலம் 29-ஆம் வாரத்தின் வியாழன்
எபேசியர் 3:14-21. லூக்கா 12:49-53
தீமூட்ட வந்தேன்!
‘நம் உள்ளத்தில் பற்றி எரிகிற இயேசு என்னும் தீ, நம் திருமுழுக்கின் அழைப்பை நமக்கு நினைவுறுத்துவதோடு, நாம் எதிர்கொள்கிற பிளவுக்கும் காரணமாகிறது!’
தீ, திருமுழுக்கு, பிளவு என்னும் மூன்று சொற்களில் சுழல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். முதல் ஏற்பாட்டில் தீ மூட்டுதல் என்னும் சொல்லாடல் பழையன அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்கிற கடவுள், நெருப்புத் தூணாக அவர்களோடு வழிநடக்கிறார் (காண். விப 14:19-20). நெருப்புத் தூண் அவர்களுக்கு இரவில் ஒளி காட்டுவதற்காக இருந்தாலும், அது இஸ்ரயேல் மக்களையும் பாரவோனையும் பிரிக்கிற சுவராக இருக்கிறது. பாரவோன் இஸ்ரயேல் மக்களை நெருங்காதவாறு அவர்களைக் காப்பாற்றுகிறது. அடிமைத்தனம் என்னும் பழையது அழிக்கப்படுகிறது.
இறைவாக்கினர் எலியா பாகால் இறைவாக்கினர்களைக் கார்மேல் மலையில் எதிர்கொள்ளும் நிகழ்வில் வானிலிருந்து இறங்குகிற நெருப்பு எலியாவின் பலிப்பொருள்களையும் சுற்றி நின்ற தண்ணீரையும் முற்றிலுமாக விழுங்குகிறது. இந்த நெருப்பு எலியாவுக்கும் பாகால் இறைவாக்கினர்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்துகிறது. பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றழிக்கிறார் எலியா. சிலை வழிபாடு என்னும் பழையது இவ்வாறாக அழிக்கப்படுகிறது (காண். 1 அர 18).
பழையனவற்றை அழிக்கிற, அனைத்தையும் தன்னகத்தே விழுங்குகிற, யாராலும் அணைத்துவிட முடியாத தீயை மண்ணுலகில் மூட்ட வந்தேன் எனச் சொல்கிற இயேசு, அது உடனடியாக இங்கே எரிய வேண்டும் என விரும்புகிறார். தம் காலத்திலேயே பழையன அழிக்கப்பட்டு, புதிய ஆன்மிக எழுச்சி நிகழ வேண்டும் என விரும்புகிறார்.
தொடர்ந்து, அவரே அதன் இயலாத நிலையை ஏற்றுக்கொள்கிறார். ‘நான் பெற வேண்டிய திருழுக்கு ஒன்று உண்டு’ என்னும் இயேசுவின் சொற்களை, ‘அவர் கல்வாரிச் சிலுவையில் பெறவிருக்கிற இரத்தத் திருமுழுக்கு’ அல்லது ‘உயிர்ப்புக்குப் பின்னர் திருத்தூதர்களுக்கு வழங்கவிருக்கிற தூய ஆவி என்னும் நெருப்புத் திருமுழுக்கு’ எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், அது இன்னும் நடந்தேறவில்லை. இது இயேசுவுக்கு மனநெருக்கடியை, கவலையை, அவசரத்தைக் கொடுக்கிறது.
அந்த நிகழ்வு நடந்தேறியவுடன் தம் சீடர்கள் நடுவே ஏற்படுகிற பிளவை முன்னுரைக்கிறார் இயேசு. பாரவோனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நின்ற நெருப்புத் தூண் போல, பாகால் இறைவாக்கினர்களுக்கும் எலியாவுக்கும் இடையே நின்ற நெருப்பு போல, தந்தைக்கும் மகனுக்கும் நடுவே, மகனுக்கும் தந்தைக்கும் நடுவே தீ போல இருப்பார் இயேசு. இயேசுவை ஏற்றுக்கொள்தல் சீடர்களின் வாழ்விடத்திலேயே பிளவை ஏற்படுத்தும். இந்தப் பிளவு தவிர்க்க முடியாதது.
நற்செய்தி வாசகத்தை நம் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?
(அ) நம் உள்ளத்தில் எரியும் இயேசு என்னும் தீ!
இயேசு பற்ற வைத்த தீ நம் அனைவருடைய உள்ளங்களிலும் இருக்கிறது. சில நேரங்களில் அது கொழுந்துவிட்டு எரிகிறது. சில நேரங்களில் இப்போவோ அப்போவா என காற்றில் ஆடுகிற சிம்னி விளக்குத் திரி நெருப்பு போல எரிகிறது. சில நேரங்களில் காட்டுத் தீ போல மற்றவர்களைப் பற்றிக்கொள்கிறது. சில நேரங்களில் மற்றவர்கள் நம்மேல் தெளிக்கும் தண்ணீரால் அணைந்து போகிறது. இறைவன் என்னும் ஸ்பார்க் இன்று நம் உள்ளத்தில் இருக்கிறதா? புனிதர்கள், மறைசாட்சியர், மறைப்பணியாளர்கள் வாழ்வைப் பார்க்கும்போது அவர்கள் உள்ளத்தில் பற்றியெரிந்த ஸ்பார்க் நமக்கு வியப்பாக இருக்கிறது. ஆன்மிக வாழ்வுக்கு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வுக்கும் ஸ்பார்க் தேவைப்படுகிறது.
(ஆ) நாம் பெற்ற திருமுழுக்கு!
தாம் பெற வேண்டிய திருமுழுக்கை நினைவில் கொண்டிருக்கிறார் இயேசு. நாமும் நாம் பெற்ற திருமுழுக்கை அல்ல, பெற வேண்டிய திருமுழுக்கை – அதாவது மீண்டும் இயேசுவோடு இறந்து உயிர்க்கும் திருமுழுக்கை – மனத்தில் கொண்டு வாழ வேண்டும். நாம் ஏற்கெனவே பெற்ற திருமுழுக்கின் அருள் இரண்டாவது திருமுழுக்கை நோக்கி நம்மை நகர்த்த வேண்டும்.
(இ) ஏற்றுக்கொள்ள வேண்டிய பிளவு
இயேசுவை ஏற்றுக்கொள்தலும் அவருக்குப் பதிலிறுப்பு செய்தலும் ஒருவர் மற்றவரிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும். ஏனெனில், உலகின் தெரிவுகளும் இயேசுவின் தெரிவுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. பிளவு என்பது வளர்ச்சியின் தொடக்கம். தாயின் தொப்புள்கொடியிலிருந்து பிரிகிற குழந்தையே புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது. செல்களின் பிளவே உயிர் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. அணுப்பிளவே கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு ஆற்றலை உருவாக்குகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், எபேசு நகரத் திருஅவைக்கு அறிவுரை வழங்குகிற பவுல், ‘அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக!’ என எழுதுகிறார். நம் உள்ளத்தில் எழுகிற நெருப்பாக இருக்கிறார் தூய ஆவியார். இந்த நெருப்பின் வழியாகவே நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடிகிறது.
‘நம் உள்ளத்தில் பற்றி எரிகிற இயேசு என்னும் தீ, நம் திருமுழுக்கின் அழைப்பை நமக்கு நினைவுறுத்துவதோடு, நாம் எதிர்கொள்கிற பிளவுக்கும் காரணமாகிறது!’
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வில் அன்பு என்னும் நெருப்பு அணையாமல் காத்துக்கொள்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 233)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: