இன்றைய இறைமொழி
புதன், 12 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 5-ஆம் வாரம் – புதன்
தொடக்கநூல் 2:4ஆ-9, 15-17. திருப்பாடல் 104. மாற்கு 7:14-23
தூய்மையின் திசை
பாத்திரங்கள் தூய்மையாக்குதல் பற்றித் தொடங்கிய விவாதம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. தூய்மையின் திசையை வரையறுக்கிறார் இயேசு. வெளியேயிருந்து உள்ளே வருபவை அல்ல, மாறாக, உள்ளேயிருந்து வெளியே செல்பவையே ஒருவரைத் தூய்மையாகவோ, தீட்டாகவோ மாற்றுகின்றன என்று சொல்லி தூய்மையின் திசையை வரையறுப்பதோடு உள்ளார்ந்த தூய்மைக்கும், நமக்கு உள்ளிருந்து வெளிவருபவை பற்றிய அக்கறைக்கும் நம்மை அழைக்கிறார்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் பாத்திரங்களையும் கைகளையும் காய்கறிகளையும் கழுவுவது வெளிப்புறத்திலிருந்து உள்ளே செல்லும் தீட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே. இவர்கள் இதைப் பற்றி அக்கறையாக இருந்துவிட்டு மனதிற்குள்ளேயே அழுக்குகளை – ஒப்பீடு, பொறாமை, கோபம், வன்மம், பேராசை போன்றவற்றை – வைத்திருந்தார்கள். அவற்றைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுவே அவர்களுடைய வெளிவேடம்.
ஆக, தூய்மை-தீட்டு பற்றிய தவறான கண்ணோட்டம், வெளிவேடம் ஆகியவை பரிசேயர்களின் பிரச்சினைகளாக இருந்தன.
இவற்றுக்கு மாறான ஒரு போதனையை இயேசு முன்மொழிகிறார்.
தூய்மை-தீட்டு என்பது அகம் சார்ந்தது என்று புரட்சி செய்கிற இயேசு, மனிதர்களுக்குள்ளே இருக்கிற அழுக்குகளை – பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு – அகற்றுவதற்கு அழைக்கிறார்.
மேலும், இந்த அழுக்குகளை அகற்றித் தூய்மையாக இருப்பவர், வெளிப்புறத்திலும் தூய்மையாக இருக்கிறார் என்பது இயேசுவின் போதனை.
இன்றைய முதல் வாசகத்தில் படைப்பு நிகழ்வின் இரண்டாம் கதையாடலின் முதற்பகுதியை வாசிக்கிறோம். மனிதனை களிமண்ணிலிருந்து உருவாக்குகிற ஆண்டவராகிய கடவுள் அவனைத் தோட்டத்தின் நடுவே குடியமர்த்துகிறார். நன்மை-தீமை என்னும் மரத்திலிருந்த கனியை விலக்கப்பட்ட கனியாக அறிவிக்கிறார்.
தூய்மை-தீட்டு என்னும் கருத்துரு, முதல் வாசகத்தில் ‘நன்மை-தீமை’ என்று மாறுகிறது.
‘நன்மை-தீமை’ என்னும் கருத்துருவை மையமாகக் கொண்டு வாழ்கிற நபர் மனத்தின் தீமைகளை அகற்றுகிறார்.
ஆண்டவராகிய கடவுள் தக்க காலத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு தருகிறார் எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 104).
இன்றைய நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) தூய்மை-தீட்டு பற்றிய சரியான பார்வை கொண்டிருத்தல். வெளிப்புறத் தூய்மையைவிட உள்ளார்ந்த தூய்மையை நாம் பெற்றுக்கொள்ள, தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
(ஆ) வெளிவேடம் அகற்றுதல். அதாவது, நமக்கு உள்ளேயே அழுக்குகளை வைத்துக்கொண்டு வெளியே தூய்மையானவராகக் காட்டிக்கொள்தல்.
(இ) நாம் செய்கிற அனைத்திலும் ‘நன்மை-தீமை’ பகுத்தாய்ந்து செயல்படுதல்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: