• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தூய்மையாக்கப்படும் கோவில். இன்றைய இறைமொழி. வெள்ளி, 22 நவம்பர் ’24.

Friday, November 22, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 22 நவம்பர் ’24
பொதுக்காலம் 33-ஆம் வாரம், வெள்ளி
புனித செசிலியா, நினைவு

திருவெளிப்பாடு 10:8-11. திருப்பாடல் 119. லூக்கா 19:45-48

 

தூய்மையாக்கப்படும் கோவில்

 

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரை நெருங்கி வருகின்ற இயேசு, அந்நகருக்காகக் கண்ணீர் வடிக்கின்றார். எருசலேம் நகரத்தின் மையம், தலைமை, உச்சம் என்று இருந்த கோவிலுக்குள் நுழைகின்ற இயேசு இன்று அதைத் தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் அவருடைய பாடுகளின் நிகழ்வுக்கு முன்னும், யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலும் நடப்பதாக எழுதுகிறார்கள். எருசலேம் கோவில் தலைமைக்குருவால் நிர்வகிக்கப்பட்ட காவலர்கள்கீழ் இருந்தது. அவ்வளவு எளிதாக இயேசு உள்ளே சென்று புரட்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலர் இந்நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வு என்று கருதுகின்றனர். அதாவது, மெசியாவின் வருகையின்போது கோவில் தூய்மையாக்கப்படும் என்பது எபிரேய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிறைவாக இயேசு கோவிலைத் தூய்மை செய்கிறார் என்றும், இயேசுவே மெசியா என்றும் முன்மொழிகின்றனர் நற்செய்தியாளர்கள்.

 

இன்னொரு பக்கம், இயேசுவின் காலத்தில் கோவில் அதிகாரத்தின், அடக்குமுறையின், நிர்வாகப் பிறழ்வுகளின், பேராசையின் உறைவிடமாக இருந்தது. கோவிலின் பெயரால் வெகுசன மக்கள்மீது வரி சுமத்தப்பட்டது. தலைமைக்குருவே கோவிலின் தலைவராக இருந்ததால், அரசியல்தளத்திலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில், ஆண்டவராகிய கடவுள் வாழும் தளம் என்றும், அவருடைய பெயர் அங்கே குடிகொள்கிறது என்றும் இஸ்ரயேல் மக்கள் நம்பியதால் கோவில் அவர்களுடைய உணர்வுகளில் பதிந்த ஒன்றாகவும் இருந்தது.

 

ஆகையால்தான், இயேசு கோவிலைத் தொட்டவுடன் அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைக்கிறார்கள். இறுதியில் இதையே ஒரு குற்றச்சாட்டாகவும் அவர்மேல் சுமத்துகிறார்கள்.

 

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு கோவிலுக்குள் நுழைந்து அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தோரை விரட்டியடிக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைத்தாலும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏனெனில், மக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

 

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

 

(அ) நோக்கப் பிறழ்வு

 

கோவில் இறைவேண்டலின் வீடாக இருக்க வேண்டிய நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நோக்கம் பிறழ்வுபட்டு, கள்வர் குகையாக, இருள் நிறைந்ததாக, பேராசையும் அநீதியும் நிறைந்த இடமாக மாறுகிறது. நாம் அனைவரும் ஆண்டவராகிய கடவுள் குடிகொள்ளும் கோவில் என்கிறார் பவுல். கோவில் என்னும் நம் உடலின் நோக்கம் இறைவன் குடிகொள்வது என்றால், அந்த நோக்கம் பிறழ்வுபடாமல் காக்கப்படுகிறதா?

 

(ஆ) போதனையும் போதகரும்

 

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார் என்று பதிவு செய்கின்றார் லூக்கா. இயேசுவின் போதனையைக் கேட்கின்ற மக்கள் அவரைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர், அதாவது, அவரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இயேசுவின் போதனைக்கும் அவருடைய வாழ்வுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இல்லை. இன்று நாம் இறைவார்த்தையைப் போதிக்கிறோம், அல்லது கேட்கிறோம். நம் வாழ்வில் முரண்கள் இருப்பது ஏன்?

 

(இ) அறச்சினம்

 

இரக்கம், மன்னிப்பு, பரிவு என்று இயேசு ஒரு பக்கம் போதித்தாலும், தவறுபவர்களை அவர் பொறுத்துக்கொண்டாலும், தவறுகளை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. அவருடைய அறச்சினம் நமக்கு வியப்பளிக்கிறது. தவறுகளோடு சமரசம் செய்துகொண்டு அவற்றைப் பொறுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தவறுகளைத் திருத்த முயற்சி செய்கின்றார். நான் என்னில் காணும் தவறுகளோடு சமரசம் செய்துகொள்கிறேனா? அல்லது திருத்த முயற்சி செய்கிறேனா?

 

இன்றைய முதல் வாசகத்தில், பிரிக்கப்பட்ட சுருளேட்டைத் தின்கிறார். வாயில் தேன் போல இனிக்கிற ஏடு, வயிற்றில் கசக்கிறது. அவர் மேற்கொள்ள வேண்டிய இறைவாக்குப் பணியை இது முன்னுரைக்கிறது.

 

புனித செசிலியா

 

(அ) நம்பிக்கைநிறை சான்று: செசிலியா தன் வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறார்.

 

(ஆ) வழிபாடும் வாழ்வும் இணைந்த பாடல்: தன் இசைத்திறமையால் திருவழிபாட்டை மேம்படுத்தியதுடன், வழிபாடும் வாழ்வும் ஒன்றே எனக் கருதினார்.

 

(இ) தியாகமும் பிறரன்பும்: இறையன்பையும் பிறரன்பையும் தன் இரண்டு கண்களாகப் பேணிய செசிலியா மறைசாட்சியம் தழுவினார்.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளின் சொற்களைக் கேட்டு அவரையே பற்றிக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 255).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: