இன்றைய இறைமொழி
வெள்ளி, 21 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – வெள்ளி
தொடக்கநூல் 11:1-9. திருப்பாடல் 33. மாற்கு 8:34-9:1
துன்பம் ஏற்கும் சீடத்துவம்
‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கான விடை – ‘இயேசுவே மெசியா’ – தெரிந்தவுடன், மாற்கு நற்செய்தியின் வேகமும் கூர்மையும் கூடுகிறது. இயேசு எப்படிப்பட்ட மெசியா? என்னும் கேள்விக்கான விடையை இயேசுவே மொழிந்தார்: ‘துன்புறும் மெசியா.’ துன்புறும் மெசியாவைப் பின்பற்ற விரும்பும் எவரும் துன்பம் ஏற்க வேண்டும் என்பது இயேசு கற்பிக்கிற பாடமாக இருக்கிறது.
(அ) தன்னலம் விடுத்தல்
மனிதர்களாகிய நாம் இயல்பாகவே நம் விருப்பங்களை முன்நிறுத்தியே சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். நம் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்திக்கொள்வதையே விரும்புகிறோம். ஆனால், தன்னலம் விடுத்தல் அல்லது தன்மறுப்பு ஏற்றல் நிகழும்போது நாம் விடுதலை பெற்ற நபர்களாக அனைவரையும் உள்ளடக்கிச் சிந்திக்கத் தொடங்குகிறோம்.
(ஆ) சிலுவை ஏற்றல் அல்லது தூக்குதல்
ஒவ்வொரு பொழுதும் நாம் சிலுவை ஏற்கிறோம். சிறிது நேரத் தூக்கம் என்று உடல் சொல்லும்போது, ‘தூக்கம் போதும்!’ என நான் எழுவது சிலுவை சுமக்கும் அனுபவமே. துன்பத்தின் வழியாகவே வாழ்வின் மேன்மை வருகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்தல் வேண்டும்.
(இ) வாழ்வைக் காத்துக்கொள்தல்
உலகை அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சியால் நம் தனிப்பட்ட வாழ்வை ஆன்மாவை இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால், முதன்மையானதை முதன்மையானது எனக் கருதிப் போற்றுபவரே இறையாட்சியில் வெற்றியாளர்.
முதல் வாசகத்தில், மொழிகள் உருவான கதையாடலை வாசிக்கிறோம். ‘உலகம் உருவாதல்,’ ‘மானிடர் உருவாதல்,’ ‘மொழிகள் உருவாதல்’ என நகர்கிறது தொடக்க நூல். ஆண்டவராகிய கடவுள் மனிதக் குழுமத்தின் ஒன்றிப்பைக் கலைத்து அவர்களைப் பல இடங்களுக்கு இடம் பெயரச் செய்கிறார். ‘நமது பெயரை நிலைநாட்டுவோம்’ என்னும் அவர்களுடைய நோக்கம் கடவுளை உள்ளடக்காததாக இருக்கிறது.
நம் தன்னாய்வுக் கேள்வி ஒன்றே: சீடத்துவம் என்பது தொடர் வாழ்வியல் பயணம். நான் ஒவ்வொரு நாளும் இதில் வளர்ந்துகொண்டே செல்ல வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: