இன்றைய இறைமொழி
திங்கள், 27 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – திங்கள்
எபிரேயர் 9:15, 24-28. திருப்பாடல் 28. மாற்கு 3:22-30
தீய ஆவியும் தூய ஆவியும்
‘தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்’ என்று வானதூதர் முன்மொழிந்து மரியாவின் வயிற்றில் பிறந்தார் இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது … தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று குற்றம் சுமத்துகிறார்கள் மறைநூல் அறிஞர்கள். ‘பாகால் செபூப்’ என்னும் புறஇனத்துக் கடவுளே ‘பெயல்செபூல்’ என அழைக்கப்பட்டார். நாம் சாராத மற்ற சமயத்துக் கடவுளர்களை சாத்தான்கள் என்று சொல்வதும், நம்மைச் சாராத மற்றவர் ஒருவரை தீயவர் என்று சொல்வதும் மானிடர் வாழ்வில் காலங்காலமாக நடந்து வருகிறது.
மற்றவரைக் குற்றம் சுமத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் இதைவிட வேறு சொற்கள் தேவையில்லை.
தம்மேல் குற்றம் சாட்டப்பட்டவுன், ‘இல்லை! நான் தூய ஆவியால் பிறந்தவர்’ என்று எந்தவொரு விளக்கமும் அவர்களுக்குத் தரவில்லை. மாறாக, அவர்களைச் சிந்தனைக்கு அழைக்கிறார். ‘இடிந்துவிழும் வீடு,’ ‘கொள்ளையடிக்கப்படும் வீடு’ என்னும் சொல்லோவியங்கள் வழியாக, அவர்களைத் தன்னாய்வு செய்ய அழைக்கிறார். இயேசுவின் சமகாலத்து யூத சமயம் இடிந்துவிடும் வீடாக இருந்தது. ஏனெனில், சடங்குகளை மையப்படுத்தியதாகவும் பிறழ்வுகள் நிறைந்ததாகவும் இருந்தது. ‘கொள்ளையடிக்கப்படும் வீடு’ என்பது இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனம். உரோமையர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள். சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வாழ்வு சீர்குலைந்து இருந்தது.
இயேசு தம் சொற்களால் ஒரு புரட்சியை உருவாக்குகிறார்: ‘உங்கள் சமயம் இடிந்துபோன வீடாகவும், உங்கள் ஊர் கொள்ளையடிக்கப்பட்ட வீடாகவும் நிற்க, நீங்கள் என்மேல் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறீர்கள்!’
மேலும், தீய ஆவிமேல் ஆற்றல் உள்ளதால் தாம் தீய ஆவியைவிட வலிமை வாய்ந்தவர் என்று உரைக்கிறார்.
தம்மிடம் இருப்பது தீய ஆவி அல்ல, மாறாக, தூய ஆவியார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, ‘தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் எக்காலத்திலும் மன்னிப்பு பெற மாட்டார்’ என்று கூறுகிறார் இயேசு.
முதல் வாசகத்தில், இயேசுவை ‘புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர்’ என அழைக்கிறார். தலைமைக்குருக்களின் பணியில் பலிக்கும் குருவுக்கும் பீடத்துக்கும் இடையே தூரம் இருக்கிறது. ஆனால், இயேசுவில் அப்படி இல்லை. இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கக் தயாராக இருந்தார். தம்மைப் பலிகடா என்று அவர் நினைக்கவில்லை.
நாம் கற்கும் பாடங்கள் எவை?
(அ) நம்மை இந்த உலகம் பலிகடா என நினைத்தாலும், தீயவர் என்று முத்திரையிடப்பட்டாலும் நாம் யார் என்பதை நாம்தான் நிர்ணயம் செய்ய வேண்டும். இயேசுவைப் போல எந்த நிலையிலும் நம் வாழ்வை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
(ஆ) நம்மைவிட மற்றவர்கள் நன்றாக இருக்கும்போது, நன்றாகச் செயல்படும்போது அவர்களை நாம் சாத்தானாகக் கருதத் தேவையில்லை. சில நேரங்களில் நாம் இத்தகைய மனநிலை கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்வது நல்லது.
(இ) தனக்குத்தானே பிளவுபடும் வீடு இடிந்துவிடும் எனக் கற்பிக்கிறார் இயேசு. நம் அழிவு நமக்கு வெளியிலிருந்து அல்ல, மாறாக, நமக்கு உள்ளேயிருந்து நிகழ்வதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: